3278.

     இரவிமதி உடுக்கள்முதல் கலைகள்எலாம் தம்மோர்
          இலேசமதாய் என்கடந்தே இலங்கியபிண் டாண்டம்
     பரவுமற்றைப் பொருள்கள்உயிர்த் திரள்கள்முதல் எல்லாம்
          பகர்அகத்தும் புறத்தும்அகப் புறத்துடன்அப் புறத்தும்
     விரவிஎங்கும் நீக்கமற விளங்கிஅந்த மாதி
          விளம்பரிய பேரொளியாய் அவ்வொளிப்பேர் ஒளியாய்
     உரவுறுசின் மாத்திரமாம் திருச்சிற்றம் பலத்தே
          ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

உரை:

     சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், கோள்கள் முதலாகிய ஒளிப் பொருள்களெல்லாம் ஓர் அணுத் துளியா மென எண்ணுமளவுடைய பிண்டங்களும், அவ்வகை யளவு கடந்த அண்டங்களும் அவற்றுள் அடங்கிய பொருள்களும், அவ்வவற்றுள் வாழும் உயிர்த் தொகைகளுமாகப் பொருந்திய எல்லாவற்றின் அகத்தும் புறத்தும், அகப்புறத்தும் புறப்புறத்தும் கலந்து எப்பொருளிடத்தும் நீக்கமற விளக்கமுற்று ஆதியந்தம் காண்பதற்கரிய பெரிய ஒளிப் பொருளாய், அப்பேரொளிக்குப் பேரொளியாய் விரிந்துறும் ஞான மயமாய்த் திருச்சிற்றம்பலத்தின்கண் உயர்ந்தோங்கும் பரம்பொருளாம் சிவம் ஒன்றே, பலவல்ல எனத் தெளிமின். எ.று.

     சூரியன், சந்திரன், நட்சத்திர முதலிய அனைத்தும் ஒளிப் பொருள்களாதலின், அவற்றைக் “கலைகள்” என்று குறிக்கின்றார். ஒளிர்தலெனப் பொருள்படும் கலி யென்னும் சொல்லடியாகத் தோன்றுவது கலை எனவுணர்க. இலேசம் - அணுத் துளி. நாம் காண வானத்து விளங்கும் சூரியன் முதலியன அணுத் துளியாம் என எண்ணற் கமைந்த பேரண்டங்கள் உள்ளன எனவும், அணுவுக் கணுவாகும் பிண்டப் பொருளும் உள்ளன எனவும், அணுவுக் கணுவாகும் பிண்டப் பொருளும் உள்ளன எனவும் காட்டற்கு, “இலங்கிய பிண்டாண்டம்” என்றும் அவை எண்ணரியன என்றற்கு “எண் கடந்த” என்றும் இயம்புகின்றார். அவை யனைத்தினும் உயிர்ப் பொருள்களும் உயிரில் பொருள்களும் உள்ளன என்பாராய், “மற்றைப் பொருள்கள் உயிர்த் திரள்கள் முதல் எல்லாம்” எனவும், அவற்றின் அகத்தும், புறத்தும், அகப்புறத்தும், புறப்புறத்துமாகிய எவ்விடத்தும் நீக்கமற நிறைந்த பேரொளியாய் விளங்குவது பற்றி, “அகத்தும் புறத்தும் அகப்புறத்துடன் அப்புறத்தும் விரவி எங்கும் நீக்கமற விளங்கும் பேரொளி” எனவும் இசைக்கின்றார். அப் பேரொளிக்கு ஆதியுமில்லை அந்தமுமில்லை என்பார், “அந்த மாதி விளம்பரிய பேரொளியாய்” என வுரைக்கின்றார். அண்டங்கள் பிண்டங்கள் அனைத்தினும் விரவிய பேரொளியைத் தூலமாக வுணர்த்தி, அதனின் நுண் ணொளிகளின் உண்மை தோன்ற, “பேரொளியாய் அவ்வொளிப் பேரொளியாய்” என்கின்றார். பேரொளிப் பொருளாகும் பரம்பொருள் அசேதன மன்று சுத்த சைதன்னியம் என்றற்குச் “சின்மயமாம்” எனத் தெரிவிக்கின்றார்.

     இதனால் ஒன்றாகிய பரம்பொருள் ஆதியு மந்தமும் இல்லாத அரும்பெரும் ஞான சோதி எனத் தெரிவிக்கின்றவாறாம்.

     (9)