3282.

     ஒன்றும்அலார் இரண்டும்அலார் ஒன்றிரண்டும் ஆனார்
          உருவும்அலார் அருவும்அலார் உருஅருவும் ஆனார்
     அன்றும்உளார் இன்றும்உளார் என்றும்உளார் தமக்கோர்
          ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ்சோ தியினார்
     என்றுகனல் மதிஅகத்தும் புறத்தும்விளங் கிடுவார்
          யாவும்இலார் யாவும்உளார் யாவும்அலார் யாவும்
     ஒன்றுறுதாம் ஆகிநின்றார் திருச்சிற்றம் பலத்தே
          ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர்.

உரை:

     ஒன்றென்றற்கும் இரண்டென்றற்கும் இன்றி ஒன்றாகிய இரண்டுருவமாகியவரும், உருவுடைய ரல்லர்; அருவுருவினரு மல்லர்; உருவருவர் எனப்படுபவருமாகியவர்; அன்றும் இன்றும் என்றும் உள்ளவர்; தமக்கெனத் தோற்றமும் முடிவும் இல்லாதவர்; அரும் பெருஞ் சோதியாயவர்; சூரியன், நெருப்பு, சந்திரன் ஆகியவற்றின் அகத்தும் புறத்தும் கலந்து விளக்கம் செய்பவர்; யாவும் இல்லாதவரும், யாவற்றையும் உடையவரும், யாவும் அல்லாதவரும், யாவற்றினும் வேறறக் கலந்து ஒன்றி எல்லாம் தாமாக நிற்பவராய்த் திருச்சிற்றம்பலத்தில் உயர்ந்தோங்கும் சிவ பரம்பொருள் ஒன்றே எனத் தெளிமின். எ.று.

     ஞானமேயான போதும் சத்தியேயான போதும் ஒன்றாயும், ஞானமும் சத்தியும் ஒன்றிய போது இரண்டாயும் கோடலாகாமை பற்றி “ஒன்று மலார் இரண்டுமலார்” எனவும், சதாசிவ மூர்த்தியாகிற போது இரண்டும் ஒன்றுதலின் “ஒன்றிரண்டுமானார்” எனவும் கூறுகின்றார். அன்மை மறுத்தற் பொருளாதலால், சிவ மொன்றே என்பாரையும் சிவசத்தியொன்றே என்பாரையும், சத்தியொடு கூடியிருத்தலின், சிவமும் சத்தியுமென இரண்டென்பாரையும் மறுத்தற்கு “ஒன்றுமலார் இண்டுமலார்” என்றும், உமையொரு பாகனாம் உருவியல் பற்றி, “ஒன்றிரண்டு மானார்” என்றும் உரைக்கின்றா ரென்றுமாம். உமையொரு பாகனாதலின் உருவும் ஞானமும் சத்தியு மாமிடத்து அருவமும், சதாசிவமாகும் போது உருவமும் கோடலால், “உருவுமலார் அருவும் அலார்” என மறுத்து, “உருவருவமானார்” என வறுபுறுத்துகின்றார். உருவம் நான்கும் அருவம் நான்கும் அருவுருவம் என்று ஒன்பது உருவ பேதம் கூறலின் இவ்வாறு கூறுகின்றார் என அறிக. “அண்டங் கடந்த ஆனந்த வெள்ளப் பொருள் பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள்” (திருப்பல்) எனப் பல்லாண்டு கூறுவது பற்றி, “அன்றும் உளார் இன்றும் உளார் என்றும் உளார்” என வுரைக்கின்றார். “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி” (திருவெம்) எனப் பெரியோர் மொழிதலின், “தமக்கு ஓர் ஆதியிலார் அந்தமிலார் அரும்பெருஞ் சோதியானார்” என மொழிகின்றார். என்று சூரியன், கனல், நெருப்பு. சூரியன் முதலிய மூன்றும் ஒளியுடையவை யாதற்குக் காரணம் அவற்றின் அகத்தும் புறத்தும் சிவசோதி நிலாவுதலால் “என்று கனல் மதியுகத்தும் புறத்தும் விளங்கிடுவார்” என வுரைக்கின்றார். “அருக்கனிற் சோதி யமைத்தோன்” (அண்டப்) எனச் சான்றோர் சாற்றுவதறிக. தமக்கென ஒன்றும் இல்லாதவராதலின் “யாவும் இலார்” எனவும், உலகு பொருள் கருவி முதலிய அனைத்தையும் படைத்துடையவனாதலை நோக்கி, “யாவும் உளார்” எனவும் இயம்புகின்றார். எல்லாவற்றினும் உறைதல் புலப்பட இவ்வாறு கூறுகிறார் என்றுமாம். எல்லாவற்றினும் கலந்து ஒன்றியிருப்பினும் செம்பொருட் டன்மையால் வேறாதல் கண்டு “யாவும் அலார்” என இசைக்கின்றார். எல்லாப் பொருளினும் கலந்து நிற்குமிடத்து எல்லாம் தாமாக விளங்கச் செய்யும் சிறப்புத் தோன்ற, “யாவும் ஒன்று தாம் ஆகி நின்றார்” என இயம்புகின்றார். “தன்னைக் கண்ட என்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணமாகிய ஈசன்” (பொன்வண்) என்று சேரமான் கூறுவது காண்க.

     இதனால், சிவ பரம்பொருள் பரமாந் தன்மையை உண்மையும் இன்மையுமாகிய இயல்பு கூறுமாற்றால் விளக்கம் செய்தவாறாம்.

     (13)