3290.

     கலைத்தொழில் அறியேன் கள்உணுங் கொடியேன்
          கறிக்குழல் நாயினும் கடையேன்
     விலைத்தொழில் உடையேன் மெய்எலாம் வாயாய்
          விளம்புறும் வீணனேன் அசுத்தப்
     புலைத்தொழில் புரிவேன் பொய்யனேன் சீற்றம்
          பொங்கிய மனத்தினேன் பொல்லாக்
     கொலைத்தொழில் புரிவேன் அம்பலக் கூத்தன்
          குறிப்பினுக் கென்கட வேனே.

உரை:

     கற்கும் கலைத் தொழிலை மேற் கொள்ளாமல் கள் முதலிய மயக்கப் பொருள்களை யுண்ணும் கொடியவனாகிய யான், பிணங்களின் ஊன் கறியை விரும்பியலையும் நாயினும் கடைப்பட்டவனாவேன்; புலால் விற்கும் இழிசெயலுடையவன்; உடம்பெல்லாம் வாயாகக் கொண்டு வீணாவனவற்றையே பேசுபவன்; இழிந்த புலாலை யுண்பவன்; பொய்யே உடைமையாகப் பெற்றவன்; சினமே குடிகொண்ட மனமுடையவனாய்ப் பொல்லாத கொலைச் செயல்களையே செய்தொழுகும் யான் தில்லையம்பலக் கூத்தப் பெருமான் திருவருள் நாட்டம் பெறுதற்கு யாது செய்யவல்லேன். எ.று.

     கலைத் தொழில் - நுல்களைக் கற்பதும் கற்பிப்பதுமாகிய தொழில்; கற்குமிடத்தினும் கற்பிக்குங்கால் கலையறிவு நுண்ணிதாய் வளம் பெறும் என அறிக. கள்ளை, எடுத்தோதுவதால் பிற அறிவை மயக்கும் பொருள்களும் கொள்ளப்படும். கொடுமைப் பண்பை வளர்ப்பனவாதலால், “கள்ளுணும் கொடியேன்” என்று கூறுகின்றார். கறிக் குழல் நாய் என்றலின், பிணங்களின் ஊன் கறி கொள்ளப்பட்டது. பிணங்களின் ஊனுன்ணும் நாய் பிற நாய்களிற் கடையாயதாகலின், “கறிக் குழல் நாயினும் கடையேன்” என உரைக்கின்றார். விலைத் தொழில் - விற்கும் செயல்; ஈண்டுப் புலால் விற்பனை கருதிற்று. எப்போதும் யாவரிடத்தும் வீண் மொழிகளே பேசுவது தோன்ற, “மெய்யெலாம் வாயாய் விளம்புறும் வீணனேன்” எனக் கூறுகிறார். உடம்பாற் செய்வன யாவும் வீண் செயலே என்றற்கு இவ்வாறு கூறுகின்றார் என்றுமாம். அசுத்தப் புலைத் தொழில் - இழிந்த புலாலையுண்டல்; மேலே விலைத் தொழிலைக் கூறினமையின், இஃது உண்ணும் புலைத்தொழிற் காயிற்று. சீற்றம், மிகுசினம். சிறுமை பெருமை கருதாமல் எதற்கும் சீறிச் சினக்கும் மனம் என்றற்கு, “சீற்றம் பொங்கிய மனம்” என விளம்புகின்றார். யாவரும் அஞ்சியும், வெறுத்தும் கையொழியத்தக்க செயலாதல் பற்றி, “பொல்லாக் கொலைத் தொழில்” என்று புகல்கின்றார். கலைத்தொழிலின்றிப் பொல்லாப் புலைத்தொழிலே புரிந்துறையும் எனக்கு இறைவன் திருவருட் பேறு எய்துமோ என ஏங்குமாறு புலப்பட, “கூத்தன் குறிப்பினுக்கு என் கடவேனே” என்று கூறுகின்றார்.

     (8)