3273.

     இடம்பெறுமிந் திரியஇன்பம் கரணஇன்பம் உலக
          இன்பமுயிர் இன்பமுதல் எய்துமின்ப மாகித்
     தடம்பெறுமோ ரான்மவின்பம் தனித்த வறிவின்பம்
          சத்தியப்பே ரின்பமுத்தி யின்பமுமாய் அதன்மேல்
     நடம்பெறுமெய்ப் பொருளின்பம் நிரதிசய இன்பம்
          ஞானசித்திப் பெரும்போக நாட்டரசின் பமுமாய்த்
     திடம்பெறவோங் கியவியற்கைத் தனியின்ப மயமாம்
          திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வமொன்றே கண்டீர்.

உரை:

     உடம்பிடமாகப் பெறப்படும் இந்திரிய வின்பம், கரணவின்பம், உலகிய லின்பம், உயிருணர் வின்பம் முதலாகப் பெறப்படும் தூல வின்பமாகியும், இவற்றினும் பெருமை பெறும் ஆன்ம வின்பம், தனி ஞான வின்பம், சத்திய வின்பம், முத்தியின்பம் என ஆகியும், அதனின் மேலதாகிய கூத்தப் பிரானுடைய கூத்தின்பம், மெய்ப்பொருள் இன்பம், நிரதிசய வின்பம் எனவும், மெய்ம்மை ஞானம் கைவருதலால் உளதாகும் பெரிய சிவபோக நாட்டில் நுகரும் அரசின்பம் எனவும், திடம் பெற்ற உயர்ந்த இயற்கைத் தனி யின்ப மயமாய் விளங்கும் திருச்சிற்றம்பலத்தில் எழுந்தருளும் தெய்வம் ஒன்றே, பல வல்ல, காண்பீர்களாக. எ.று.

     கண் காது முதலிய இந்திரியக் காட்சிகளால் எய்தப்படுவது இந்திரிய வின்பம். மனம் சித்தம் முதலிய அந்தக் கரணங்களால் புத்திக்கண் நுகரலாகும் மானதக் காட்சி யின்பம், கரண வின்பமாகும். உலகியலின்பமாவது, நில முதலிய பூதங்களும் அவற்றின் பௌதிகங்களும் தரும் வாழ்கை யின்பமாகும். கருவி கரணங்களாலும் உலகியற் போகப் பொருள்களாலும் பெறப்படும் தன் வேதனைக் காட்சியின்பம் உயிர் இன்பம் எனப்படுகிறது. இவை தூல வுடல் வாயிலாக நுகரப்படுவது பற்றித் தூலவின்பம் எனப்படுகிறது. பெருமைப் பொருள் தரும் தடவென்னும் சொல் தடம் என ஈற்றில் மகரவொற்றுப் பெற்றது. தூலம் பொருளோடு கலவாமல் உள்ளம் இடமாக நின்று உணர்வு வாயிலாக உயிர் பெறும் இன்பம் ஆன்ம வின்பம் எனப்படுகிறது. உணர்வுருவாகிய உயிரை ஆன்மா என்பது உபநிடத வழக்கு. தனித்த சிந்தனைக்கண் உயிர் பெறும் இன்பம் “தனித்த அறிவின்பமாகும்” உள்ளதன் உண்மை காணும் காட்சியில் நுகரப்படும், உண்மை யின்பம், “சத்தியப் பேரின்பம்” எனப்படுகிறது. பொய்யாக் கழியும் இன்பங்களின் வேறாய், உண்மை நிலைக் களமாக எய்துதலால், “சத்தியப் பேரின்பம்” என வுரைக்கின்றார். கருவி கரணம் கடந்து, ஆன்ம போதம் கடந்து, திருவருளின்ப நிலையிற் பெறுவது முத்தி யின்பமாகும். இவ்வின்பமே மெய்ம்மை ஞான வின்பம் என்றும், ஒப்புயர் வற்றது என்றற்கு “நிரதிசய இன்ப” மென்றும் வழங்கும். இதுவே பத்தி ஞான நெறிக்கண் நிற்பவர் அதன் பயனாக எய்தும் சிவபதப் பேரின்பத்தை “ஞான சித்திப் பெரும் போக நாட்டு அரசின்பம்” என்று புகழ்கின்றார். இதனைத் திருநின்ற செம்மைப் போகம் எனவும், சிவபதப் போகானுபவம் எனவும் சான்றோர் பலவேறு வாய்பாடுகளாற் கூறுவர்.

     இதனால், கருவி கரணங்களோடு கலந்து பெறும் இன்ப வகையும், கலவாது உள்ளம் துணையாகப் பெறும் இன்ப வகையும் முத்தி யின்ப வகையும் யாவும் சிற்றம்பலக் கூத்தாடும் தெய்வத்தின் பரியாய மெனத் தெரிவித்தவாறாம்.

     (4)