எ
எழுசீர்க் கழிநெடிலடி
ஆசிரிய விருத்தம்
3269. அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிரொளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் அமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே.
உரை: அன்பெனப்படும் கைப்பிடியின் அகத்துள் அடங்கும் அன்பெனப்படும் குடிசைக்குள் புகுந்துறையும் அரசரும், எனப்படும் வலையிற் சிக்கும் மேலான பரம்பொருளும், அன்பு எனப்படும் கைக்கிண்ணத்தில் அடங்கும் அமுதமும், அன்பு எனப்படும் ஒடுங்கும் கடலும், அன்பாகிய உயிரின்கண் விளங்குகிற வொளியும், அன்பாகிய அணுவுக்குள் ஒடுங்கும் பேரொளியும், யுருவாகிய பரசிவமாகும். எ.று.
“அன்பே சிவம்” என்று சான்றோர் கூறுதலால் “அன்புருவாம்” என மொழிகின்றார். தத்துவ வுலகில் வழங்கும் சிவமூர்த்தங்கள் மேலாய சிவத்தைப் பரசிவம் என்கின்றனர். திண்மையும் வலமையுமுற்று மலை போல் ஓங்கி யுயர்ந்ததாயினும், அன்புக்கு ஒரு கைப்பிடிக்குள் அடங்குமளவிற் சுருங்கி இன்புறுத்துவதென்பார், “அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே” என்று கூறுகின்றார். அரசர்க்கெல்லாம் ஒப்பற்ற தனி பேரரசாய்ப் பெருமனைக்குட் பெரியவனாயினும், அன்பர் அன்பாகிய எளிய சிறிய குடிசையுள்ளும் புகுந்து மகிழும் எளிமை யியல்பினன் என்றற்கு, “அன்பெனும் குடில் புகும் அரசே” என்று உரைக்கின்றார். எத்தகைய வலைக்கும் அகப்படாத பெரும் பரம்பொருளாக இருப்பினும் அன்பென்னும் மெல்லிய வலைக்குள் எளிதிலகப்படுவன் என்றற்கு “அன்பெனும் வலைக்குட்படு பரம்பொருள்” என மொழிகின்றார். யாதொன்றினுள்ளும் அடங்குதலில்லாத பேரமுதமாய் இலங்குவனாயினும் அன்பர் அன்புக் கையில் இனிதினமர்வன் என்றும், பரமாந் தன்மையால் அளப்பருங் கடலாக விளங்கினும், அன்பாகிய சிறு குடத்துள் அடங்கி இன்புறுத்துவனென்றும் இயம்புகின்றார். அன்பு செய்யும் உயிர்க்கு உணர்வொளியாகவும், சிறுமையால் அணுத் தன்மையுறும் ஆன்மாவுக்குள் ஆன்ம சிற்சத்தியாய் அமைந்து ஞான வொளி நல்குவதாகவும் விளங்கும் இயல்பை, “அன்பெனும் உயிர் ஒளிர் அறிவே” எனவும், “அன்பெனும் அணுவுள் அமைந்த பேரொளியே” எனவும் இசைக்கின்றார்.
இதனால், பரசிவத்தின் அன்புக்கு எளிதாம் தன்மை விளக்கப்பட்டவாறாம். (3)
|