3280.

     வகுத்துஉயிர் முதற்பலவாம் பொருள்களுக்கும் வடிவம்
          வண்ணநல முதற்பலவாங் குணங்களுக்கும் புகுதல்
     புகுத்தலுறல் முதற்பலவாம் செயல்களுக்கும் தாமே
          புகல்கரணம் உபகரணம் கருவிஉப கருவி
     மிகுத்துஉறுப் பதிசாணம் காரணம்பல் காலம்
          விதித்திடுமற் றவைமுழுதும் ஆதிஅல்லார் ஆகி
     உகப்புறும்ஓர் சுத்தசிவா னந்தசபை தனிலே
          ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர்உண்டே கண்டீர்.

உரை:

     உயிர்ப் பொருள் உயிரில் பொருள் முதலியவாக வகுத்துரைக்கப்படும் பொருள் பலவற்றிற்கும், வடிவம் நிறம் முதலாக வுள்ள குணங்களுக்கும், தோன்றல் தோற்றுவித்தல் முதலிய செயல்வகைகட்கும், தாமே கரணமும் உபகரணமும், கருவியும் உபகருவியுமாகி, மேலும் உரைக்கப்படும் அதிகரணம், காலம், காரணம் எனப் பலவாகக் காணப்படும் தொழில் முதலனிலையாகியும், ஆகாமையும் உடையவராகியுயரும் சுத்தசிவானந்த சிற்றம்பலத்திலே உயர்ந் தோங்குகின்றவருமான ஒப்பற்ற கடவுளாகிய சிவம் ஒன்றே எனத் தெளிமின். எ.று.

     பொருளுண்மை யறிவுக்கு, பொருள், இடம், காலம், கருவி, குணம், செயல் முதலிய பல கூறுகளையும் பகுத்தறிவது முறையாகலின், உலகியற் பொருள்களை “வகுத்த வுயிர் முதற் பலவாம் பொருள்கள்” என வுரைக்கின்றார். உயிர்ப் பொருள், உயிரில் பொருள், நிலைத்திணைப் பொருள், இயங்குதிணைப்பொருள், பருப்பொருள், நுண்பொருள்; உயர்திணைப் பொருள் அஃறிணைப் பொருள்; திரளுருப்பொருள், நீரியற் பொருள், காலியற் பொருள் என எடுத்த ஆராய்ச்சிக் கேற்பப் பொருட் பாகுபாடு செய்யப்படுதல் பற்றி, “முதற்பலவாம் பொருள்கள்” என்று மொழிகின்றார். பொருள்கட்கெல்லாம் வடிவம், நிறம், சுவை, குணம், தொழில் முதலிய இயல்புகள் கண்டு தனித் தனியாகப் பகுத்து, ஆராய்தல் உண்மை பற்றி, “வடிவம் வண்ணம் முதற் பலவாம் குணங்கள்” எனக் கூறுகின்றார். பொருள் களனைத்துக்கும் தோன்றுதல், இனத்தைத் தோற்றுவித்தல், திரிதல் கெடுதல் முதலாக மிகப் பல செயற்கூறுகளுண்டாதலால், “புகுதல் புகுத்துறல் முதற் பலவாம் செயல்கள்” எனத் தெரிவிக்கின்றார். ஒவ்வொன்றிற்கும் உரிய செயல்களுக்கு ஒத்த கருவிகளுண்டு. அவை அகம் புறம் எனப் பிரியும். அகக் கருவியைக் கரணமெனவும், புறக் கருவிகளைக் கருவி, துணைக் கருவி எனப் பலவாகவும் காண்பர். அக்கருவியைக் கரணம் என்றும், துணைக் கருவியை “உபகருவி” என்றும் வழங்குவர். தொழில் நிகழ்ச்சிக்கு இடமும் காலமும் நோக்கமும் பயனும் காரணங்களாம். இடத்தை அதிகரணம் எனவும் பிறவற்றை ஏது எனவும் கூறுவர். அதனாற், “கரணம், உபகரணம், கருவி உபகருவி” என்றும், “அதிகரணம் காரணம்” என்றும், காலக் கூறு பலவாதல் விளங்க, “பல்காலம்” என்றும் இயம்புகின்றார். இக் கூறுகள் பலவற்றையும் தொகுத்து, “வினையே செய்வது செயப்படு பொருளே, நிலனே காலம் கருவி யென்றா, இன்னதற் கிது பயனாக என்னும், அன்ன மரபின் இரண்டொடும் தொகை இ, ஆ யெட்டென்ப தொழில் முதனிலையே” எனத் தொல்காப்பியம் கூறுவது காண்க. துணையாகும் கருவி கரணங்கள் உபகருவி, உபகரணம் எனக் குறிக்கப்படுகின்றன. பகுக்கப்படும் பொருளாதலும், எண் வகைத் தொழிலின் முதனிலைகளாதலும் யாவும் சிவமே என்பது பற்றி, “விதித்திடு மற்றவை முழுதுமாகி” எனவும், சிவம் வேறு, அறிவாற் பகுத்தறியப்படும் பொருள் வேறு என்பார் உளராகலின், “அல்லாராகி” எனவும் இயம்புகின்றார். உகப்பு - உயர்தல். ஒப்புயர் வற்றது என்றற்குச் “சுத்த சிவானந்த சபை” என்று சிறப்பிக்கின்றார்.

     இதனால், பகுத்தறிதற்குப் பொருளாகாத சிவத்தின் தனி யொருமை மாண்பு தெரிவித்தவாறாம்.

     (11)