3299.

     பொருளறியேன் பொருளறிந்தார் போன்றுநடித் திங்கே
          பொங்கிவழிந் துடைகின்றேன் பொய்யகத்தேன் புலையேன்
     மருளறியாத் திருவாளர் உளங்கயக்கத் திரிவேன்
          வையுண்டும் உழவுவா மாடெனவே தடித்தேன்
     வெருளறியாக் கொடுமனத்தேன் விழற்கிறைத்துக் களிப்பேன்
          வீணர்களில் தலைநின்றேன் விலக்கனைத்தும் புரிவேன்
     தெருளறியேன் உலகிடைநான் ஏன் பிறந்தேன் நினது
          திருவுளத்தை அறிந்திலேன் தெய்வநடத் தவனே.

உரை:

     தில்லையம்பலத்தின் கண் தெய்வத் திருநடம் புரியும் பெருமானே, உறுதிப் பொருளாகிய மெய்ம்மை யுணராதவனாகிய யான், உணர்ந்தவரைப் போல இவ்வுலகில் நடித்துப் பெருமிதமுற்றுக் கெடுவதுடன் பொய் நிறைந்த நெஞ்சத்தாற் புலைத்தொழிலனாகின்றேன்; மயக்கமில்லாத ஞானச் செல்வர் கண்டு மனம் வெறுக்குமாறு நாட்டில் உலாவி. வேண்டுமளவு வைக்கோலை யுண்டும் உழவுக்குப் பயன்படாத எருது போல உடல் பருத்துள்ளேன்; அச்சமில்லாத கொடிய மனத்தையுடையனாய்ப் பயனில்லாதவற்றைச் செய்து களிக்கின்றேன்; வீண் செயல் புரிபவர்களில் முன்னணியில் நின்று நூலோர் கூடாதென விலக்கியதைச் செய்து கெடுகின்றேன்; இவ்வாற்றல் தெளிவில்லாத யான் இவ்வுலகில் ஏன் பிறந்தேனோ? பிறப்பித்த நினது திருவுள்ளக் குறிப்பை அறியேன். எ.று.

     பொருள் - உயிர்க் குறுதி பயக்கும் மெய்ப்பொருள். மக்களாய்ப் பிறந்தார் உறுதிப் பொருளை யறிந்து ஞான விளக்கம் பெற்று வீடு பெறுவது கடனாதலின், “பொருளறியேன்” எனப் புகல்கின்றார். அறிந்தாரைப் போலக் கண்டோர் வியந்து பரவ ஒழுகுவது புலப்பட, “பொருளறிந்தார் போன்று நடித்து” என்றும், பிறர் தன் பொய்ம்மை யறியாது போற்றுவதால் மகிழ்ச்சி மிக்குக் கெடுமாறு தோன்ற, “பொங்கி வழிந்து உடைகின்றேன்” என்றும், உடைகிற போது பூதமைந்தும் உள்ளுக்குள் கண்டு எள்ளி நகுவது பற்றிப் “பொய்யகத்தேன் புலையேன்” எனத் தம் செயலை வெறுத்தும் பேசுகின்றார். பொய் யொழுக்கமும் புலைத் தொழிலாதலால் “புலையேன்” என்று குறிக்கின்றார். “வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள் அஞ்சும் அகத்தே நகும்” (குறள்) என்று சான்றோர் கூறுவது காண்க. மனத்தின்கண் மருட்சியின்றி உள்ளதுணரும் ஞானச் செல்வர்களை, “மருளறியாத் திருவாளர்” எனப் புகழ்கின்றார். தனது பொய்ம்மையைக் கண்டு தமது மனத்தின்கண் கசப்புற்று வெறுப்பது பற்றி, “உளம் கயக்க” எனவும், அதனை யுணர்ந்தும் நாணமின்றி உலவுமாறு விளங்கத் “திரிவேன்” எனவும் இயம்புகின்றார். உண்பன வுண்டும் உரியன செய்யாமல் உடல் பருத்து உயிர் வாழ்வது பற்றிய அருவருப்பை, “வை யுண்டும் உழுவுதவா மாடெனவே தடித்தேன்” எனச் சாற்றுகின்றார். கசத்தல் - கயத்தல் என வந்தது. மாடு - எருது. தடித்தல் - உடல் தசைமிக்குப் பருத்தல். தடி - தசை. வெருள் - அச்சம்; அஃதாவது பழி பாவங்கட்கு அஞ்சுதல், அச்சமும் நாணமும் நல்வாழ்வுக்கு இன்றியமையாதனவாக, அவை யின்மை கொடுமையாதலின், “வெருளறியாக் கொடுமனத்தேன்” என விளம்புகின்றார். பயனில்லன செய்தல், விழற் கிறைத்தல் எனப்படுகிறது. ஏழைத்தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம் பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே” (தோணோக்) என மணிவாசகர் உரைப்பது காண்க. களித்தல், மயங்குதல். தலைநிற்றல் - முற்படுதல். விலக்கு, ஆகா வென விலக்கப்பட்ட குற்றங்கள். தெருள் - அறிவுத் தெளிவு. செய்வனவும் தவிர்வனவும் தேர்ந்து வாழ்வாங்கு வாழ்தற் கமைந்த உலகின் கண் மாறுபட்ட குணம் செயல்களுடன் தான் பிறந்தமைக்கும் காரணம் காண்கின்றமை தோன்ற, “உலகிடை நான் ஏன் பிறந்தேன் நினது திருவுளத்தை அறிந்திலேன்” என முறையிடுகின்றார்.

     இதனால், விலக்கியன செய்து கெடும் தமது பிறப்புக்குக் காரணம் எண்ணியவாறாம்.

     (7)