3301. இறைஅளவும் அறிவொழுக்கத் திச்சையிலேன் நரகில்
இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்
பொறைஅளவோ நன்மைஎலாம் போக்கில்விட்டுத் தீமை
புரிகின்றேன் எரிகின்ற புதுநெருப்பிற் கொடியேன்
நிறைஅளவோ முறைஅளவோ நிலைஅளவுந் தவிர்ந்த
நெடுஞ்சால நெஞ்சகத்தேன் நீலவிடம் போல்வேன்
சறையளவா உலகிடைநான் ஏன்பிறந்தேன் நினது
கருத்தறியேன் கருணைநடங் காட்டுகின்ற குருவே.
உரை: அருள் நடனம் காட்டி ஞான மருளும் குருபரனாகிய சிவனே, நல்லறிவு நல்லொழுக்கங்களில் சிறிதளவும் விருப்பமில்லாத யான் நரகத்திற் கிடந்து வருந்தும் கீழ்மக்க ளெல்லாரினும் இழிந்தவனாய் பொறுமையை யுள்ளிட்ட நற்பண்புகளனைத்தையும் கைவிட்டகலப் போக்கித் தீமையே புரிகின்றவனாய், ஓங்கி எரிகின்ற புது நெருப்பினும் கொடுமை மிக்கவனாயினேன்; நிறையும் முறையும் நடுநிலையும் இல்லாத மிக்க நெடிய நெஞ்சினைக் கொண்டு கரிய விடம் போல இருக்கின்றேன்; பிறப்பெல்லை காணலாகாத உலகின்கண் நான் பிறந்த காரணம் அறியேன்; பிறப்பித்த திருவுள்ளக் குறிப்பும் தெரிகிலேன். எ.று.
உறுவது கொண்டு இத்தன்மையது இவ்வுலகியல் என அளந்து காண மாட்டாத மாண்புடைய தென்பாராய், “உறை யளவா வுலகு” என உரைக்கின்றார். உறுவது - உறை யென வந்தது. இங்கே பிறந்து வாழ்வோர் அறிவு ஒழுக்கங்கள் நிறைந்தவராயின் நற்பேறு பெறுவர்; யான் அவற்றிற் சிறிதளவும் விருப்பமில்லாதவன் என்பார், “இறையளவும் அறிவொழுக்கத்து இச்சையிலேன்” எனக் கூறுகின்றார். இவ்வுலகில் வாழ்வாங்கு வாழாதவர் நரக வகைகளில் கீழாம் நரகில் கீழ்மக்களாய்க் கிடந்து வருந்துவர்; யான் அவரினும் கீழ்ப்படுபவன் என்பாராய், “நரகில் இருந்துழன்று வாடுகின்றோர் எல்லார்க்கும் இழிந்தேன்” என இயம்புகின்றார். ஏழ் வகை நரகினும் இருந்து வருந்துவோரை “எல்லார்க்கும்” என்று குறிக்கின்றார். ஒருவர்பாலுள்ள நலம் பலவும் பொறுமை முதலிய பண்புகளை அளவையாகக் கொண்டு அறிஞர் அளந்துரைப்பது பற்றி, “பொறை யளவாம் நல்லன வெலாம்” என்றும், நில்லாத் தன்மையுற்ற உலகியலில் நற்பண்பும் காவாவிடின் போய் விடுதலால் “போக்கில் விட்டு” என்றும், எவ்வுயிரும் நன்றோ தீதோ யாதானு மொன்றைச் செய்வதின்றி இருத்தல் உலகியற் பண்பன்மையால் நல்லவற்றைப் போக்கில் விட்டமையால் “தீமை புரிகின்றேன்” என்றும் உரைக்கின்றார். புது விறகு பெய்து புதிது மூட்டப் பெறும் நெருப்புப் “புது நெருப்பு” எனப்படுகிறது. அது பெரிதுயர்ந்து எரியுமாதலின், வெம்மை மிக்குறுவது விளங்க, “புது நெருப்பிற் கொடியேன்” என்று புகல்கின்றார். நெடிதுயர்ந்து அகலமான நெஞ்சினை, “நெடுஞ்சால நெஞ்சு” எனக் கூறுகின்றார். சாலம் என்று கொண்டு நெடிய மாயம் நிறைந்த நெஞ்சு என்று கூறலுமாம். கரை, எதுகை பற்றிக் கறை யென வந்தது. உலகின்கண் எய்தும் பிறப்புக்கட்கு எல்லையின்மைப்பற்றிக் “கறை யளவா வுலகு” எனக் கூறுகின்றார்.
இதனால் உலகிற் பிறப்பெல்லை காணாமை குறித்தவாறாம். (9)
|