3305.

     விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்
          விருந்தி லேஉண வருந்திஓர் வயிற்றுக்
     குழியைத் தூர்க்கின்ற கொடியரில் கொடியேன்
          கோப வெய்யனேன் பாபமே பயின்றேன்
     வழியைத் தூர்ப்பவர்க் குளவுரைத் திடுவேன்
          மாய மேபுரி பேயரில் பெரியேன்
     பழியைத் தூர்ப்பதற் கென்செயக் கடவேன்
          பரம னேஎனைப் பரிந்துகொண் டருளே.

உரை:

     நல்லது காணும் அறிவுக் கண்ணை மறைக்கும் வஞ்சகர் கூட்டத்தை விரும்பியும், விருந்துணவை நிரம்ப வுண்டு, புல்லியவயிறாகிய குழியை யடைக்கின்ற கொடியவருள் மிகவும் கொடியவனாயினேன்; கோபத்தையே விருப்புடன் கொண்டு பாவச் செயல்களையே செய் தொழிந்தேன்; நல்வழியை மாற்றிக் கெடுப்பவர்க்கு உளவு சொல்லித் தந்தேன்; மாயச் செயல்களைப் புரியும் பேயர் கூட்டத்திற்குப் பெரிவானாய்ப் பிறங்கினேன்; இவ்வாற்றால் பெரிய பழிக்கு ஆளாகிய யான் அதனைப் போக்குதற்கு யாது செய்வேன்; மேலோனாகிய சிவ பெருமானே, என்னை அன்பால் ஏற்று உய்தி தந்தருள்க. எ.று.

     விழி - கண்; ஈண்டு அறிவுக் கண்ணைக் குறிக்கின்றது. நல்லறிவை மறைத்தாலன்றி வஞ்ச மறியாமல் வஞ்சகரோடு இணங்குதல் கூடாதாகலின், “விழியைத் தூர்க்கின்ற வஞ்சரை விழைந்தேன்” எனக் கூறுகின்றார். விருந்துணவு புதிய புதிய சுவைப் பொருள்களையுடையதாகலின், மிக்க விருப்புடன் வயிறு நிறைய மிகைபட வுண்டமை புலப்பட, “விருந்திகே யுணவருந்தி ஓர் வயிற்றுக் குழியைத் தூர்க்கின்ற கொடியர்” என்று இயம்புகின்றார் விருந்து - புதுமை. புதியருடன் புதிய புதிய சுவைப் பொருள்களை யுண்பது விருந்தென வழங்கும். ஓர் என்றது, வயிற்றது புன்மை சுட்டி நின்றது. தூர்த்தல் - பள்ளத்தை மண் கொட்டியடைப்பது. பள்ளத்தைத் தூர்ப்பது போல வயிற்றை யுண்பொருளைப் பெய்து அடைத்தேன் என்றற்கு “வயிற்றுக் குழியைத் தூர்க்கின்ற கொடியரிற் கொடியேன்” என உரைக்கின்றார். மீதூண் கொள்ளுதல் உணவு நெறிக்கு மாறாதலால், பெரிதுண்பவரைக் “கொடியர்” எனக் குறிக்கின்றார். நெறி கோடுபவர் - கொடியர். வெய்யன் - விரும்புவன்; வேண்டற் பொருளதாகிய வெம்மை யடியாக வருவது வெய்யன் என்னும் சொல். “வெய்யை போல முயங்குதி” (நம். 260) எனச் சான்றோர் வழங்குதல் காண்க. பாபம் - தீவினை. பலரும் இனிது செல்லற் கமைந்த நல்ல வழியைக் கெடுத்தலும் அடைத்தலும் தீதாக, அதனை செய்வோர்க்கு உளவு சொல்லி யூக்குதல் கொடும் பாவமாதல் விளங்க, “வழியைத் தூர்பவர்க்கு உளவு உரைத்திடுவேன்” என்று கூறுகின்றார். உளவு - உபாயம். பொய்யும் வழுவும் வஞ்சனையும் மாயச் செய்கைகளாதலாதல் “மாயமே புரி பேயரிற் பெரியேன்” என்கின்றார். பேயர் - பேய்த் தன்மை யுடையவர். இத் தீக்குணங்களால் பழியே விளைதல் கண்டு அஞ்சுகின்றமை புலப்பட, “பழியைத் தூர்ப்பதற்கு என் செயக் கடவேன்” என்று வருந்தி, என் பிழை பொறுத்து அன்பால் ஆண்டருளுக என வேண்டுகின்றாராகலின், “எனைப் பரிந்து கொண்டருள்” என முறையிடுகின்றார்.

     இதனால், உற்ற பழி போக்கி அன்பு செய்தருள்க என வேண்டியவாறாம்.

     (3)