3266.

    வாட்டமிலா மாணிக்க வாசகநின் வாசகத்தைக்
    கேட்டபொழு தங்கிருந்த கீழ்ப்பறவைச் சாதிகளும்
    வேட்டமுறும் பொல்லா விலங்குகளும் மெய்ஞ்ஞான
    நாட்டமுறு மென்னிலிங்கு நான்அடதல் வியப்பன்றே.

உரை:

     திருவருள் நலம். குறையாத மாணிக்கவாசகப் பெருமானே, நின்னுடைய திருவாசகத்தை ஓதக் கேட்ட பொழுது அவ்விடத்திருந்த கீழான பறவை யினங்களும், வேட்டையாடிக் கொல்லத் தக்க பொல்லாத மிருகங்களும் மெய்மைச் சிவஞான நாட்டம் கொள்ளும் என்றால், அவற்றின் வேறாகிய யான் அந்த நாட்டமுடையனாவது வியப்புத் தருவதாகாது, காண். எ.று.

     திருவருள் ஞானமாகிய செல்வக் குறைவில்லாதவர் என்பது பற்றி, “வாட்டமிலா மாணிக்கவாசகர்” எனப் பரவுகின்றார். வாசகம் - திருவாசகம். கீழ்ப் பறவையாயினும் செவி யுணர் வுடையவையாதலால், திருவாசகத்தை யோதுவோர் ஓதக் கேட்பது தோன்ற, “கேட்ட பொழுது” எனவும், ஓதுமிடத்திருந்த புள்ளினத்துள் கீழ் என விலக்கப் பட்ட புழு பூச்சிகளை மேய்ந்துண்ணும் பறவைகளைக் “கீழ்ப் பறவைச் சாதிகள்” எனவும் கூறுகின்றார். கொடுமைப் பண்பால் பிற வுயிரினங்கட்குத் தீங்கு செய்யும் புலி, சிங்கம் முதலிய விலங்கினத்தை, “வேட்டமுறும் பொல்லா விலங்குகள்” என வுரைக்கின்றார். கேள்வி ஞான மில்லாமையைப் புலப்படுத்த உம்மையாற் சிறப்பிக்கின்றார். பறவைகள் கீழ்மைத் தன்மையும், விலங்குகள் பொல்லாத் தன்மையும் நீங்கி யுய்தி நாடுகின்றன என்றற்கு “மெய்ஞ் ஞான நாட்டமுறும்” என நவில்கின்றார். மெஞ்ஞான நாட்டம், உண்மை யுணர்வு. பறவை யினத்தினும் விலங்கினத்தினும் உயர்ந்து மன வுணர்வால் மேம்பட்டவன் என்பது விளங்க, “நான்” என்ற சொல் இசைக்கின்றது. அன்றீற்று ஏகாரம் அசை நிலை.

     இதனால், திருவாசகம் பறவைகளையும், விலங்குகளையும் நல்வழிச் செலுத்தும் நயமுடைய தென நவின்றவாறாம்.

     (10)