3. ஆற்றாமை

    அஃதாவது, இறைவன் திருவருட் குறிப்பின் பெருமையும் அதனைப் பெற விழையும் தமது சிறுமையையும் நோக்கி மனம் பொறுக்க மாட்டாமல் வருந்துதல். இதன்கண், தன்னைத் தனித்து நோக்கும் வடலூர் வள்ளற்பெருமான் தன்னொத்த மக்களுயிர் அனைத்தையும் ஒப்ப நோக்கித் தாமாக எண்ணிச் சிறுமையை மிகுவிக்கும் குற்றங்களைத் தொகுத்துக் காட்டுகின்றார். தன் குற்றம் கண்டு களைந்தாலன்றித் தான் தூயனாதல் கூடாதாகலின் பாட்டுத் தோறும் தமது குற்றங்களையே எடுத்து மொழிகின்றார்.

எழுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3283.

     எழுவினும் வலிய மனத்தினேன் மலஞ்சார்
          ஈயினும் நாயினும் இழிந்தேன்
     புழுவினும் சிறியேன் பொய்விழைந் துழல்வேன்
          புன்மையேன் புலைத்தொழில் கடையேன்
     வழுவினும் பெரியேன் மடத்தினும் பெரியேன்
          மாண்பிலா வஞ்சக நெஞ்சக்
     குழுவினும் பெரியேன் அம்பலக் கூத்தன்
          குறிப்பினுக் கென்கட வேனே.

உரை:

     தூணினும் வன்மை மிக்க மனமுடையேனாய் மலக் குப்பையை நாடும் ஈயைப் போலவும் நாயைப் போலவும் இழிவடைந்து புழுவினும் சிறுமை கொண்டு பொய் யொழுக்கத்தை விரும்பிப் புல்லிய தன்மை பெற்றதனால் புலைத்தொழிலுற்றுக் கடையவனாயினேன்; என்னளவில் குற்றங்களைப் பெருக்குவதில் மிகப் பெரியவானாய் அறியாமை மாண்பு பயவாத வஞ்ச நினைவுகளைக் கொண்ட கூட்டத்தாரில் யான் மிக்கவனாவேன்; இன்ன தன்மைகளை யுடைய யான் தில்லையம்பலக் கூத்தப் பெருமானது திருவருட் சிறப்புப் பெறுதற்கு யாது செய்வேன். எ.று.

     எழு-தூண்; கம்பமுமாம். மேற் கட்டிடத்தின் சுமையைத் தாங்கி தளராது நிற்கும் சிறப்புத் தூணுக்குண்டு; அது போல் எத்துணைக் கொடுமை நினைவுச் சுமையைத் தாங்கித் தளராமை என் மனத்துக்கு உண்டென்பார், “எழுவினும் வலிய மனத்தினேன்” என்று கூறுகின்றார். மலத்தை நாடிக் கூட்டமாய்க் கூடி யிருந்துண்பது ஈயின் செயல்; தன் இனத்தை வெருட்டி நீக்கித் தனித்திருந் துண்பது நாயின் இயல்பு இரண்டியல்பும் கொண்டு இழிந்தவற்றை யெண்ணிக் கீழ்மை யுற்றேன் எனக் கூறுலுற்று. “ஈயினும் நாயினும் இழிந்தேன்” என்று உரைக்கின்றார். சிறுமைக்கு எல்லையாவது தோன்றப் “புழுவினும் சிறியேன்” எனப் புகல்கின்றார். பொய் முதலிய புலை நினைவுகளை மனம் விரும்புவதால் செயல்கள் புலைத்தன்மை யெய்துவது கொண்டு, “புலைத் தொழில் கடையேன்” என்று கூறுகின்றார். உழலுதல் - பயனின்றி யலைதல். கடையனாயினும், குற்றமாவன செய்தலிலும், அறியாமையிலும், வஞ்ச நினைவு செயல்களிலும் மிக்குள்ளேன் என்பாராய், “வழுவினும் பெரியேன்” மடத்தினும் பெரியேன், மாண்பிலா வஞ்சக நெஞ்சக் குழுவினும் பெரியேன்” என வுரைக்கின்றார். தனித்தும் கூடியும் செய்வன செய்தல் மக்களியல்பாதலால், வஞ்சச் செயல்களை ஒத்தாரொடு கூடிப் பெருமிதத்துடன் செய்தே னென்பார், “வஞ்ச நெஞ்சக் குழுவினும் பெரியேன்” எனப் பேசுகின்றார். பெருமை - ஈண்டு மிகுதி குறித்தது. கூத்தன் குறிப்பு, திருவருள் நோக்கம். இக் கூறிய குற்றங்களே நிறைந்த யான் கூத்தப் பிரான் திருவருளறிவும் இன்பமும் பெறுதற் கேற்பனவற்றை எங்ஙனம் செய்வே னென வருந்துகின்றமை புலப்பட, “என் கடவேன்” என உரைக்கின்றார்.

     இதனால், குற்றம் களையும் முயற்சியால் அவற்றை எடுத்தோதியவாறாம்.

     (1)