3289. வாட்டமே உடையார் தங்களைக் காணின்
மனஞ்சிறி திரக்கமுற் றறியேன்
கோட்டமே உடையேன் கொலையனேன் புலையேன்
கூற்றினும் கொடியனேன் மாயை
ஆட்டமே புரிந்தேன் அறத்தொழில் புரியேன்
அச்சமும் அவலமும் இயற்றும்
கூட்டமே விழைந்தேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
உரை: துன்பத்தால் வாடி யிருப்பவர்களைக் கண்டால் மனதில் சிறிதும் இரக்கவுணர்ச்சி கொள்வ தில்லாத யான் நேர்மையில்லாதவனாய், கொலையும் புலையும் உடையவனாய், இயமனைக் காட்டிலும் கொடியவனாயுள்ளேன்; உலகியல் மாயையிற் சிக்கியாடுகின்றேன்; அறத்தை நினையாமல் பிறர்க்கு அச்சத்தையும் வருத்தத்தையும் செய்பவர் கூட்டத்தையே விரும்பி யொழுகுகின்றேனாகலின், தில்லையம்பலக் கூத்தப் பிரானாருடைய திருவருள் நாட்டம் எனக்கு எய்துதற்கு யாது செய்வேன். எ.று.
வறுமை பிணி முதலியவற்றால் மனமும் மேனியும் வாடி வருந்துவோரைக் காணின் இரக்கமுறுவது மனிதப் பண்பாகவும், யான் மெய்யால் ஒன்றும் செய்யாவிடினும் மனம் தானும் சிறிதும் இரங்குகின்றேனில்லை என்றற்கு “வாட்டமே யுடையார் தங்களைக் காணின் மனம் சிறிது இரக்கமுற்றறியேன்” என மொழிகின்றார். கோட்டம் - வளைவு; நேர்மையில்லாமை. இரக்கவுணர்வு இல்லாத நெஞ்சில் நேர்மையிடம் பெறுவதரிதாகலின், “கோட்டமே யுடையேன்” என்றும், நேர்மையில்லார் கொலைக்கு அஞ்சுவதும் புலைத் தொழிற்கு நாணுவதும் இல்லையாகலின், “கொலையனேன் புலையனேன்” என்றும், இரக்கமின்றி உயிர் கவர்வது இயமன் செயலாதலால், “கூற்றினும் கொடியனேன்” என்றும் இயம்புகின்றார். மாயா காரியமாகிய உலகியல் தன்கண் வாழ்வாரை மயக்குவது இயல்பாதலால், “மாயை ஆட்டமே புரிந்தேன்” எனக் கூறுகின்றார். உலகியல் மாயைக்கஞ்சி, நம்பியாரூரர், “மையல் மானுடமாய் மயங்கும் வழி, ஐயனே தடுத்தாண்டருள் செய்யனை” (தடுத்தாட்) எனச் சிவன்பால் முறையிடுவது காண்க. மாயை மயக்கினின்றும் தெளிவு தரும் மருந்து அறமாயினும் யான் அதனைக் கொண்டிலேன் என்பார், “அறத்தொழில் புரியேன்” என்றும், இவ்வாறு இயலும் மனமும் சூழவிருக்கும் இனத்தால் நன்னெறி படருமாக யான், தீயர் இனத்தையே விரும்பி அதனிடையே கிடக்கின்றேன் என்பாராய், “அச்சமும் அவலமும் இயற்றும் கூட்டமே விழைந்தேன்” என்றும் இயம்புகின்றார். இவ்வாற்றால் திருவருட் பேற்றுக்குப் புறம்பாயினேன் என வருந்துகின்றாராகலின், “அம்பலக் கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேன்” என இசைக்கின்றார். (7)
|