3274. எல்லாந்தா னுடையதுவாய் எல்லாம்வல் லதுவாய்
எல்லாம்தா னானதுவாய் எல்லாம்தா னலதாய்
சொல்லாலும் பொருளாலும் தோன்றுமறி வாலும்
துணிந்தளக்க முடியாதாய் துரியவெளி கடந்த
வல்லாளர் அனுபவத்தே யதுவதுவாய் அவரும்
மதித்திடுங்கால் அரியதுவாய் பெரிதுவாய் அணுவும்
செல்லாத நிலைகளிலும் செல்லுவதாய் விளங்கும்
திருச்சிற்றம் பலந்தனிலே தெய்வ மொன்றே கண்டீர்.
உரை: உலகுகளும் அவற்றின் உள்ளுறு பொருள்களுமாகிய எல்லாவற்றையும் தனதாக வுடையதும், எல்லாச் செயல்களையும் புரியவல்லதும், எல்லாப் பொருளும் தானாவதும் அல்லதாவதுமான பரம்பொருள், சொல்லளவைகளாலும் பொருளளவைகளாலும், அவற்றைக் கொண்டறியும் அறிவாலும் இத்தன்மைத் தென்று அளந்து துணியக் கூடாததாய், துரியத்தானத்துக் கப்பாலதாகிய துரியா தீதக் காட்சி வல்ல பெருமக்களின் அதுவதுவாய் அனுபவிக்கப் படுவதாய், அவருடைய மதிப்பீட்டுக்கும் அடங்காத பெருமை யுடையதாய், அணுப் புதைக்கவும் மாட்டாத இடங்களிலும் சென்றிவைவதாய் விளங்குகிறது; அதுவே தான் திருசிற்றம்பலத்தே சகளீகரித்தருளும் தெய்வமாகும்; அஃது ஒன்றே, பல வல்ல எனத் தெளிமின். எ.று.
உலகங்களையும் அவற்றின் உள்ளுறு பொருள்களையும் யாவையும் படைத் தளிக்கும் முதல்வனாதலால், “எல்லாம் தான் உடையது” என்றும் முதல்வனாகிய பரம்பொருள் வரம்பில்லாத ஆற்றலுடையதாகலின், “எல்லாம் வல்லது” என்றும், தான் படைத்தவை அனைத்தையும் தன்னில் வேறாகாது தானேயாகக் கலந்து நிற்பது புலப்பட, “எல்லாம் தான் ஆனதுவாய்” என்றும், கலவாது வேறாய் நின்று தற்பரமாய் நிற்பதுண்மை விளக்குதற்கு, “எல்லாம் தானலதாய்” என்றும் எடுத்துரைக்கின்றார். இது “ஒன்றாய் வேறாய உடனானான்” என்ற மெய்ம் மொழிக்கு விளக்கம் தருவது காண்க. சொல்லால் அளத்தலாவது சாத்திர தோத்திர நூலுரைகளால் உண்மை காண்பது; காட்சி யனுமானங்களால் உண்மை துணிவது பொருளால் அளத்தலாகும். ஏது எடுத்துக்களால் எண்ணித் துணிவது. “ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் சோதிக்க வேண்டா” எனத் திருஞான சம்பந்தர் உரைப்பது காண்க. அளவைகளால் துணியும் அறிவு செயற்கையாதலால், தன்னியல்பில் விளங்கும் இயற்கையறிவைத் “தோன்றும் அறிவு” எனச் சொல்லுகின்றார். “துணிந்தளக்க முடியாதாய்” என்பது, “அளவியை யார்க்கும் அறிவரியோன்” (திருக்கோ) என்பதற்கு விளக்கமாகும். துரிய வெளி கடந்தது, துரியாதீதம். சாக்கிரத்தே அதீதத்தைப் புரியும் சான்றோர்களைத் “தூரிய வெளி கடந்த வள்ளலாளர்” என்று சிறப்பிக்கின்றார். “பொற்புறு கருவி யாவும் புணராமே யறிவிலாமல், சொற் பெறும் அதீதம் வந்து தோன்றாமே தோன்றி நின்ற, சிற்பரமதனால் உள்ளச் “செயலறுத்திட விதிக்கும், தற்பரமாகி நிற்றல் சாக்கிரா தீதம்” எனச் சிவப்பிரகாசம் சொல்லுவதறிக. அவ்வல்லாளர்க்குக் காணப்படுவன யாவும் சிவமாய் விளங்குதலால், “அதுவதுவாய்” என்று கூறுகின்றார். சிவமாகிய தன்மையால் அறிவிற் பெரியாராயினும் அவரது அறிவெல்லையைக் கடந்து போவதுணர்த்த “அவரும் மதித்திடுங்கால் அரியதுவாய்ப் பெரியதுவாய்” எனவும், எங்கும் எவற்றினும் நீக்கமற நிறைந்திருக்கும் நீர்மை காட்டற்கு, “அணுவும் செல்லாத நிலைகளினும் செல்லுவதாய்” எனவும் இசைக்கின்றார்.
இதனாற் பரம்பொருளின் பரமாம் தன்மை விளக்கியவாறாம். (5)
|