5. மாயை வலிக்கு அழுங்கல்

    அஃதாவது, மாயா காரியமாகிய உலகியல் நல்கும் மயக்கத்தில் அழுந்தி நீங்க மாட்டாதவாறு பிணிக்கும் அதன் வன்மை நினைந்து வருந்தித் திருவருள் துணையை நாடுவது. “செலவிடை யழுங்கல் சொல்லாமையன்” (தொல். பொ) றாவது போல மாயை வலிக்கு அழுங்கல் வலிக் கஞ்சி அடங்காமல் திருவருளால் வென்று மேம்படலாகும். இதன்கண், மாய வுலகின் வலிமையும் ஆகம ஞானம் பெற மாட்டாமையும் எடுத்தோதி அருள் ஞானப் பேற்றுக்கு வாயிலாகும் நற்பண்பும், உருகும் நெஞ்சும், மெய்ப்பொருள் நாட்டமும் பிறவும் தந்தருள்க என முறையிடுகின்றார்.

எண்சீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்

3303.

     தாவு மான்எனக் குதித்துக்கொண்டோடித்
          தைய லார்முலைத் தடம்படுங் கடையேன்
     கூவு காக்கைக்குச் சோற்றில்ஓர் பொருக்கும்
          கொடுக்க நேர்ந்திடாக் கொடியரில் கொடியேன்
     ஓவு றாதுழல் ஈஎனப் பலகால்
          ஓடி ஓடியே தேடுறும் தொழிலேன்
     சாவு றாவகைக் கென்செயக் கடவேன்
          தந்தை யேஎனைத் தாங்கிக்கொண் டருளே.

உரை:

     அருளுருக் கொண்ட தந்தையாகிய சிவபெருமானே, தாவியோடும் இயல்பினையுடைய மான் போலத் துள்ளிச் சென்று மகளிர் பெரிய முலை மார்பிற் கிடந்து மகிழும் கடையவனாகிய யான், கரைகின்ற காக்கைக்கு ஒரு சோறும் போட விரும்பாத கொடுமையாளரினும் மிக்க கொடியனாவேன்; இடைவிடாது பறந்து திரியும் ஈக்களைப் போலப் பலகாலும் பலவிடத்தும் பொருள் நாடி யலையும் தொழிலையே யுடையனாகின்றேன்; இதனையே செய்து சாகின்ற எனக்கு அதனினின்று உய்தற்பொருட்டு யாது செய்ய வல்லேன்; என்னைத் தாங்கி யருள்க. எ.று.

     பிறந்து வளர்ந்து பிள்ளைப் பருவம் கடந்த வுடன் உலகியலுணவுண்டு வளர்ந்த வுடம்பு வேறு உடம்பு படைக்கும் காம விச்சைக்கு இரையாகிக் கருவி கரணங்கள் யாவும் அதுவே யுருவாகி முடுகுதலின், “தாவும் மான் எனக் குதித்துக் கொண்டு ஓடித் தையலார் முலைத்தடம்படும் கடையேன்” எனக் கூறுகின்றார். காம வேகத்தால் துள்ளி யோடும் இளமை மனத்தைக் கருத்திற் கொண்டு, “தாவும் மான் என”க் குறிக்கின்றார். எப்போதும் மேனி யொப்பனையிற் கண்ணும் கருத்துமா யிருத்தல் பற்றி, இளமகளிரைத் “தையலார்” என்பர். காமக் கிளர்ச்சிக்கு ஏதுவாதல் பற்றி, மகளிர் மார்பை, “முலைத் தடம்” என மொழிகின்றார். அதுவே பொருளாகக் கருதி அறிவிழந்து அலமருவோர் கீழ்மை யெய்துதலால் “கடையேன்” எனக் கூறுகின்றார். கூவும் காக்கை என மொழியினும் கரையும் காக்கை என்பது கருத்தாகக் கொள்க. “காக்கை கரவா கரைந்துண்ணும்” (குறள்) எனச் சான்றோர் வழங்குதலறிக. பொருக்கி எடுக்கப் படுவதால் ஒரு சோறு பொருக்கு எனப்பட்டது. ஒரு தனிச் சோற்றைப் பருக்கை என்பதும் வழக்கு. தன்னல மிகுதிக் கடும்பற் றுள்ளம் கொண்டு இறுகிய மனத்தராய் யாவையும் எத்துணையும் ஈயும் மனமில்லாக் கொடுமையை விளக்குதற்கு “ஒரு பொருக்கும் கொடுக்க நேர்ந்திடாக் கொடியர்” என்று கூறுகின்றார். நேர்தல் - இசைதல். படிமையின்றித் தனக்குரிய இரை வேண்டி எப்போதும் எவ்விடத்தும் பறந்து அலைவது ஈக் கியல்பு. இழிந்த பொருளையே நாடும் குறிப்புத் தோன்ற “ஈ யென” என்கின்றார். உயர் பொருளை நாடாமல் கீழ்மையுறுவிக்கும் பொருள் தேடி இடையறாது உழைக்கும் பான்மை விளங்க, “பலகால் ஓடி யோடியே தேடுறும் தொழிலேன்” என்று சொல்லுகின்றார். இத் தொழில் உலகிற் செத்துச் செத்துப் பிறப்பதற்கே ஏதுவாவது புலப்பட, “சாவுறா வகைக்கு என் செயக் கடவேன்” என வுரைக்கின்றார். பிறப்பது பிறவாப் பெருநிலை எய்துதற் பொருட்டன்றி மீள மீளப் பிறப்பதற் கன்று என்பது குறிப்பு.

     இதனால், மகளிர் முலைத் தடம் படிந்தும் பொருள் தேடியும் வீணே சாகப் பண்ணுகிறது உலகிய லென உணர்த்தியவாறாம்.

     (1)