4. பிறப்பவம் பொறாது பேதுறல்

(அந்தாதி)

    அஃதாவது, பிறந்த பிறப்பிடை யுண்டாகும் துன்பங்களை யெண்ணி வருந்துவதாம். ஒவ்வொருவரும் எண்ணியறிய வேண்டிய ஏற்றமுடைமை பற்றி, இதனை அந்தாதித் தொடையில் அமைத்துள்ளார்.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3293.

     குலத்திடையும் கொடியன்ஒரு குடித்தனத்தும் கொடியேன்
          குறிகளிலும் கொடியன்அன்றிக் குணங்களிலும் கொடியேன்
     மலத்திடையே புழுத்தசிறு புழுக்களிலும் கடையேன்
          வன்மனத்துப் பெரும்பாவி வஞ்சநெஞ்சப் புலையேன்
     நலத்திடைஓர் அணுஅளவும் நண்ணுகிலேன் பொல்லா
          நாய்க்குநகை தோன்றநின்றேன் பேய்க்கும்மிக இழிந்தேன்
     நிலத்திடைநான் ஏன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
          நிர்க்குணனே நடராஜ நிபுணமணி விளக்கே.

உரை:

     குலம் குடித்தனங்களிலும் குறி குணங்களிலும் நேர்மையில்லாதவனாகிய யான் மலத்திற் புழுக்கும் சிறு புழுக்களினும் கடையவன்; வன்மையுற்ற மனத்தையுடைய பெரும்பாவி; வஞ்சம் நிறைந்த நெஞ்சினையுடைய புலைத்தன்மை கொண்டவன்; நலமாகியவற்றைச் சிறிதும் நெருங்குதல் இல்லாதவன்; பொல்லாத நாயும் கண்டு நகைக்கத்தக்க கீழ்மையுற்றுள்ளேன்; பேயினும் இழிக்கத் தக்க யான் இந்நிலவுலகத்தில் பிறந்த காரணம் தெரியேன்; பிறப்பித்த நின் திருவுள்ளம் யாதென்று அறியேன்; நிர்க்குண நடராசப் பெருமானாகிய நிபுண மணியே எனக்கு உரைத்தருள்க. எ.று.

     குலம் - நற்குண நற்செயல்களால் உயர்ந்தோர் குடிக் குளதாகும் சிறப்பு. குடித்தனம் - குடிமை. குறி - இயற்பெயரும் சிறப்புப் பெயருமாம். குணம் - நற்பண்பு நற் செயல்களால் உளதாகும் நலம். மண்ணிற் பிறந்த மக்கட்குக் குறியும் குணமும் முதலாகக் கூறிய நான்கும் இயல்பாக வுரியன. இவை நன்கு அமையாமை கண்டு வருந்துமாறு தோன்றக் “குலத்திடையும் கொடியன் ஒரு குடித்தனத்தும் கொடியன் குறிகளிலும் கொடியன் அன்றிக் குணங்களிலும் கொடியன்” என்று கூறுகின்றார். பிறந்தானுக்கு உரியன குறி குணங்கள்; அவன் பிறந்த குடிக் குரியன குலமும் குடிமையும் என அறிக. இக்கூறுகளில் செம்மையின்மை கண்டு தம்மைக் “கொடியேன்” என்று பழித்துரைக்கின்றார். மலத்திலே தோன்றி வளர்ந்து மலத்திலே மடியும் புழுப் போல மண்ணிலே பிறந்து வளர்ந்து மண்ணிலே கிடந்து மடியும் தன்மை பற்றி, “மலத்திடையே புழுத்த சிறு புழுக்களிலும் கடையேன்” என வருந்துகின்றார். அறிவில்லாத புழுவின் வேறுபட்டு அறிவுடையனாய்த் தோன்றி வளர்ந்து மடிக்கின்றமை பற்றி, “கடையேன்” எனக் குறிக்கின்றார். மனத்தின் கண் அன்பும் அருளும் நிலவாமைகண்டு “வன் மனத்து” என்றும், அதனால் நினைவும் செயலும் பாவமே விளைப்ப துணர்ந்து “பெரும்பாவி” என்றும் இயம்புகின்றார். நெஞ்சமாகிய கருவி வஞ்ச நினைவுகளைக் கொண்டு கீழ்மைச் செயற்கே விளைதலாதலால் “வஞ்ச நெஞ்சப் புலையேன்” எனப் புகல்கின்றார். குலமும் குடிமையும், கொண்டுயர்ந்தோர் நலத்தின்கண் பேரன்பு கொண்டு பிறங்குவர்; குலத்தினும் குடித்தனத்தும் கொடியவனாதலால் நலமுறுவனவற்றை நயவாதொழிந்தேன் என்பாராய், “நலத்திடை யோர் அணுவளவும் நண்ணுகிலேன்” என வுரைக்கின்றார். “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைத் குலத்தின்கண் ஐயப்படும்” (குறள்) என்று சான்றோர் கூறுவதறிக. சிறிதும் என்னும் பொருளில் “அணுவளவும்” என மொழிகின்றார். அவா வடிவாய்த் தீரும் வாயிலின்றி வருந்துவது பேய்; தீரும் வாயிலுடையனாகியும் தீராமல் கெட்டலைதலால் “பேய்க்கு மிக இழிந்தேன்” என்கின்றார். இழிவை மிகுத்துக்காட்டற்கு “நாய்க்கு நகை தோன்ற நின்றேன்” என நொந்து ஏசுகின்றார். குண தத்துவத்துக்கு அதீதமாய் அப்பாலாய் உள்ளமையால் சிவனை “நிர்க்குணனே” எனவும், ஆடற் கலைக்கு அரசனென்பது பற்றி “நடராச”னெனவும், சிறப்பு மிக்க மாணிக்க மணி போலும் திருமேனியுடையனாதலால் “நிபுண மணியே” என்று பரவுகின்றார். இவ்வருட் பாட்டுத் திருநாவுக்கரசரது “குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிதுடையேன் கோலமாய நலம் பொல்லேன்” என வரும் திருத்தாண்டகத்தை நினைப்பிப்பது காண்க.

     இதனால், பிறப்புக் கமைந்த குணம் குறி குலம் குடிமை ஆகியவற்றின் பொல்லாங் குரைத்து வருந்தியவாறாம்.

     (1)