3279. ஆற்றுவிட யானந்தம் தத்துவஆ னந்தம்
அணியோகா னந்தம்மதிப் பருஞானானந்தம்
பேற்றுறும்ஆன் மானந்தம் பரமானந் தஞ்சேர்
பிரமானந் தம்சாந்தப் பேரானந் தத்தோ
டேற்றிடும்ஏ கானந்தம் அத்துவிதா னந்தம்
இயன்றசச்சி தானந்தம் சுத்தசிவா னந்த
ஊற்றதாம் சமரசஆ னந்தசபை தனிலே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.
உரை: வாயில்களாகிய விடய வின்பம், தத்துவ வின்பம், அழகிய யோகானந்தம், மதிக்க வொண்ணாத ஞானவின்பம், பெறற் கமைந்த ஆன்ம வின்பம், பரமானந்தம், அதனைச், சேர்ந்த பிரமானந்தம், சாந்த நிலை நல்கும் பேரானந்தம், இவ்வின்பத்தை நுகரும் ஏகானந்தம், அத்துவிதானந்தம், தன்னின் இயன்ற சச்சிதானந்தம், சுத்த சிவானந்தப்பேற்றில் நிறுத்துவதாகிய சமரச்சானந்தமாகிய சிற்சபையில் உயர்ந்தோங்கும் சிவ பரம்பொருள் ஒன்றே எனத் தெளிமின். எ.று.
விடயானந்தம் - கண் காது முதலியவற்றால் கண்டும் கேட்டும் பெறும் இன்பம். அவற்றி னடியாக நிலவும் ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவமாகியவற்றாற் பெறலாகும் இன்பம் தத்துவானந்தம். யோகக் காட்சியில் தோன்றும் இன்பம் யோகானந்தம், யோக முயற்சியில் முடிவில் எய்துவது ஞானானந்தம். இவற்றை நுகர்தற்கண் ஆன்மா பெறுவது ஆன்மானந்தம். இவற்றிற் கெல்லாம் மேலாவது பரமானந்தம். நுகரப்படும் இன்பங்களிற் பெரியது பிரமானந்தம். விருப்பு வெறுப்பற்ற சாந்த நிலையிற் பெறுவது சாந்தப் பேரானந்தம். தனித்திருந்து ஒன்றிய சிந்தனைக்கண் ஊறுவது ஏகானந்தம். பரம் பொருளுணர்வில் ஒன்றி யுடனாய் நின்று பெறுவது அத்துவிதானந்தம். உண்மையறிவு இன்பம் என்ற மூன்றாலும் இயல்வது சச்சிதானந்தம். கலப்பற்ற தூய சிவமேயாகும் இன்பம் சுத்த சிவானந்தம். அதனைப் பெறற்கு உதவுவது சமரச வுணர்வொழுக்க வின்பமாதலின், “ஊற்றமுறும் சமரசானந்தம்” என வுரைக்கின்றார்.
இதனால் பல்வகை ஆனந்த வகைகள் தெரிவிக்கப்பட்டவாறாம். (10)
|