3276.

     அண்டமெலாம் பிண்டமெலாம் உயிர்களெலாம் பொருள்கள்
          ஆனவெலாம் இடங்களெலாம் நீக்கமற நிறைந்தே
     கொண்டவெலாம் கொண்டவெலாம் கொண்டுகொண்டு மேலும்
          கொள்வதற்கே இடம்கொடுத்துக் கொண்டுசலிப் பின்றிக்
     கண்டமெலாம் கடந்துநின்றே அகண்டமதா யதுவும்
          கடந்தவெளி யாயதுவும் கடந்ததனி வெளியாம்
     ஒண்தகுசிற் றம்பலத்தே எல்லாம்வல் லவராய்
          ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.

உரை:

     அண்டங்களினும் பிண்டங்களினும் அவற்றுள் வாழும் உயிர்களினும் இடங்களிலும் ஆக எல்லாவற்றினும் நீக்கமற நிறைந்து, அந்நிறைவுக்குள் கொண்டன எல்லாம் எஞ்சாமற் கொண்டு மேலும் உளவாயின் அவற்றையும் தன்னுள் அடக்கிக் கொண்டு மேன்மேலும் எய்துவ யாவற்றிற்கும் இடம் கொடுத்துக் கொண்டு திரிபு சிறிதுமின்றிக் கண்டம் பலவும் கடந்து அகண்டமாய், அதுவும் கடந்த வெளியாய், அதற்கப்பாலதான தனிப் பரவெளியாய், ஒள்ளிய திருச்சிற்றம்பலத்தின் கண்ணேஎல்லாம் வல்ல பெருமானாய் ஓங்கி யுயர்கின்ற தனிக் கடவுள் அசிவம் ஒன்றே என்றென அறிமின். எ.று.

     மிகப் பெரியதை அண்ட மெனவும், சிறியதைப் பிண்ட மெனவும் கூறுவது மரபு. பிண்டங்கள் எண்ணிறந்தன கொண்டது அண்டம். ஆயிரத் தெட்டு அண்டங்களெனப் புராணிகர் கூறுவர். இந்தப் பிண்டங்களிலும் அண்டங்களிலும் எண்ணிறந்த உயிர்கள் வாழ்தலால் அண்ட பிண்டங்களைக் கூறினவர், “உயிர்களெலாம்” என்றும், அவ்வுயிர்கட்குப் போக போக்கியங்களாவதால் “பொருள்களான வெலாம்” என்றும் புகல்கின்றார். நீக்கமற நிறைதலைக் குறைவிலா நிறைவு என்பர். நிறைவு ஓர் அளவில் நில்லாது தன்கண் நிறைவன அனைத்தையும் நிறைவித்து மேன் மேலும் வருவனவற்றையும் விகாரமின்றி நிறைத்துக் கொள்வது புலப்பட, “கொண்ட வெலாம் கொண்ட வெலாம் கொண்டு கொண்டு மேலும் கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றி” எனவுரைக்கின்றார். மிகை படுவதால் வீங்கிப் பிதிர்வ தன்றென்றற்குச் “சலிப்பின்றி” எனச் சிறப்பிக்கின்றார். சலிப்பு - விகாரம் எனவும், திரிபு எனவும் கூறப்படும். கண்டம் - ஓர் அளவுக்கு அகப்படுவது; அகப்படாமல் விரிவது அகண்டம். அவ்விரிவுக்கு அப்பாலது “அதுவும் கடந்த வெளி”யாம். அதனைக் கடந்தது பரசிவ வெளியாமாதலின், அதனை “அதுவும் கடந்த தனி வெளி” எனக் கூறுகின்றார். தனி வெளியான பரசிவ வெளி சிதாகாசமாதல் பற்றித் “தனிவெளியாம் ஒண்டரு சிற்றம்பலம்” என வுரைக்கின்றார். அதன்கட் கூத்தப் பெருமானாய் எழுந்தருள்பவர், எல்லாம் வல்ல சிவபெருமானாதல் பற்றி “சிற்றம்பலத்தே எல்லாம் வல்லவராய் ஓங்குகின்ற தனிக் கடவுள்” என ஓதி உவகை யுறுகின்றார்.

     இதனால், சிவ பரம்பொருளின் வியாபகத்துவம் விளக்கப்படுமாறாம்.

     (7)