3300. தவம்புரியேன் தவம்புரிந்தார் தமைப்போல நடித்துத்
தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம்போல இருந்தேன்
பவம்புரிவேன் கமரினிடைப் பால்கவிழ்க்கும் கடையேன்
பயனறியா வஞ்சமனப் பாறைசுமந் துழல்வேன்
அவம்புரிவேன் அறிவறியேன் அன்பறியேன் அன்பால்
ஐயாநின் அடியடைந்தார்க் கணுத்துணையும் உதவேன்
நவம்புரியும் உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
நல்லதிரு உளம் அறியேன் ஞானநடத் திறையே.
உரை: தவம் செய்வதில்லாத யான், தவம் செய்யும் தக்கோர் போல நடித்துத் தருக்குகின்றேன்; உணர்வில்லாத சடப் பொருள் போல இதுகாறும் இருந்தொழிந்தேன்; மேலும் பிறப்புக்கு ஏதுவாவனவற்றையே செய்து நன்கலத்திற் பெய்தற்குரிய பாலை நிலக் கமரின்கண் சொறியும் கடையவனாயினேன்; பயன்படாத வஞ்சம் உரைந்த மனமாகிய கற்பாறையைச் சுமந்து திரிகின்றேன்; இவ்வாறு அவமாவனவற்றைச் செய்யும் யான் அறியத் தகுவதறிதல் இல்லேன்; ஞானம் பயக்கும் அன்பு நலம் அறியேன்; மெய்யன்பு கொண்டு, நடம் புரியும் இறைவனாகிய நின் திருவடித் தொண்டர்க்கு அணுவளவும் உதவாதவன்; இத்தகைய யான் நாளும் புதுவது காணும் உலகின்கண் நான் பிறந்த காரணம் அறிகிலேன்; பிறப்பித்த நினது நலமே யுருவாகிய திருவுள்ளக் குறிப்பு யாதோ, தெரியேன். எ.று.
தவமாவது, உற்ற துன்பங்களைப் பொறுத்துக் கொள்வதும், தீங்கு செய்வன செய்யாதன என்ற வேற்றுமையின்றி ஏனை யுயிர்கட்குத் தீமை செய்யாமையுமாகும். இந்த உயரிய தவத்தைச் செய்யாத யான் தவம் செய்பவர் போல நடித்துப் பெருமிதம் கொண்டு உணர்வில்லாத சடப் பொருள் போலக் கிடந் தொழிந்தேன் என்பார், தவம் புரிந்தார் தமைப்போல நடித்துத் தருக்குகின்றேன் உணர்ச்சியிலாச் சடம் போல இருந்தேன்” என மொழிகின்றார். தருக்குதல் - பெருமிதம் கொள்ளுதல். சடம் - அறிவில்லாத பொருள்; தன்மை குறித்தற் கென்றே “உணர்ச்சி யில்லாச் சடம்” என வுரைக்கின்றார். பவம் - பிறப்பு. பல்வகைப் பிறப்புக்கட்கேதுவாகிய வினைகளைச் செய்வேன் என்பார், “பவம் புரிவேன்” என்கின்றார். நன்கலத்திற் பெய்தற்குரிய பாலை நிலத்தில் வெம்மை மிகுதியால் உண்டாகும் வெடிப்பால் ஊற்றுவோர் முழு மூடராவர்; அவரை யொப்ப நல்லறிவில்லாத கீழ்மகன் என்றற்குக் “கமரினிடைப் பால் கவிழ்க்கும் கடையேன்” என்று கூறுகின்றார். நன்பொருளைத் தக்கார்க்கு உதவாத தீயவன் என்பது கருத்து. வஞ்ச நினைவுகளால் உண்டாகும் தீமைகளை நினையாமல் மனத்தின்கண் இடையறாமல் கொண்டிருப்பவன் என்பாராய், “பயனறியா வஞ்ச மனப்பாறை சுமந்துழல்வேன்” என்று சொல்லுகின்றார். மனத்தைப் பாறை என்பதால் அதனைத் தாங்கும் தம்மை, “சுமந்து உழல்வேன்” என்று கூறுகின்றார். வஞ்ச நினைவால் உறைப்புண்டு இரக்கப் பசையின்றி யிருப்பது பற்றி, “மனப்பாறை” எனல் வேண்டிற்று. அவம் - வீண். அவம் புரிதலாவது பயனில்லாத செயல்களைச் செய்தல். பயனுடைய செயல்களாவன அறிவறிதல், அன்பு செய்தல், அன்பால் அடியார்கட்கு ஆவன வுதவுதலாகும். இவற்றைச் செய்யாமை அவமாதலால், “அறிவறியேன் அன்பறியேன் அன்பால் ஐயா நின் அடி யடைந்தார்க்கு அணுத் துணையும் உதவேன்” என இயம்புகின்றார். அடி சேர்ந்தார், இறைவன் திருவடியை நினைவிற் கொண்டு நினைந்தொழுகும் சான்றோர். அவர்கட்கு அணுவளவு உதவின் அது மலை யளவாய்ப் பெருகும் எனப் பெரியோர் கூறுவதால் “அணுத் துணையும் உதவேன்” என்கின்றார். “சிவஞானச் செயலுடையோர் கையில் தானம் திலமளவே செய்திடினும் நில மலை போல் திகழ்ந்து, பவமாயக் கடலின் அழுந்தாத வகை யெடுத்துப் பரபோகம்” (சிவசித்தி) துய்ப்பிக்கும் எனப் பெரியோர் கூறுவது காண்க. உலகில் வாழ்கின்ற மெய்ஞ்ஞானிகளும் விஞ்ஞானிகளும் அருணெறியினும் பொருணெறியினும் புதுப் புது உண்மைகளைக் கண்டும் காட்டியும் வருதலின், “நவம் புரியும் உலகு” என நவில்கின்றார். பழைமைச் சேற்றில் அழுந்தி உலகின் நவ நவ உண்மைகளை எண்ணாமற் கெடுகின்ற யான் பிறந்த காரணம் அறியேன் என்றற்கு, “நான் ஏன் பிறந்தேன் நினது நல்ல திருவுளம் அறியேன்” எனப் பரி புலம்புகின்றார்.
இதனால், நலம் புரியும் உலகிற் பவம் புரிந்ததேன் என எண்ணியவாறாம். (8)
|