எண
எண்சீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
3268. திருவிளங்கச் சிவயோகச் சித்தியெலாம் விளங்கச்
சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்
தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே
திருக்கூத்து விளங்கவொளி சிறந்ததிரு விளக்கே
உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியிது விளங்க
உலகமெலாம் விளங்கவருள் உதவுபெருந் தாயாம்
மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க
வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.
உரை: நலம் பொருந்திய சிவயோகத்தால்விளையும் சித்தி யெலாம் மேன்மைபெறவும், சிவஞானத்தால் உளதாகும் பெருநிலையிற் பெறப்படும் சிவானுபவம் எய்தவும் அகன்ற வீதிகளையுடைய தில்லை நகரின்கண் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் திருக்கூத்தாடி யருளும் சிறந்த ஞான வொளி திகழும் திருவிளக்காகும் சிவமே, மக்கட்கு உடலும் உயிரும் உணர்வும் நலம் பெருக. உலகுயிர்கள் யாவும் விளக்கமுறத் தனது திருவருளை உதவுகின்ற பெரிய தாயாகும் ஞான மணம் கமழும் கூந்தலையுடைய சிவகாமவல்லி, திருமேனியில் ஒருகூறாக மகிழ்வுடன் அமர்ந்தருள ஒளிரும், மணி யிழைத்த அம்பலத்தின்கண் காட்சி தந்தருளும் சிவக் கொழுந்தாகிய பெருமானே, மன மொழி மெய்களால் வணங்குகிறேன். எ.று.
திரு - நலம் எனப் பொருள்படும். மங்கல மொழி. சிவ பரம் பொருளை நினைந்து செய்யும் யோக முயற்சியால் பெறப்படும் சித்திகள் பலவும் அடங்கச் “சிவயோகச் சித்தி யெலாம் விளங்க” எனக் கூறுகின்றார். சித்திகளை அணிமா, மகிமா, லகிமா, பிராத்தி, பிராகாமித்துவம், ஈசத்துவம், வசித்துவம், காம ரூபம் என எட்டாக வகுத்துரைப்பர். இவற்றின் விரிவைப் பெருந்திரட்டு முதலிய நூல்களிற் காண்க. திருமூலர் முதலிய முன்னைச் சான்றோர் பெற்றிருந்தனரெனப் புராணம் கூறுகிறது. இவ்யோக நெறியை விடுத்துப் பத்தி ஞான நெறி மேற்கொண்டு சிவம் பெற முயலும் நிலை “சிவஞான நிலை” எனவும், அதனாற் பெறலாவது சிவஞானானந்தம் என்றற்குச் “சிவானுபவம்” எனவும் தெரிவிக்கின்றார். அகன்ற மாட வீதிகளை யுடையதாதலால், “தெருவிளங்கு திருத்தில்லை” என்றும், அந்நகர்க்குத் திருவாம் சிறப்பு நல்குவது அம்பலமாகலின், “திருச்சிற்றம்பலம்” என்றும், அதன்கண் நின்று சிவன் திருக்கூத்தாடுதலால், “திருக்கூத்து” என்றும் கூறுகின்றார். அகளமாய்ப் பரவெளியில் ஞான நடம் புரியும் பரசிவத்துக்குச் சிவனாய்ச் சகளமாய் நின்றாடும் அம்பலம் சிறிதாதலின், “சிற்றம்பலம்” எனவும், சிறிதாயினும் மக்களுலகுக்குப் பெரிதாய்க் கண்டு பணிபவர்க்கும் சிந்தித்தொழுகுபவர்க்கும் வேண்டப்படும் நலம் யாவும் எஞ்சாது அளிக்கும் ஏற்றமுடையதென்பாராய், “திருச்சிற்றம்பலம்” எனவும் இனிதுரைக்கின்றார். ஞான நாடகம், ஊன நாடகம் என்ற இருவகைக் கூத்தும் விளங்கத் “திருக்கூத்து விளங்க” எனவும், சிவவொளி திகழ்ந்து காண்பார் கண்ணும் மனமும் அறிவும் ஞான விளக்கம் பெறுவிக்கின்றமை தோன்ற, “சிறந்த திருவிளக்கே” எனத் தெரிவிக்கின்றார். உரு - ஈண்டு உடல் மேற்று. உயிர்க்கு இடம் உருவும், உணர்வுக்கு இடம் உயிருமாதலின், “உருவிளங்க உயிர் விளங்க உணர்ச்சியது விளங்க” என முறை செய்து மொழிகின்றார். உயிர்த் தொகைகள் உய்தி பெற வாழுமிடமாதலால், உலக மெலாம் விளங்க” எனவும், உயிர்கட்கு உலகுடல் நுகர்ச்சிகளை நல்குவது திருவருளாதலால், “அருளுதவு பெருந்தாயாம் சிவகாமவல்லி” எனவும் இசைக்கின்றார். பராசத்தி யாதலால் “பெருந்தாய்” என்று போற்றுகின்றார். ஞானப் பூங்கோதை எனச் சான்றோர் புகழ்தல் பற்றி ஞான மணம் கொள்ளப்பட்டது. வல்லி - சிவகாமவல்லி; தில்லையில் அம்பிகைக்குப் பெயர். இருவரும் தில்லையம்பலத்தின்கண் காட்சி தருதலால், “வல்லி ஒருபால் விளங்கப் பொது விளங்க வளர்ந்த சிவக் கொழுந்தே” என வுரைக்கின்றார்.
இதனால், தில்லையம்பலத் திருக்கூத்து யோக நெறிப் பயனும் ஞான நெறிப் பயனும் உயிர்கள் இனிதெய்த நிகழ்கிற தெனத் தெரிவித்தவாறாம். (2)
|