3286.

     நிலத்திலும் பணத்தும் நீள்விழி மடவார்
          நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன்
     புலத்திலும் புரைசேர் பொறியினும் மனத்தைப்
          போக்கிவீண் போதுபோக் குறுவேன்
     நலத்தில்ஓர் அணுவும் நண்ணிலேன் கடைய
          நாயினுங் கடையனேன் நவையேன்
     குலத்திலும் கொடியேன் அம்பலக் கூத்தன்
          குறிப்பினுக் கென்கட வேனே.

உரை:

     வளமிக்க நிலத்தின் மேலும் பணத்தின் மேலும் நெடிய கண்களையுடைய இளமகளிர் கூட்டத்தின் மேலும் ஆசை மேன்மேலும் பெருகவே நினைப்பவனாகிய நான், கண் காது, முதலிய பொறி வாயிலிலும், ஒளி ஓசை முதலிய புலன்களிலும் மனத்தைச் செலுத்தி வாழ்நாளைக் கழிப்பேன்; நல்லனவற்றைச் சிறிதளவும் சேர்தலின்றிக் கீழ்மையாற் கடைப்பட்ட நாயினும் குற்றம் மிக வுடையனாய் ஒழுக்கத்தால் கொடியவனாவேன்; இத்தகைய யான் தில்லையம்பலத்துக் கூத்தப் பெருமான் திருவருளைப் பெறுதற்கு யாது செய்ய வல்லேன். எ.று.

     உலகியல் வாழ்வில் துன்பம் விளைப்பன மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை ஆகிய மூன்று என அறிந்தோர் உரைத்தலின், அவற்றை “நிலத்திலும் பணத்தும் நீள்விழி மடவார் நெருக்கிலும் பெருக்கிய நினைப்பேன்” என வுரைக்கின்றார். பெருகிய விளைவால் பொன்னும் புகழும் தோன்றி உடையவற்கு இன்பம் தருதல் பற்றி மக்கட்கு வளவிய நிலங்களின் மேல் ஆசையுண்டாதலின், அதனை முற்பட நிறுத்தி “நிலத்திலும்” என வுரைக்கின்றார். பொன்னாலும் வெள்ளியாலும் செய்யப்படும் நாணயங்களைப் பணம் என்பது வழக்கு. பணத்தால் வாழ்க்கையில் வேண்டுவன பலவும் பெறப்படுதலின், நிலத்தாசையை யடுத்துப் பணத்தாசையை நிறுத்தி, “பணத்தும்” எனக் கூறுகிறார். “பொருள் துன்னுங்காலைத் துன்னாதன இல்லையே” (சீவக) எனச் சான்றோர் கூறுகின்றனர். நீண்ட கண்கள் இளமை கனிந்த மகளிர்க்கு அழகு மிகுத்தலின், “நீள் விழி மடவார்” எனவும், அவர்களது புணர்ச்சி வேட்கையை “நெருக்கு” எனவும் குறித்துக்காட்டி, இம் மூன்றன் மேலும் உளதாகும் ஆசை வாழ்வார்க்கு எல்லையின்றிப் பெருகியவண்ணம் இருத்தலின், “பெருக்கிய நினைப்பேன்” என்று உரைக்கின்றார். பெருக்குதற்கே என் நினைவுகள் அனைத்தையும் செலுத்துதலுடையேன் என்பாராய், “பெருக்கிய நினைப்பேன்” என்கின்றார். முதுமை மிகுங்கால் பெண்ணாசை குன்றுதலின் அதனை இறுதிக்கண் நிறுத்துகின்றார். ஏனையிரண்டும் இறக்கும் போதும் விடுவதில்லை யென உணர்க. ஆசைப் பெருக்குடைய மனம், பொறி புலன்களின் வழிச் சென்று அலைந்து அவா வுருவுற்று வருத்துதலால், “புலத்தினும் புரைசேர் பொறியிலும் மனத்தைப் போக்கி வீண்போது போக்கலுறுவேன்” எனக் கூறுகின்றார். கண், காது முதலிய கருவிகளைப் பொறியெனவும், அவற்றையிடமாகக் கொண்டு ஆசை தோற்றுவிக்கும் சுவை, யொளி முதலிய ஐந்தனையும் புலன் என்றும் அறிஞர் எடுத்துரைப்பர். “பொறி வாயில் ஐந்தவித்தான்” (குறள்) என்பது காண்க. பொறி புலன்களிற் சென்று ஆசை மிக்கு அலைவதால் துன்பமே மிகுதியாவது பற்றி, “வீண் போது போக்கலுறுவேன்” எனப் புகல்கின்றார். போக்குதல் - கழித்தல். உயிர்க்கு இன்பமும் உறுதியும் பயப்பவை நலம் எனப்படும்; நல்லவற்றை எளிதிற் பெறலரிதாகலின், “நலத்திலோர் அணுவும் நண்ணிலேன்” எனவும், அச்செயலின் கீழ்மையை யெண்ணிக் “கடையநாயினும் கடையனேன்” எனவும், அதனால் விளையும் தீமையை விதந்து “நவையேன்” எனவும் நவில்கின்றார். நவை - குற்றம். ஆசைப் பெருக்கும் பொறிவழிச் செல்லுதல் நல்லொழுக்கத்தைக் கெடுத்தலால், “குலத்திலும் கொடியேன்” எனக் கூறுகிறார். குலம் - ஈண்டு நல்லொழுக்கத்தின் மேற்று. இவை திருவருள் இன்பப் பேற்றுக்குத் தடையாதலால், “அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேன்” என வருந்துகின்றார்.

     (4)