3295.

     அறியாத பொறியவர்க்கும் இழிந்ததொழி லவர்க்கும்
          அதிகரித்துத் துன்மார்க்கத் தரசுசெயுங் கொடியேன்
     குறியாத கொடும்பாவச் சுமைசுமக்கும் திறத்தேன்
          கொல்லாமை என்பதைஓர் குறிப்பாலும் குறியேன்
     செறியாத மனக்கடையேன் தீமையெலாம் உடையேன்
          சினத்தாலும் மதத்தாலும் செறிந்தபுதல் அனையேன்
     எறியாத புவியிடைநான் ஏன்பிறந்தேன் உன்றன்
          தயமறி யேன்மன்றில் இனித்தநடத் திறையே.

உரை:

     அறிவறியாத பொறிகளை யுடைய மூடர்களுக்கும் இழிதொழில் செய்பவர்க்கும் மிகுதியான துன்மார்க்கத்தை மேற்கொண்டு திரியும் கொடுமைப் பண்புடைய யான், நூல்கள் குறிக்காத கொடிய பாவங்களைச் செய்து அவற்றின் சுமையைக் தாங்கும் இயல்புடையனாகின்றேன்; கொல்லாமை யென்னும் நல்லறத்தைக் குறிப்பாகவும் எண்ணுவதில்லேன், அடங்காத மனத்தாற் கீழ் மகனாகிய நான் தீமையெனப்படுபவை அனைத்தையும் கொண்டுள்ளேன்; சினமும் செருக்குமாகிய குற்றங்கள் தங்குகின்ற புதர் போன்று இருக்கின்றேன்; தில்லையம்பலத்தில் இனிய நடம் புரிகின்ற இறைவனே, புறத்தே தள்ளுதல் இல்லாத பூமியின்கண் நான் ஏன் பிறந்தேனோ? உனது திருவுள்ளத்தை அறிகிலேன். எ.று.

     அறியாத பொறியவர், கண் காது முதலிய பொறிகளைப் பெற்றிருந்தும் காண்பது கேட்பது முதலிய செயல்களால் அறிவதறியாதவர். திருவள்ளுவர் கூறுவது போலக் “கோளில் பொறிகளை” யுடைய குணமில்லாதவர் என அறிக. இழிந்த தொழிலவர் - கண்டார் இகழும் தொழில் செய்பவர். அதிகரித்தல் - மிகுதல். துன்மார்க்கத்து அரசு செய்தல் - தீய நெறியில் தலைவராதல். பாவச் செய்கை யென நூலோர் வகுத் தோதியவற்றுள் அடங்காத மிக்க பாவம் என்றற்குக் “குறியாத கொடும்பாவம்” என்றும், செய்த பாவ வினைப் பயனை நுகர்ந்து கழிக்குமளவும் தீராது சூழ்தலின், “பாவச் சுமை சுமக்கும் திறத்தேன்” என்றும் கூறுகின்றார். கொல்லாமை யாவது நல்லறம் என்று குறிக்கொள்ளத் தக்கது என்று எண்ணுதல் இல்லாதவன் என்று தெரிவிப்பாராய், “குறிப்பாலும் குறியேன்” என வுரைக்கின்றார். செறிவு - அடக்கம். நெறிப் படுத்தும் அறிவுக்கு அடங்காதோடும் மனம் குற்றமே செய்து கீழ்மைப் படுத்துதலால் “செறியாத மன கடையேன்” என்று செப்புகின்றார். குற்றமே யுருவாயவன் என முடிந்தது முடிப்பாராய்த் “தீமை யெலாம் உடையேன்” என்று தெரிவிக்கின்றார். கொடு விலங்கு ஒடுங்கும் பெரும் புதல் போலச் சினமும் செருக்கும் தனக்குள் இருக்குமாறு விளங்க, “சினத்தாலும் மதத்தாலும் செறிந்த புதல் அனையேன்” என வுரைக்கின்றார். வல்லோன் ஒருவன் கை வலித்தெறியினும் வானத் தெறிந்த கல் வேறெங்கும் செல்லாமல் தன் கண்ணே வந்தடையுமாறு ஈர்த்துக் கோடல் நிலத்தியல்பாகலின், “எறியாத புவி” என்கின்றார். தன்கண் பிறந்து வாழ்வாரை மயக்கித் தன்னையே காதலிக்கச் செய்யும் இயல்பினதாதலால் மண்ணக வாழ்வை “எறியாத புவி” எனக் கூறுகின்றார் எனினும் அமையும். குற்றவகை அனைத்தையும் கொண்டு பிரியர் பிரியவிடாத இவ்வாழ்க்கையிற் பிறப்பித்த நினது திருவுள்ளக் குறிப்பு எனக்குத் தெரிகின்ற தில்லை என்பாராய், “நான் ஏன் பிறந்தேன் உன்றன் இதய மறியேன்” என இசைக்கின்றார்.

     இதானலும் பிறவி நோக்கம் அறியாமை தெரிவித்தவாறாம்.

     (3)