3296. இனித்தபழச் சாறுவிடுத் திழித்தமலங் கொளும்ஓர்
இழிவிலங்கில் இழிந்துநின்றேன் இரக்கம்ஒன்றும் இல்லேன்
அனித்தநெறி யிடைத்தொடர்ந்து மனித்தஉடம் பெடுத்த
அறக்கடையர் தமக்கெல்லாம் அறக்கடையன் ஆனேன்
பனித்தமனக் குரங்காட்டிப் பலிக்குழலும் கொடியேன்
பாதகமும் சூதகமும் பயின்றபெரும் படிறேன்
தனித்தகடுங் குணத்தேன்நான் ஏன்பிறந்தேன் நினது
தனிக்கருத்தை அறிந்திலேன் சபைக்கேற்றும் ஒளியே.
உரை: ஞான சபையில் ஒளிரும் ஞான விளக்கமே, இனிக்கின்ற பழத்தின் சாறு இருப்ப அதனை விட்டு இழிந்த மலத்தை விரும்பி யுண்ணும் இழிவான விலங்கினும் இழிந்த செயலை யுடையவனாய் இரக்க வுணர்வு சிறிது மில்லாதவனாகிய யான், நிலையில்லாத நெறி பற்றி அதனையே தொடர்ந்து மனித வுடம்பெடுத்து உழலுகின்ற பாவிகள் எல்லாரினும் கடைப்பட்ட பாவியாயினேன்; குரங்காட்டி உண்பலி இரக்குவனைப் போலத் துடிக்கின்ற மனத்தை யாட்டி உலகியற் போகத்தை நுகர்கின்றேன்; பாதகச் செயல்களையும் சூதகச் செயல்களையும் புரிந்த பெருங் குற்றத்தை யுடையேன்; பிறர் எவர்க்குமில்லாத தனிக் கடுங்குணமுடையனாய் யான் ஏன் பிறந்தேனோ? நின் தனித் திருவுள்ள மறியேன் எ.று.
இழிந்த மலங்கொளும் விலங்கு பன்றி, நாய் முதலியனவாம். இரக்கம். உயிர் இரக்கப் பண்பு. நிலைத்த பயன் விளைவிக்க ஒழுக்கமும் தொழிலும் மேற்கொண்டலையும் நெறி, அநித்த நெறியாகும். அறன் கடையர் - அறத்துக்கு மாறாயவற்றைச் செய்யும் பாவிகள்; அறங்கடை யென்பது அறக்கடை என வந்தது. பின்னது முழுத்த கீழ்மகன் என்னும் பொருளது. ஒரு பொருளினும் ஒன்றி நில்லாமல் பல பொருள்களின் மேற் சென்று அலைந்தவண்ணமிருப்பது பற்றி, “பனித்த குரங்கு” என வுரைக்கின்றார். பனித்தல் - நடுங்குதல். குரங்காட்டிகள் வீடு தோறும் சென்று குரங்கை ஆட்டிக் காட்டி உண்பலி இரப்பவராதலின், மனம் போன வழிச் சென்று பெறுவன பெற்று நாளைக் கழிக்கும் தமது செயலுக்கு உவமம் செய்கின்றார். பாதகம் - பெருங் குற்றம். சூதகம் - உள்ளே சூது நிறைந்த செயல்; பழவினை இறப்புப் பிறப்புக்களால் மனையவர் கொண்டாடும் தீட்டு - பெறும் படிறு - பெருங்குற்றம். பலரோடும் கலந்து உறவாடி இன்புறும் பண்பின்மை விளங்கத் “தனித்த கடுங் குணத்தேன்” என வுரைக்கின்றார். பெருமையால் தனிச் சிறப்புறுவது கண்டு, “தனிக் கருத்தை அறிந்திலேன்” என வருந்துகின்றார்.
இதனால், தம்பால் உள்ள குற்றங்களை எடுத்தோதி முறையிட்டவாறாம். (4)
|