3298. அரசர்எலாம் மதித்திடப்பேர் ஆசையிலே அரசோ
டால்எனவே மிகக்கிளைத்தேன் அருளறியாக் கடையேன்
புரசமரம் போற்பருத்தேன் எட்டிஎனத் தழைத்தேன்
புங்கெனவும் புளிஎனவும் மங்கிஉதிர் கின்றேன்
பரசும்வகை தெரிந்துகொளேன் தெரிந்தாரைப் பணியேன்.
பசை அறியாக் கருங்கல்மனப் பாவிகளிற் சிறந்தேன்.
விரசுநிலத் தேன்பிறந்தேன் நின்கருத்தை அறியேன்
வியக்குமணி மன்றோங்கி விளங்குபரம் பொருளே.
உரை: கண்டோர் வியக்கும் மணிகள் பதித்த ஞான சபையில் உயர்ந்து விளங்கும் பரம் பொருளாகிய நடராசப் பெருமானே, அரசர் மதிக்க வாழ வேண்டுமென்ற ஆசையுற்ற யான், அரச மரத்தோடு ஒட்டி வளரும் ஆலமரம் போலக் கிளைஞர் மிக வுடையவனாயினேன்; ஆசைக் கொத்த அருட் பண்பில்லாமல் கீழ்ப்பட் டொழிந்தேன்; புரச மரம் போல அடியும் வேரும் பருத்து எட்டி மரம் போலத் தழைத்துள்ளேன்; எனினும் புங்கு போலவும் புளி மரம் போலவும் காய்ந்து உதிர்கின்றேன்; உன்னை வழிபடும் முறையை யறியேன்; அறிந்தவரைப் பணிந்தேனும் அறிந்து கொள்கின்றேனில்லை; ஈரமே காணாத கருங்கற் போன்ற மனமுடைய பாவி மக்களில் மிக்ககோனாக வுள்ளேன்; நலம் பெறற்குப் பொருந்திய இந் நிலவுகலத்தில் நான் ஏன் பிறந்தேன்; நின் திருவுள்ளத்தை அறியேன் எ.று.
உயர்ந்த பல நன்மணிகள் இழைத்த அம்பலமாதலால், தில்லையம்பலத்தை “வியக்கு மணிமன்று” எனச் சிறப்பிக்கின்றார். நடராசப் பெருமான் பரம்பொருளின் சகளத் திருவுருவாதலால் “பரம்பொருளே” எனப் பரவுகின்றார். அரசர் மதிக்க வாழ்வது மண்ணக வாழ்வுக்கு மாண்பாதலால், “அரசரெலாம் மதித்திடப் பேராசையிலே கிளைத்தேன்” எனவும், அந்நிலையில் தனி மரமாதலின்றி அரசொடு கூடித் தழைத்துக் கிளைத்திருக்கும் ஆலமரத்தைக் காட்டிக் கிளைஞர் நடுவே யிருக்கும் திறத்தைப் புலப்படுத்துவாராய், “அரசோடு ஆல் எனவே மிகக் கிளைத்தேன்” எனவும் இயம்புகின்றார். இப்பெரு வாழ்வுக்கு மாண்பு தரும் அருட் பண்பு என்பால் இல்லை யென வருந்துவாராய், “அருளறியாக் கடையேன்” என்கின்றார். புரச மரம் நூல்களில் புரோசு எனவும் வழக்கிற் பூவரசு எனவும் வரும். வேரும் அடியும் பருத்திருப்பினும் காழ் குறைந்ததாகலின் பயன் பெரிதுடைய தன்று; எட்டி தழைக்கினும் கசப்பு மிகுதியால் பயன்படுவதில்லை; இது பற்றியே, “புரச மரம் போற் பருத்தேன் எட்டி யெனத் தழைத்தேன்” எனக் கூறுகிறார் புன்க மரம் - புங்கு, புங்கம் என வழங்கும். இலையுதிர் காலத்தில் முற்றவும் உதிருமியல்பினவாகலின், “புங்கெனவும் புளியெனவும் மங்கி யுதிர்கின்றேன்” என விளக்குகின்றார். இதனால் மெலிந்தமை யுணர்த்தியவாறு. பரசுதல் - இறைவனை வழிபடுதல். வழிபாட்டு முறை தெரியாவிடினும் தெரிந்தாரை யடைந்து கற்றுக் கொளலாமாயினும் யான் அது செய்திலேன் என்பாராய், “தெரிந்தாரைப் பணியேன்” எனத் தெரிவிக்கின்றார். பசை - ஈரம். பன்னூறாண்டு நீருட் கிடப்பினும் கருங்கல் ஈரம் பற்றாதாகலின், “பசை யறியாக் கருங்கல்” எனப் பகர்கின்றார். பாவிகளில் தலையாய கொடும்பாவி என்றற்குப் “பாவிகளிற் சிறந்தேன்” என்று இயம்புகின்றார். விரசுதல் - பொருந்துதல்.
இதனால், நலம் விரவிய நிலத்தில் மாறாகப் பிறந்துளேன் என்று வருந்தியவாறாம். (6)
|