3277. பாரொடுநீர் கனல்காற்றா காயமெனும் பூதப்
பகுதிமுதல் பகர்நாதப் பகுதிவரை யான
ஏர்பெறுதத் துவவுருவாய்த் தத்துவகா ரணமாய்
இயம்பியகா ரணமுதலாய்க் காரணத்தின் முடிவாய்
நேருறுமம் முடிவனைத்தும் நிகழ்ந்திடுபூ ரணமாய்
நித்தியமாய்ச் சத்தியமாய் நிர்க்குணசிற் குணமாய்
ஓர்தருசன் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.
உரை: நிலம் முதல் நாத மீறாக எழில் பெற வமைந்த தத்துவங்களின் உருவாய், அவற்றிற்குக் காரணமான தன்மாத்திரையாய், அதற்கெல்லாம் மூல காரணமான மாயையின் வைப்பாகிய அருட் சத்தியாய், நேர்படப் பொருந்தும் அவை யாவும் ஒடுங்கும் பூரணமாய், நித்தப் பொருளாய், நிர்க்குணமாய், சிற்குணமாய் உணரப்படும் தற்பரமாகும் திருச்சிற்றம்பலத்தின்கண் உயர்ந்தோங்கும் ஒப்பற்ற சிவமாகிய கடவுள் ஒன்றே, பல வல்ல எனத் தெளிமின். எ.று.
பார் - நிலம். கனல் - நெருப்பு. நில முதலிய ஆன்ம தத்துவப் பகுதி. கலை முதல் வித்தியா தத்துவப் பகுதி, சுத்த வித்தை முதல் நாதமீறாகவுள்ள சிவ தத்துவப் பகுதி இத்தத்துவப் பகுதிகளும் சிவத்தின் திருவருட் செயலாதல் பற்றி, “பாரொடு நீர் கனல் காற்று ஆகாயப் பூதப் பகுதி முதல் பகர் நாதப் பகுதி வரையான ஏர் பெறு தத்துவ வுருவாய்” என்று விரித்துரைக்கின்றார். நில முதலாக நிற்கும் தத்துவங்கள் ஒன்றினொன்று உயர்வனவாதலின், “ஏர் பெறு தத்துவ வுருவாய்” என மொழிகின்றார். ஏர் - எழுதற் பொருளில் வழங்கும் எழில். “வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு” (முருகு) என வருதல் காண்க. இத் தத்துவங்கட்குக் காரணம், சுத்தம் அசுத்தம் எனப்படும் மாயை; அக்காரணத்தில் முதல் மூலமாயை; காரணத்தின் முடிவு திருவருட் சத்தியாதலின், “தத்துவ காரணமாய் இயம்பிய காரண முதலாய்க் காரணத்தின் முடிவாய் நேருறும் அம்முடிவனைத்தும் நிகழ்ந்திடு பூரணமாய்” என ஓதுகின்றார். பரிக்கிரக சத்தியாகிய மாயையைத் தன்னுட் கொண்டிருக்கும் சத்தியைத் தன்னுட் கொண்டிருப்பது பற்றிச் சிவம், “பூரணமாய்” எனப்படுகிறது. அனாதி நித்திய அந்தமில் இன்பப் பொருளாதல் விளங்க “நித்தியமாய்” என்றும், மெய்ம்மை யுருவாதலால் “சத்தியமாய்” என்றும், ஞான குணமே திருமேனியாதல் கொண்டு “சிற்குணமாய்” என்றும் சிறப்பிக்கின்றார். அசத்தெனப்பட்ட மூவகைப் பிரபஞ்சத்துள் அசுத்தப் பிரபஞ்ச மெல்லாம் முக்குண மயமாகலின் சத்துவ குண விருத்தியாகிய பிரகாச ரூபம் கோர ரூபம் துக்க ரூபமாகத்தான், தமோ குண விருத்தியாகிய நியமன ரூபம் மூட ரூபம் மோக ரூபமாகத்தான் அளவிட்டறியப்படும்; முதல்வன் அம்முக்குணங்களும் கடந்தவனாகலான் இவற்றுள் ஒன்றாக அறியப்பட்டான் என்பார், “நிர்க்குணனாய்” (சிவஞா. பாடி : 9 : 2) என மாதவச் சிவஞான முனிவர் விளக்கம் உரைப்பது காண்க. சன்மாத்திரம் - சத்தாதல் மாத்திரம். சத் மாத்திரம் - சன்மார்க்கம் போலச் சன்மாத்திரம் என வருகிறது.
இதனால், தத்துவம் கடந்த சிவம் சன்மாத்திரமாய் நிற்கும் திறம் கூறியவாறாம். (8)
|