3263. வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.
உரை: பெருமை பெற்ற மாணிக்கவாசகப் பெருமானே, நின்னுடைய திரு வாசகத்தை உணர்வு ஒன்றிப் பாடும் போது, நல்ல கருப்பஞ் சாற்றினில் தேனும் பாலும் நன்கு பழுத்த தூய கனியின் சாறும் கலந்தது போல என் உடலிலும் உயிரிலும் கலந்து உமட்டி யுமிழாவாறு இனிப்பு மிகுகிறது. எ.று.
உலகிய லறிவொழுக்கத்தாலும் சிவஞானச் செம்பொருணிறைவாலும் உளதாகிய பெருமை, “வான்” எனப்படுகிறது. நான் - உணர்வு வடிவாகிய உயிர், படித்துணரும் உயிரும் படிக்கப்படும் திருவாசகப் பொருளும் வேறு வேறாகாமல் ஒன்றாய் இயைந்து பாடுவது “நான் கலந்து பாடுவது” என்று கூறப்படுகிறது. நற்கருப்பஞ் சாறு - நன்கு முற்றிய கரும்பின் இனிது வடிகட்டிய சாறு. செழுங் கனி - இனிய சாறு நிறைந்த கனி. சுவைக்கு இடமாதலின், சாறு, சுவை யெனப்பட்டது. ஊன் - உடம்பு. இனிப்புச் சுவை மிக்க வழித் தெவிட்டி யுமட்டுமாதலின், “உவட்டாமல்” என்கின்றார். உவட்டல் - உமட்டல் என வழங்கும். உமட்டுவது, சுவை வேறுபடுமாதலால் “உவட்டாமல் இனிப்பது” என உரைக்கின்றார். உவட்டாமை கூறியது, எத்தனை முறை படிக்கினும் திருவாசகம் இனிமை குறைவதின்மை வற்புறுத்தற்கு.
இதனால், திருவாசகத்தின் சொற் பொருட் சுவையைப் பருப்பொருட்சுவை காட்டித் தெரிவித்தவாறாம். (7)
|