2. திருச்சிற்றம்பலத் தெய்வமணி மாலை

    அஃதாவது தில்லைத் திருச்சிற்றம்பலத்தில் கூத்தப் பிரானாக எழுந்தருளும் சிவமூர்த்தம் பரசிவம் என்பதை விளக்கம் செய்யும் தூய சொற்பொருள்களாலான மாலை. கடைந்து தூய்மை செய்யப்பட்ட மணிமாலை போல வழுக் களைந்து தூயதாக்கிய சொல்மாலை என்றற்கு 'மணிமாலை' எனப்படுகிறது இதன்கண் பரம்பொருளின் பொதுவும் சிறப்புமாகிய இயல்புகள் ஞான நூல் கூறும் நெறி பிறழாமல் எடுத்தோதுகின்றார்.

எழுச்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

3270.

     அகரநிலை விளங்குசத்தர் அனைவருக்கும் அவர்பால்
          அமர்ந்தசத்தி மாரவர்கள் அனைவருக்கும் அவரால்
     பகரவரும் அண்டவகை யனைத்தினுக்கும் பிண்டப்
          பகுதிகளங் கனைத்தினுக்கும் பதங்களனைத் தினுக்கும்
     இகரமுறு முயிர்எவைக்கும் கருவிகளங் கெவைக்கும்
          எப்பொருட்கும் அனுபவங்கள் எவைக்கும்முத்தி யெவைக்கும்
     சிகரமுதற் சித்திவகை யெவைக்கும்ஒளி வழங்கும்
          திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

உரை:

     உயர்நிலையில் திகழ்கின்ற சத்திமான்கள் எல்லார்க்கும், அவர்களிடமிருக்கும் சத்திகள் எல்லார்க்கும், அச்சத்திகளால் தோற்றுவிக்க வுண்டாகிய அண்டப் பகுதி யனைத்துக்கும், அவற்றுள் அடங்கிய அண்டப் பகுதிகள் அனைத்துக்கும், இந்திரன் முதலிய தேவர்களுறையும் அண்டங்கள் எல்லாவற்றிற்கும் இம்மண்ணுலகத்து உயிர் வகை யனைத்துக்கும் அவ்வவற்றிற் கமைந்த உடல் கருவி கரணங்கள் அனைத்துக்கும், பொருள் வகை யனைத்துக்கும் அவற்றால் நுகரப்படும் நுகர்ச்சி வகை பலவற்றிற்கும், முடிவிற் பெறலாகும் முத்தி வகை பலவற்றிற்கும் மேன்மை யுற்ற சித்தி வகைகள் யாவற்றிற்கும் ஒளியும் பயனும் நல்குவது தில்லைச் சிற்றம்பலத்திற் காட்சி தந்தருளும் தெய்வம் ஒன்றே அறிவீர்களாக. எ.று.

     அகரம் - உயர்ந்த விடம். சத்தர் - சத்திகளோடு கூடி யிருப்பவர்; அவர்களைச் சத்திமான்கள் என்பதும் உண்டு. பிரமன், திருமால், உருத்திரன் முதலிய சத்திமான்களுக்குச் சரசுவதி, இலக்குமி, உருத்திரை முதலியோர் சத்திகளாவர். இச்சத்தி வகைகளின் விரிவைச் சிவஞான இரண்டாம் சூத்திரத்து நான்கா மதிகரண வுரையிற் காண்க. சத்திகளால் உள்ள அண்டங்கள் எண்ணிறந்தன; “அண்டப்பகுதியின் உண்டைப் பிறக்கம், அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி, ஒன்றனுக் கொன்று நின்றெழில் பகரின், நூற்றொரு கோடியில் மேற்பட விரிந்தன” (அண்ட) எனத் திருவாசகம் ஓதுவதறிக. இவ்வண்டங்கள் தோறும் உருவுடையவும் இல்லனவும் எனவும், இயங்கு திணையும் நிலைத்திணையும் எனப் பகுக்கப்படும் பொருள்கள் யாவும் பிண்டமாதலின், “பிண்டப் பகுதிகள் அனைத்தினுக்கும்” எனக் கூறுகின்றார். அண்டம் பெரியது; பிண்டம் அதனுள் அடங்கும் சிறியது. பதங்கள், இந்திர பதம், பிரம பதம், வைகுந்த பதம், கயிலாய பதம் எனப் பலவாம். இகரம் - கீழிடம்; மண்ணுலக முதலாக வுள்ள உலகங்களில் உள்ள உயிர் வகைகளை “இகர முறும் உயிர்” என்று குறிக்கின்றார். உயிர் வாழ்தற்கு உலகும் உடலும் உடலின் உள்ளுறு மன முதலிய கருவிகளும் கருவிகளாம். கருவி கரணங்களால் நுகர்வது அனுபவம்.

     இதனால் அண்ட பிண்ட வகை அனைத்தினுக்கும், பத வகையாவற்றிற்கும் உயிர்த் தொகை யெல்லாம் பெறும் அனுபவங்கட்கும் முதல் தெய்வம் திருச்சிற்றம்பலத்துக் கூத்தப் பெருமான் எனக் காட்டியவாறாம்.

     (1)