3294.

     விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்துகிடந் தழுது
          விம்முகின்ற குழவியினும் மிகப்பெரிதும் சிறியேன்
     அளக்கறியாத் துயர்க்கடலில் விழுந்துநெடுங் காலம்
          அலைந்தலைந்து மெலிந்ததுரும் பதனின்மிகத் துரும்பேன்
     கிளக்கறியாக் கொடுமைஎலாம் கிளைத்தபழு மரத்தேன்
          கெடுமதியேன் கடுமையினேன் கிறிபேசும் வெறியேன்
     களக்கறியாப் புவியிடைநான் ஏன்பிறந்தேன் அந்தோ
          கருணைதடத் தரசேநின் கருத்தைஅறி யேனே.

உரை:

     விளக்கொளியில்லாமல் இருள் படிந்துள்ள ஓர் அறையிற் கவிழ்ந்து கிடந்து அமுதழுது மயங்குகின்ற குழவியினும் அறிவால் மிக்க சிறுமையை யுடைய யான் அளந்து காண முடியாத துன்பமாகிய கடலில் விழுந்து பன்னெடுங் காலமாக அலைப்புண்டு மென்மையுற்ற துரும்பினும் மிக மெலிந்த துரும்பு போன்று, வாயாற் சொல்ல முடியாத கொடுமை வகை யத்தனையும் தோற்றுவித்த பழுத்த மரம் போன்றும், கெடுமதியும் கடுஞ் செயலும் உடையனாய், கேலி பேசித் திரியும் வீணனாயினேனாதலால், குற்ற மறியாத இவ்வுலகின்கண் ஏன் பிறந்தேனோ? அருள் நடனத்தைச் செய்யும் ஆடலரசே, நினது திருவுள்ளத்தை அறிகிலேன். எ.று.

     பிறந்து சின்னாள் கழிந்ததும் தாய் முகம் மகிழும் சிறு குழுவி சில இரண்டொரு திங்கள் வளர்ச்சியிற் குப்புறக் கவிழ்ந்து ஒளி கண்டு மகிழ்தலும் இருள் கண்டு அஞ்சி யழுவதும் செய்தல் இயல்பாதலின், “விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்து அழுது விம்முகின்ற குழவி” எனக் கூறுகின்றார். கேவலத்தில் ஆணவ மலவிருளிற் கிடந்த ஆன்மா சகலத்தில் உடம்பொடு கூடி உலகியலறி வொளி பெற்று அதனையே நோக்குவதும், பின்னர்த் திருவருள் ஞானம் பெற்று முத்தி பெறுவதும் இதன் உள்ளுறு பொருள், சகல நிலையில் மண்ணில் உடலொடு கூடிக்குழவிப் பருவத்தில் பொறியறிவு வளரப் பெறுதலின், இருட்டறையில் கவிழ்ந்து கிடந்து ஒளியின்மைக் கஞ்சிப் பன்முறையும் அழுது மயங்கி உறங்கி விடும் இயல்பு இதனால் எடுத்தோதுகின்றார். போதிய பொறியறிவு இன்மையாற் சிறுமையுறும் குழவி போல, உண்மை யறிவின்றிச் சிறுமையுற்றமை தோன்றக் “குழவியினும் மிகப் பெரிதும் சிறியேன்” என உரைக்கின்றார். உலகியல் துன்பங்கள் கடலலை போற் பெருகி வருதலால், “அளக்கறியாத் துயர்க் கடலில் விழுந்து” என்றும், நெடுங் காலமாக நீரிற் கிடந்து அலைப்புண்ட துரும்பு மென்மை மீதூர்ந்து கெடுவது போலத் துயர்க் கடலின் இடைவிடாத் தாக்குதலால் உடலுணர்வும் உயிருணர்வும் மெலிவுறுதல் விளங்க, “மெலிந்த துரும்புதனின் மிகத் துரும்பேன்” என்று சொல்லுகின்றார். துரும்பு போன்றேனென்றற்குத் துரும்பேன் என்கின்றார். உணர்வு வகையில் துரும்பு போன்றேனாயினும் இலைதோறும் பழுத்து நிற்கும் வளவிய மரம் போல நினைவு சொல் செயலனைத்தும் கொடுமைகளையே கொண்டுள்ளேன் என்பாராய், “கொடுமை யெலாம் கிளைத்த பழுமரத்தேன்” என வுரைக்கின்றார். கிளத்தல் - சொல்லுதல். ஆக்கத்துக் குரிய நினைவும் செயலும் இல்லாதவன் என்றற்குக் “கெடுமதியேன்” என்றும், அருட்குரிய, மென்மைப் பண்பு இல்லாதவன் என்றற்குக் “கடுமையினேன்” என்றும், கண்டாரை யிகழ்ந்து பேசும் இயல்புடையேன் என்றற்குக் “கிறி பேசும் வெறியேன்” என்றும் இயம்புகின்றார். நன்மை சிறிதும் இல்லாமை வெறுமை. குற்றப் பொருளதாய களங்கம் என்பது களக்கு என வந்தது. தன் கண் வாழ்வாங்கு வாழ்வாரைத் தெய்வப் பேரின்பம் எய்துவிக்கும் பெருமையுடையதாகலின், “களக்கறியாப் புவி” எனவும், மேற்கூறிய குற்ற வகை யுடைமையால் கீழ்மை எய்தற் பாலனாகிய எனக்கு இப் புவி வாழ்வு பொருந்தாதாகலின், “புவியினிடை நான் ஏன் பிறந்தேன்” எனவும் இயம்புகின்றார். உலகுயிர்கட்கு அருள் வழங்குவது நடராசப் பெருமானது திருக்கூத்தாகலின், “கருணை நடத்தரசே” என்றும், இறைவன் திருக்குறிப்பை அறிவதன் அருமை நினைந்து “அந்தோ நின் கருத்தையறியேனே” என்றும் இசைக்கின்றார்.

     இதனால், தன் பிறப்பின் நோக்கம் அறிய மாட்டாமைக்கு வருந்தியவாறாம்.

     (2)