3284.

     கற்றமே லவர்தம் உறவினைக் கருதேன்
          கலகர்தம் உறவினிற் களித்தேன்
     உற்றமே தகவோர் உவட்டுற இருந்தேன்
          உலகியற் போகமே உவந்தேன்
     செற்றமே விழையும் சிறுநெறி பிடித்தேன்
          தெய்வம்ஒன் றெனும்அறி வறியேன்
     குற்றமே உடையேன் அம்பலக் கூத்தன்
          குறிப்பினுக் கென்கட வேனே.

உரை:

     நல்லன கற்றுயர்ந்த மேலோர் நட்புறவை நாடாமல் கலகம் புரிபவர் கூட்டம் பெற்று மகிழ்கின்றேன்; குணம் மிக்க மேதகவையுடையவர் கண்டு வெறுத்து நீக்கும் நெறி மேற்கொண்டு உலகியற் சிற்றின்பத்தையே பெற்று மகிழ்ந்தேன்; செற்றத்தை விரும்பும் கீழ்மை நெறியைக் கைக்கொண்டு தெய்வம் ஒன்றே என்பதைத் தெளியாமல் குற்றமே செய்கின்றேன்; இன்னோரன்ன இயல்புடைய யான் அம்பலக் கூத்தன் திருவருளைப் பெற யாது செய்ய வல்லேன். எ.று.

     கற்பன கற்றுயர்ந்த மேன்மக்களின் நல்லுறவும் மேன்மை சான்ற குணஞ் செயல்களையுடைய தக்கோர் நட்புறவும் தெய்வம் ஒன்றென்னும் மெய்யுணர்வும் திருவருட் பேற்றுக்கு வாயிலாகும்; அதனை விட்டுத் தீது செய்வோர் உறவு மேற்கொண்டேன் என்பாராய், “கலகர்தம் உறவினிற்களித்தேன்” என வுரைக்கின்றார். மேதகவு - நற்குண நற்செயல்களால் உளதாகும் மேன்மை நிலை. கலகர் - கலகத்தை விளைவிப்பவர்; அவர்களுடைய கலகவுரை சேர்ந்தார் அறிவை மயக்குவதாகலின், “உறவினிற் களித்தேன்” எனக் கூறுகின்றார். உவட்டல் - வேண்டாது உமிழ்தல்; ஈண்டு விலக்குதற் பொருளில் வந்தது. உலகியற் போகம், சிற்றளவின தாயினும் பெரிதாய்த் தோன்றி அறிவை மயக்கித் தன்னையே காதலித் தொழுகும் நிலையினைப் பயப்பதாகலின், அதுவும் திருவருட் பேற்றுக்கு ஆகாமை காட்டற்கு, “உலகியற் போகமே யுவந்தேன்” என்று உரைக்கின்றார். செற்றம் - சினம் காரணமாக வெறுப்பும் பகைமையுமுற்றுத் தீது செய்விக்கும் தன்மை. சிறு குற்றத்தையும் பொறாது ஒறுக்கும் சிறுமைச் செய்கை செற்ற முடையாரிடத்து அமைதலின், “சிறு நெறி“ என இகழ்கின்றார். தெய்வம் பல என்னும் கொள்கை சமயப் பூசலை விளைவித்துச் சமுதாயத்தில் ஒருமை மாண்பைச் சீர்குலைத்தலால் “தெய்வம் ஒன்றெனும் அறிவறியேன்” என்கின்றார். தெய்வம் ஒன்றெனக் கோடல் உண்மை யறிவு என்றற்கு, “ஒன்று என்னும் அறிவு அறியேன்” என மொழிகின்றார்.

     (2)