3287.

     செடிமுடிந் தலையும் மனத்தினேன் துன்பச்
          செல்லினால் அரிப்புண்ட சிறியேன்
     அடிமுடி அறியும் ஆசைசற் றறியேன்
          அறிந்தவர் தங்களை அடையேன்
     படிமுடி வழித்துக் கடிகொளும் கடையர்
          பணத்திலும் கொடியனேன் வஞ்சக்
     கொடிமுடிந் திடுவேன் அம்பலக் கூத்தன்
          குறிப்பினுக் கென்கட வேனே.

உரை:

     துயர் விளைவித்து வருந்தும் மனத்தையுடையனாய், துன்பமாகிய கறையானால் அரித் துண்ணப்பட்டுச் சிறுமையுடையவனாகிய யான் செய்பொருளின் காரண காரிய மறிதலில் விருப்பம் சிறிது மின்றியும் அவற்றையறிந்த நன்மக்களை யடைதலின்றியும் உழல்கின்றேன்; உலக வாழ்க்கைப் பயனையிழந்து சிறைப்படும் கீழ் மக்களின் செல்வத்தினும் கொடுமை மிகவுடையேன்; வஞ்சச் செயல் கொடி கட்டி நிற்கும் யான் தில்லையம்பலக் கூத்தப் பெருமான் திருவருள் நாட்டம் பெறுதற்கு யாது செய்ய வல்லேன். எ.று.

     செடி - துயர்; துன்பமுமாம். குற்றமாவனவற்றையே நினைந்து துன்பத்துக்குள்ளாகும் மனப்பண்பை விதந்து, “செடி முடிந்தலையும் மனத்தினேன்” எனக் கூறுகின்றார். முடிதல் - நினைந்து கெடுதல். செல் - வெள்ளெறும்பு; இது கறையான் எனவும் வழங்கும். நூல் ஏடுகளையும் மரங்களையும் அரித்துண்டு கெடுத்தல் இதன் இயல்பு; வலிய மரக்கட்டைகளை அரித்து மெலியவாக்கும் செல்போலத் துன்பத்தால் வருத்தமுற்றுச் சிறுமை யுற்றேன் என்பார், “செல்லினால் அரிப்புண்ட சிறியேன்” எனச் செப்புகின்றார். அடிமுடியறியும் ஆசை, காரண காரியப் பயன் தேர்ந்தறியும் நல்லார்வம்; நல்வாழ்க்கைக்கு இன்றியமையாததாகலின், “அடிமுடி யறியும் ஆசை சற்றறியேன்” எனவும், அந்த நல்லறிவு படைத்த நன்மக்களைச் சார்ந்தேனும் அந்த ஆர்வத்தைப் பெறா தொழிந்தேன் என வருந்துமாறு புலப்பட, “அறிந்தவர் தங்களை யடையேன்” எனவும் இயம்புகின்றார் படி - நிலவுலகு. படிமுடிவு - மண்ணக வாழ்க்கையின் நற்பயன். வாழ்க்கைப் பயனாகிய புகழும் புண்ணியமும் பெறாது குற்றமே செய்து சிறை புகுந்து துன்புறும் பேதைகளை, “படி முடிவு அழித்துக் கடிகொளும் கடையார்” என்று இகழ்கின்றார் - கடி கொளல். சிறைக் காவற் படுதல். “பொய்படு மொன்றோ புனை பூணும், கையறியாப் பேதை வினை மேற்கொளின்” (குறள்) எனப் பெரியோர் கூறுவது காண்க. கீழ் மக்களிடத்து எய்தும் செல்வத்தினும் உடையார்க்குப் பெருந் துன்பம் செய்யும் கொடியது வேறின்மையின், “கடையர் பணத்திலும் கொடியேன்” என்று பகர்கின்றார். “அறிவிலார், தாம், தம்மைப் பீழிக்கும் பீழை, செறுவார்க்கும் செய்தலரிது” (குறள்) எனத் திருவள்ளுவர் அறிவிக்கின்றார். கொடி முடிதல் - நெடிய கொம்பின் நுனியிற் கட்டிப் பலர் காணத்துகிற் கொடியை யுயர்த்தல். “வஞ்சம் புரிதற்கு முற்பட்டுள்ளேன் என்பார், “வஞ்சக் கொடி முடிந்திடுவேன்” என மொழிகின்றார். கூத்தப் பெருமானது திருவருள் ஞான நாட்டப் பேறு குறிப்பெனப்படுகிறது.

     (5)