3264.

    வருமொழிசெய் மாணிக்க வாசகநின் வாசகத்தில்
    ஒருமொழியே என்னையும்என் உடையனையும் ஒன்றுவித்துத்
    தருமொழியாம் என்னில்இனிச் சாதகமேன் சஞ்சலமேன்
    குருமொழியை விரும்பிஅயல் கூடுவதேன் கூறுதியே.

உரை:

     மெய்ம்மையே விளைகின்ற சொற்களைப் பேசும் மாணிக்கவாசகப் பெருமானே, உன்னுடைய திருவாசகத்தில் ஒருவாசகமே என்னையும் என்னை ஆளாக வுடைய சிவனையும் ஒன்றுவித் தருளும் உபதேச மொழியாகு மென்றால், சிவப் பேறு குறித்து வேறே சாதனங்களை நாட வேண்டா; அவை குறித்து வருந்த வேண்டா; ஞானாசிரியர் ஒருவரின் அருள் மொழியை விரும்பி வேறிடம் மக்கள் செல்வது ஏனோ? சொல்லுக. எ.று.

     சொல் நிகழ்ச்சிக்குப் பொருள் இடமாகலின், சொல் முன்னே வரப் பொருள் பின்னே வருதல் போல மெய்ம்மைப் பயன் பின் வர முன்னே வாசகம் வந்து நிற்கும் திறம் பற்றி “வருமொழிசெய் மாணிக்கவாசக” ரென ஓதுகின்றார். திருவாசகச் செஞ்சொற்களின்கண் ஒவ்வொன்றும் சிவயோகத்திற் கூட்டிச் சிவபோகம் நுகர்விக்கும் மாண்புடையதென்பார். “ஒரு மொழியே என்னையும் என் உடையனையும் ஒன்றுவித்துத் தரும் மொழியாம்” என வுரைக்கின்றார். ஒன்றுவித்தல் - சிவயோகம். யோகத்திற் பெறுவது சிவபோகம் என அறிக. “புகழ்ச்சியைக் கடந்த போகமே யோகத்தின் பொலிவே” (பிடித்த) எனத் திருவாசகம் தெரிவிப்பது காண்க. உடையன் - ஆளாக வுடைய தலைவன். Êசாதகம் - சிவயோக போகங்களைப் பெறற்கு வேண்டும் துணைக் காரணங்கள். சாதகங்கள், சாதனங்கள் மேற்று. சாதனம் - கருவி; கருவி கொண்டு சாதிப்பது சாதகம். ஈண்டுச் சாதனத்தைச் சாதகமென்றது உபசார வழக்கு. சாதனங்களின் பெறலருமை புலப்படுத்தற்குச் “சஞ்சலம் ஏன்?” என வினவுகின்றார். ஞானாசிரியரின் ஞான மொழி சாதனங்களிற் சிறப்புடைய தென்பது பற்றி, “குரு மொழியை விரும்பி அயல் கூடுவது ஏன்?” என்றும், அது கரும்பிருக்க இரும்பு கடிக்கும் பயனில் செயலாம் என்பார், “ஏன் கூறுதி” என்றும் உரைக்கின்றார்.

     இதனால் திருவாசகத்தின் ஞான மாட்சியை இயம்பியவாறாம்.

     (8)