3291. பணமிலார்க் கிடுக்கண் புரிந்துணுஞ் சோற்றுப்
பணம்பறித் துழல்கின்ற படிறேன்
எணமிலா தடுத்தார்க் குறுபெருந் தீமை
இயற்றுவேன் எட்டியே அனையேன்
மணமிலா மலரிற் பூத்தனன் இருகால்
மாடெனத் திரிந்துழல் கின்றேன்
குணமிலாக் கொடியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
உரை: கையிற் பணம் இல்லாத ஏழை மக்கட்கு இடையூறு செய்தும், சோறு வாங்கியுண்பதற்கு வைத்திருக்கும் ஏழையின் கைப் பணத்தைக் கவர்ந்தும் தீமை புரிந்து திரியும் கொடியவனாகிய யான், அன்புடன் அடுத்தவர்க்கு எய்தக் கடவ துன்பத்தை நினையாமல் மிக்க பெரிந்தீது செய்பவனாய் எட்டி மரம் போன்றவனாய், நன்மண மில்லாத பூவைப் போலவும், இருகால்களையுடைய எருது போலவும் நாட்டில் திருகின்றேன்; இவ்வாறு நற்பண்பில்லாத நான் தில்லையம்பலக் கூத்தப் பெருமானது திருவருள் நாட்டம் பெறுதற்கு யாது செய்யவல்லேன். எ.று.
பொன்னாலும் வெள்ளியாலும் செம்பாலும் காகிதத்தாலும் செய்யப்பட்டு வழங்கும் நாணயங்களைப் பணம் என வழங்குகின்றனர். பணத்தாற் பலவும் பெறலாம் என்பது பற்றி அதனைப் பெற முயல்வார்க்குக் கைகூடாதபடி தீங்கு செய்வதும், போதிய பணமின்றி உண்ணும் உணவை வாங்கி யுண்ணுமளவுக்கு வைத்திருக்கும் பணத்தை வலிதிற் கவர்ந்துகொண்டு துன்புறுத்துவதுமாகிய கொடுமை பெரிதாகலின், அதனை எடுத்து மொழியலுற்றுப் “பணமிலார்க் கிடுக்கண் புரிந்து உண்ணும் சோற்றுப் பணம் பறித்துழல்கின்ற படிறேன்” என்று கூறுகின்றார். இடுக்கண் - இடையூறு; தீங்குமாம். பறித்தல் - வலிதிற் கவர்தல். படிறு - குற்றம்; படிறுடையவனைப் படிறன் என்பர். ஒருவரையொருவர் அடுத்து வாழ்வது மக்களுயிர்க்குப் பொதுவாய் அமைந்த அன்புப் பண்பாதலால், “அடுத்தார்” என்று ஓதி, அப்பண்பை மனத்தின்கண் கொள்ளாமல் அவர்கட்கு மிக்க பெருந் தீங்கினைச் செய்வது தீவினையாதலால், அதனை “எணம் இலாது அடுத்தார்க்கு உறுபெருந்தீமை இயற்றுவேன்” எனவும், இவ்வியல் புடையார்களை எட்டி மரத்துக்கும் மணமிலா மலர்க்கும் உணர்விலாத எருதுக்கும் ஒப்புக் கூறலுற்று, “எட்டியே யனையேன் மணமிலா மலரிற் பூத்தனன் இருகால் மாடு எனத் திரிந்துழல்கின்றேன்” என வுரைக்கின்றார். நினைப்பினும் காணினும் காண்பார் உள்ளத்தில் வெறுப்புத் தோன்றுதலால் எட்டி யுவமமாயிற்று. உயிர்ப் பண்பாகிய ஈரமில்லாமை பற்றி, “மணமிலா மலரிற் பூத்தனன்” என்கின்றார். மனவுணர்வு இல்லாமை பற்றி “இருகால் மாடு” என இகழ்கின்றார். நற்பண்பில்லாத கீழ்மக்களைச் சான்றோர் “இருகால் எருது” என்பது வழக்கம். எடுத்தோதிய தீய வியல்புகள் குணமில்லாத கொடியவர்பால் விளங்கித் தோன்றுதலால் “குணமிலாக் கொடியேன்” என்று கூறுகின்றார். திருவருட் பேற்றுக்கு இவ்வியல்புகள் ஆகா வென்பது கருத்து. (9)
|