3288. அரங்கினிற் படைகொண் டுயிர்க்கொலை புரியும்
அறக்கடை யவரினுங் கடையேன்
இரங்கில்ஓர் சிறிதும் இரக்கம்உற் றறியேன்
இயலுறு நாசியுட் கிளைத்த
சிரங்கினிற் கொடியேன் சிவநெறி பிடியேன்
சிறுநெறிச் சழக்கையே சிலுகுக்
குரங்கெனப் பிடித்தேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
உரை: பலர் கூடிய அவையின்கண் ஓர் உயிரைக் கொல்லும் முழுத்த கீழ்மகனினும் கீழவனாகிய யான் இரங்கதக்க இடத்தில் ஒரு சிறிதும் இரக்கம் கொள்ளாதவானாய் உயிர்த்தற் கமைந்த மூக்கினுள் புடைத்த புண் போலக் கொடியவனாய்க் சிவநெறியைக் கடைப்பிடியாமல் கீழ்மை நெறிக் குற்றத்தையே சேட்டை மிக்க குரங்குப் பிடிகொண்டு ஒழுகுவதால் தில்லையம்பலக் கூத்தப்பிரான் திருவருளைப் பெறுதற்கு யாது செய்ய வல்லேன். எ.று.
கொலைத் தொழிலே செய்பவனாயினும், பலர் கூடிய அவையின்கண் அதனைச் செய்தற்கு நாணியஞ்சுவானாக, யான் அவனினும் கொடியவன் என்பாராய், “அரங்கினிற் படை கொண்டு உயிர்கொலை புரியும் அறக்கடையவரினும் கடையேன்” என இயம்புகின்றார். அறக்கடையவர் - முழுத்த கீழ்மக்கள்; அறன் கடையாவது பாவமெனக் கொண்டு பாவிகள் எனப் பொருள் கோடலும் ஒன்று. “அறன்கடை நின்றாருள் எல்லாம்” (குறள்) எனச் சான்றோர் வழங்குவதறிக. இரங்கில் - இரங்கத் தக்க இடம்; கண்டார் இரங்குகின்ற சூழ்நிலைக் காட்சியுமாம். மூக்கினுள் தோன்றி வருத்தும் புண்ணினும் துன்ப மிக்கது பிறிதில்லையாதலின், அதனை விதந்து, “நாசியுள் கிளைத்த சிரங்கு” என வோதுகின்றார். புண்ணின் கொடுமையினும் எனது கொடுமை பெரிதென்பது கருத்து. பிடித்தல் - கடைப் பிடித்தல். சிறு நெறியால் விளைவது குற்றமாதல் தோன்ற - “சிறுநெறிச் சழக்கு” எனக் கூறுகின்றார். சிறுநெறி - சிறுமை பயக்கும் தீயநெறி. சழக்கு குற்றம்; பிடிவாதமுமாம். சிலுகு - சேட்டை; சேட்டை - குறும்பு செய்யும் குற்றப் பண்பு. குரங்கிற் கது இயல்பாதலால், “சிலுகுக் குரங்கனேன்” என வுரைக்கின்றார். இங்ஙனம் குற்றங்கட்குக் கொள்கலமாகியதனால் கூத்தப்பிரான் திருவருட் குறிப்புப் பெறும் தகுதியுடைய னல்லனாயினேன் என்பார், “குறிப்பினுக்கு என் கடவேன்” என்று கூறுகின்றார். (6)
|