3297.

     ஏறுகின்றேம் எனமதித்தே இறங்குகின்ற கடையேன்
          ஏதமெலாம் நிறைமனத்தேன் இரக்கமிலாப் புலையேன்
     சீறுகின்ற புலியனையேன் சிறுதொழிலே புரிவேன்
          செய்வகைஒன் றறியாத சிறியரினும் சிறியேன்
     மாறுகின்ற குணப்பேதை மதியதனால் இழிந்தேன்
          வஞ்சம்எலாம் குடிகொண்ட வாழ்க்கைமிக உடையேன்
     வீறுகின்ற உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
          மெய்க்கருத்தை அறிந்திலேன் விளங்குநடத் தரசே.

உரை:

     ஞான விளக்கம் புரியும் திருநடனத்தை யுடைய ஆடலரசே, உயர்கின்றேம் என எண்ணிக் கீழ் நோக்கி விழுகின்ற அறிவால் கடையனாகிய யான், குற்றமெலாம் நிறைந்து இரக்கப் பண்பு இல்லாத புலைத்தன்மையை யுடைய யான் சீறுகின்ற புலி போன்றவன்; சிறு செயல்களையே செய்பவன்; செயற் குரியவற்றைச் செய்யும் வகையினை அறியாத சிறியவர்களின் சிறியவன்; கணந்தோறும் மாறுகின்ற குணக் கேடன்: அதற்கேற்ற அறிவால் கீழ்மையுற்றேன்; வஞ்சனை வகை யாவும் பொருந்திய வாழ்க்கையைக் கொண்டவன்; மேம்படுகின்ற இவ்வுலகின்கண் ஏனோ பிறந்தேன்; நின்னுடைய உண்மைக் கருத்தை அறிகிலேன். எ.று.

     உயர்வதை ஏறுதலென்றும், இழிவதை இறங்குத லென்றும் வழங்குதல் பற்றி, “ஏறுகின்றேம் என மதித்தே இறங்குகின்ற கடையேன் என்று கூறுகின்றார். மதித்தல - கருதுதல். ஏதம் - குற்றம். மனம் மொழி மெய் என்ற முக் கரணங்களாலும் செய்யப்படும் குற்றவகை யெல்லாம் அடங்க, “ஏத மெலாம் நிறை மனத்தேன்” எனவும் உயிர்க்குரிய நற் பண்புகளில் தலையாயது இரக்க மாகலின், அதனை விதந்து “இரக்கமிலாப் புலையேன்” என்றும் இயம்புகின்றார். புலையேன் - புலைத்தன்மை பொருந்தியவன். தன் சொற் செயல்களால் பிறரை யச்சுறுத்தும் இயல்பு பற்றிச் “சீறுகின்ற புலியனையேன்” என்றும், சீறி யச்சுறுத்துவதே சிறு தொழிலாதலால், “சிறு தொழிலே புரிவேன்” என்றும், சிறு தொழிலும் சிறுமைப் பண்பும் சிறு மதியும் மிக்கிருப்பது விளங்க, “செய்வகை யொன்றறியாத சிறியரினும் சிறியேன்” என்றும் தெரிவிக்கின்றார். கணந்தோறும் மாறியியங்குவது குணங்கட்கு கியல்பாதலால் “மாறுகின்ற குணப் பேதை” எனவும், ஏதம் கொண்டு ஊதிய மிழக்கும் செயலுடைமை தோன்ற, “பேதை மதி” எனவும், அதனாற் கீழ்மை யுறுவதால் “இழிந்தேன்” எனவும் இசைக்கின்றார். இக் குறைபாடுகளோடு வஞ்ச நினைவுகளும் செயல்களும் வாழ்வு முழுதும் நிறைந்துள்ளன வென்பாராய், “வஞ்சமெலாம் குடி கொண்ட வாழ்க்கை மிக வுடையேன்” என்றும், பிறந்தாரை வாழ்வாங்கு வாழ்ந்து வானப் பெரு வாழ்வு நல்கும் சிறப்புடைய உலக வாழ்வில் மாறுபட்ட இயல்புடன் நான் தோன்றியிருப்பது ஒரு புதிராக இருத்தலால், “நான் ஏன் பிறந்தேன் என்றும், நினது திருவுள்ளக் கருத்தை என்னால் அறிய முடியவில்லை என்றற்கு, “நினது மெய்க் கருத்தை அறிந்திலேன்” என்றும் உரைக்கின்றார். வீறுதல் - மேன்மையுறுதல்.

     இதனால், வீறுகின்ற உலகில் மாறான இயல்பு அமைந்தமைக்கு காரணம் சிந்தித்தவாறாம்.

     (5)