3265. பெண்சுமந்த பாகப் பெருமான் ஒருமாமேல்
எண்சுமந்த சேவகன்போல் எய்தியதும் வைகைநதி
மண்சுமந்து நின்றதும்ஓர் மாறன் பிரம்படியால்
புண்சுமந்து கொண்டதும்நின் பொருட்டன்றோ புண்ணியனே.
உரை: உமாதேவியாகிய பெண்ணை ஒருபாகத்தே கொண்ட பெருமானாகிய சிவபிரான் ஒரு குதிரை மேல் கண்டார் கருதத்தக்க சேவகன் போல் உருக்கொண்டு எழுந்தருளியதும், வையை யாற்றுக் கரை யுடைப்பிற்காகத் தலையில் மண் சுமந்ததும், பாண்டி வேந்தன் ஒருவனால் மேனி யடிபட்டுப் புண்ணானதும், சிவபுண்ணியச் செல்வராகிய நின் பொருட்டாம் அன்றோ. எ.று.
பெண்ணினத்து ஒப்பற்ற தலையாதலால் உமாதேவியைப் “பெண்” ணெனச் சிறப்பிக்கின்றார். பெண்ணமர்ந்த மேனியனாயினும், பெருமை மிக்கவன் என்றற்குப் “பெருமான்” என்று புகழ்கின்றார். பெண்மைக் கூற்றைத் தன்னுள் மறைத்துக் கொண்டு குதிரை சேவகனாய்ப் போந்தமை கண்டவர் யாவன், எத்திறத்தன் என எண்ணத் தோன்றினமை பற்றி, “ஒரு மாமேல் எண் சுமந்த சேவகன் போல் எய்தியதும்” என இயம்புகின்றார். வையை என்ற பழம் பெயர் வைகை என இடைக்காலத்தில் மருவிற்று. பெருவெள்ளத்தால் வையைக் கரை யுடைந்தமையின், உடைப் படைத்தற்கு மண் பெய்து அடைக்குமாறு மதுரையார் ஒவ்வொருவர்க்கும் அரசு ஆணை யிட்டமையால் சிவன் கூலி யாளாய்ப் போந்து மண் கொட்டிய குறிப்பு விளங்க, “வைகை நதி மண் சுமந்து நின்றதும்” என இசைக்கின்றார். ஒருகால் மண் கொட்டாது நின்றமை கண்டு சினமுற்று வேந்தன் கைப்பிரம்பு கொண்டு மேனி புண்படச் சிவனை யடித்த குறிப்புப் பற்றி, “ஓர் மாறன் பிரம்படியால் புண் சுமந்து கொண்டதும்” என்று புகல்கின்றார். மாறன் - பாண்டியற்குரிய சிறப்புப் பெயர்களில் ஒன்று. வையை யாற்றுப் நீர்ப் பெருக்கு மாணிக்கவாசகர் பொருட்டு வந்ததெனப் புராணம் கூறுதலால் “நின் பொருட் டன்றோ” எனக் கேட்கின்றார். அன்றோ - ஆம் எனப் பொருள்படும் இரட்டை யெதிர்மறை. புண்ணியன், சிவ புண்ணியச் செல்வன். இப்பாட்டு, “பெண் சுமந்த பாகத்தின் பெம்மான் பெருந்துறை யான், விண் சுமந்த கீர்த்திவியன் மண்டலத் தீசன், கண் சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை, மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு புண் சுமந்த பொன் மேனி பாடுதுங் காண் அம்மானாய்” என்ற திருவாசகத்தையும், “மதுரை பெருநன் மாநகரிலிருந்து, குதிரைச் சேவகனாகிய கொள்கையும், ஆங்கது தன்னில் அடியவர்காகப் பாங்காய் மண் சுமந்தருளிய பரிசும்” (கீர்த்தி) என்ற அகவல் அடிகளையும் நினைப்பிக்கின்றது.
இதனால், மதுரையிற் சிவன் செய்த திருவிளையாட்டைக் குறிக்குமாற்றால் மாணிக்கவாசகரது மாண்பு தெரிவித்தவாறாம். (9)
|