3292. கடியரில் கடியேன் கடையரில் கடையேன்
கள்வரில் கள்வனேன் காமப்
பொடியரில் பொடியேன் புலையரில் புலையேன்
பொய்யரில் பொய்யனேன் பொல்லாச்
செடியரில் செடியேன் சினத்தரில் சினத்தேன்
தீயரில் தீயனேன் பாபக்
கொடியரில் கொடியேன் அம்பலக் கூத்தன்
குறிப்பினுக் கென்கட வேனே.
உரை: விலக்கத் தக்கவருள்ளும் கடைப்பட்டவருள்ளும் கடியவனும் கடையவனுமாகிய யான், கள்வ ரெல்லாரினும் தலையாய கள்வன்; காம விச்சையாற் சிறுமையுற்றோர் பலரினும் சிறியவன்; கீழான புலையியல்பினையுடையவன்; என்னினும் கடையான பொய்யர் இல்லாதவன்; பொல்லாத தீயவர்கள் அனைவரினும் மிகுத்த தீயவன்; முன்கோபியர் பலரினும் முற்பட நிற்கும் முன்கோபி; பல வேறு தீய பண்புகளால் கொடுமை மிக்கவரில் மிக்ககொடியவனாயினேன்; ஆகவே அம்பலக் கூத்தனது அருள் நாட்டம் பெறுவது எனக்கு எவ்வாறாம். எ.று.
கடியர் - விலக்கத்தக்க குற்றமுடையவர். கடையர் - கீழ்மக்கள்; இவர்களைக் கயவர் என்றலு முண்டு. கள்வன் - திருடன். பொடியர் - சிறுமைப்பண்பாலும் செயலாலும் சிறுமையானவர். சினத்தர் - முன்கோபிகள். செடியர் - தீங்கு செய்தலையியல்பாகவுடையவர். தீயர் - தீமையேயுருவாயவர். கொடியவர் - கொடுமையே நினைந்தும் பேசியும் செய்தும் ஒழுகுபவர். (10)
|