3275. அயர்வறு பேரறிவாகி அவ்வறிவுக் கறிவாய்
அறிவறிவுள் ளறிவாய்ஆங் கதனுள் ஓரறிவாய்
மயர்வறுமோ ரியற்கையுண்மைத் தனியறிவாய்ச் செயற்கை
மன்னுமறி வனைத்தினுக்கும் வயங்கியதா ரகமாய்
துயரறுதா ரகமுதலாய் அம்முதற்கோர் முதலாய்
துரியநிலை கடந்ததன்மேல் சுத்தசிவ நிலையாய்
உயர்வுறுசிற் றம்பலத்தே எல்லாம்தா மாகி
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
உரை: சோர்வில்லாத பேரறிவாய், அவ்வறிவுக்கும் நுண்ணிய அறிவாய், அந்த நுண்ணறிவுக்குள் அறிவதறியும், அறிவாய், அவ்வறிவினுள்ளே நின்று காணும் மெய்ம்மை யறிவாய், மயக்க மில்லாத ஒப்பற்ற இயற்கைத் தனி யுண்மை யறிவாயும், உடல் கருவி கரணங்களாற் பெறலாகும் செயற்கை யறிவு வகை யாவற்றிற்கும் தாரகமாயும், துன்பமற்ற அத் தாரகத்துக்கு மூல முதலாயும், அம் முதலுக்கு முதலாயும், துரிய நிலைக்கு அப்பால் விளங்கும் சுத்த சிவநிலையாயும் எழுந்தருளும் உயர்வுடைய திருச்சிற்றம்பலத்தின்கண் எல்லாம் தானாக ஓங்கி யுயரும் தனிக் கடவுளாகிய ஒரு பெரும் பொருள் உண்டெனத் தெளிமின். எ.று.
அறிதற்கண் அயர்ச்சி யுறுவது பேரறிவாகாதலின், “அயர்வறு பேரறிவாகி” எனக் கூறுகிறார். பேரறிவைப் பெருகுவிக்கும் அறிவு, “அவ்வறிவுக்கறிவு” எனப்படுகிறது. அதன் உள்ளீடாகி அறிவறியுமது “அறிவறி யுள்ளறிவாம்”; அதன்கண் உறுவதோர் அறிவுண்டென்பதற்கு “ஆங்கதனுள் ளோர் அறிவு” என அறிவிக்கின்றார். அறிவு நுண்ணியதாகிய போது மயக்கம் கெட்டழிதலின், “மயர்வறும் இயற்கை யறிவு” என்கின்றார். இயற்கை யறிவை நுண்ணிய மதி எனச் சான்றோர் குறிப்பர். “மதி நுட்பம் நூலோடுடையார்” (குறள்) என்பது காண்க. இயற்கை யறிவை இயல்விக்கும் திருவருளுண்மை யறிவை, “இயற்கை யுண்மைத் தனியறிவு” என வுரைக்கின்றார். நூல்களாலும் பயில்வாலும் உளதாகும் செயற்கை யறிவு இயற்கையறிவின் திட்ப நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்க முறுதலால், “செயற்கை மண்ணும் அறிவனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய்” எனச் சான்றோர் மொழிகின்றார். வயங்குதல் - விளங்குதல். தாரகம் - ஆதாரம். தாராகமாகிய இயற்கையறிவுக்கு முதல் திருவருளும் அதற்கு முதல் ஞானமாகிய சிவமுமாதல் தோன்ற, “துயரறு தாரக முதலாய்” அம் முதற்கோர் முதலாய்” என வுரைக்கின்றார். அஃதாவது இன்னதென விளக்குதற் பொருட்டு, “துரியநிலை கடந்ததன் மேற் சுத்த சிவ நிலை” என்று சொல்லுகின்றார். திருவருள் ஞானம் இருளகற்றி இன்பம் தருவதாதலால் “துயரறு தாரகம்” என்று சிறப்பிக்கின்றார்.
இதனால் திருவருள் ஞானாதாரம் சிவபரம் பொருளாகிச் சிற்றம்பலத்தெழுந்தருளும் கடவுள் எனக் காட்டிய வாறாம். (6)
|