3285.

     கடுமையேன் வஞ்சக் கருத்தினேன் பொல்லாக்
          கன்மனக் குரங்கனேன் கடையேன்
     நெடுமைஆண் பனைபோல் நின்றவெற் றுடம்பேன்
          நீசனேன் பாசமே உடையேன்
     நடுமைஒன் றறியேன் கெடுமையிற் கிளைத்த
          நச்சுமா மரம்எனக் கிளைத்தேன்
     கொடுமையே குறித்தேன் அம்பலக் கூத்தன்
          குறிப்பினுக் கென்கட வேனே.

உரை:

     கடினப் பண்பும், வஞ்சம் நிறைந்த கருத்தும், பொய் யொழுக்கமும், இரக்கமற்ற மனமும், பொல்லாத குரங்கு போல் நிலையின்றி யோடும் உள்ளமும் உடைமையாற் கீழ்ப்பட்ட யான், நெடிது நீண்ட ஆண்பனை போல் வளர்ந்த ஈரமில்லாத உடம்பும், இழிதன்மையும், ஆசாபாசமும் நிறைந்தவன்; நீதியுணர்வு சிறிதுமில்லாதவன்; தீங்காகிய நிலத்தில் முளைத்த நஞ்சு மரமாக வளர்ந்து பரந்துள்ளேன்; கொடுமையே செய்து திரிவேன்; இத்தகைய யான் தில்லையம்பலக் கூத்தப் பெருமான் திருவருட் பேறு குறித்து யாது செய்வேன். எ.று.

     தில்லையம்பலவாணராகிய சிவபெருமான் திருவருளைப் பெற விழைவார்க்கிருத்தற் காகாத குற்றங்கள் தம்மிடத்துள வென நினைந்து தம்மையும் தம்மைச் சூழவுள்ள சமுதாயத்தையும் காண்கின்ற வடலூர் வள்ளல், எடுத்த எடுப்பிற் கடுத்த பார்வையைக் கண்ணிலும் கடுகடுத்த சொற்களை, வாயிலும் கடினமனத்தைச் செயலிலும் கண்டு வருந்துகின்றமையின், “கடுமையேன்” என்றும், மக்களோடு பழகும் நிலையில் வஞ்சனை மிக்கிருப்பது அறிந்து, “வஞ்சக் கருத்தினேன்” என்றும், ஒன்றினும் நிலையுறாது பலதலையாக ஆசை விரிந்து அலைந்து கீழ்மையுற்றுத் தாழ்வுறுவது உணர்ந்து, “பொல்லாக் கன்மனக் குரங்கனேன், கடையேன்” என்றும் இயம்புகின்றார். பிறர் பொருள் மேல் ஆசையுற்றுத் தீது புரிந்து இரக்கமின்றிக் கவர்வது புலப்பட, “பொல்லாக் குரங்கனேன்” எனவும், அதனால், உள்ளத்தில் வெறுப்பு மேலிடுதலின் “கடையேன்” எனவும் கூறுகின்றார். காய்த்துப் பயன்படாது நெடிது வளர்ந்து உள்வலி யின்றி உயர்ந்து நிற்கும் பனைமரம் போல வளர்ந்து தம்மினத்துக்கும் பிறர்க்கும் பயன்படும் நற்பண்பில்லாத மக்களினத்து ஒருவராகக் தம்மைக் காண்கின்றாராகலின், “நெடுமை ஆண்பனை போல் நின்ற வெற்றுடம்பேன்” என்றும், அக்காட்சி இகழ்ச்சியைப் பயத்தலின், “நீசனேன்” என்றும், அதற்கு ஏது மனத்தின்கண் நிறையும் தன்னலப் பேராசையாதல் அறிந்து “பாசமே யுடையேன்” என்றும் உரைக்கின்றார். தனக் கொத்தது பிறர்க்குமாம் என எண்ணும் நடுநிலைப் பண்பு மனத்தில் இல்லாமையும் அதனால் நீதியின்றித் தீயவற்றையே செய்தொழுகும் திறமே மிக்கிருப்பது தேர்ந்து “நடுமை யொன்றறியேன் கெடுமையிற் கிளைத்த நச்சு மாமரம் எனக் கிளைத்தேன்” எனவும், கொடுந் தொழிலேயுருவாக அமைந்தேன் என்பாராய், “கொடுமையேன்” எனவும் இயம்புகின்றார். நடுவு நிலைமை - நடுமையென வந்தது. கேடு செய்யும் தன்மையைக் “கெடுமை” என்றும், கொடிய பண்பைக் “கொடுமை” என்றும் குறிக்கின்றார். உண்டாரைக் கொல்லும் நஞ்சின் தன்மையையுடைய காய்களைக் காய்க்கும் பெரிதாய்த் தழைத்து நிற்கும் மரத்தை, “நச்சு மாமரமெனக் கிளைத்தேன்” என நவில்கின்றார். மாமரத்தை மாவினத்து மரமெனினும் பொருந்தும். “தாம் வளர்த்தது, ஓர் நச்சு மாமரமாயினும் கொலார்” (சதக) எனச் சான்றோர் வழங்குவது காண்க.

     (3)