3306. மதத்தி லேஅபி மானங்கொண் டுழல்வேன்
வாட்ட மேசெயும் கூட்டத்தில் பயில்வேன்
இதத்தி லேஒரு வார்த்தையும் புகலேன்
ஈயும் மொய்த்திடற் கிசைவுறா துண்பேன்
குதத்தி லேஇழி மலத்தினுங் கடையேன்
கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்
சிதத்தி லேஉறற் கென்செயக் கடவேன்
தெய்வ மேஎனைச் சேர்த்துக்கொண் டருளே.
உரை: தெய்வமாகிய சிவபெருமானே, சமயக் கொள்கையிலே பெரும் பற்றுவைத்து அலைகின்ற யான், பிறர்க்கு வருத்தம் செய்யும் கூட்டத்திற் சேர்ந்துறைகின்றேன்; நயம்பட ஒரு சொல்லும் கூறுவதில்லேன்; உண்ணும் உணவில் ஒரு சிறிது ஈயிருந்துண்டற்கும் பொறுக்கமாட்டேன்; மலவாய் வழியொழுகும் மலத்தினும் கடைப்பட்டவன்; கோடைக் காலத்து வெயிலினும் கொடுமை மிகவும் உடையவன்; இத்தகைய யான் நினது சித்தத்தில் இடம் பெறுதற்கு யாது செய்வேன்; என்னை நினது அருட் பெருக்கிற் சேர்ந்தருள்க. எ.று.
மதம் - ஈண்டுச் சமயத்தின் மேனின்றது. சமயவுணர்வு ஒழுக்கங்களிற் பற்றுடையவராவது சமுதாயத்துக்கு நலம் புரிவது என்றும், பற்று வெறியாக மாறி மக்களை இரக்கமில்லாத அரக்கராக்குவதுண்டு. உலக நாடுகளின் பழமையான வரலாறுகள் பலவும் மத வெறிதோன்றி போரும் பூசலும் எழுப்பி உயிர்ச் சூறையாடிய செய்திகளை எடுத்துரைப்பது காணலாம். நம் நாட்டு வரலாறும் அதற்கு விலக்கல்ல. நல்லறிஞர் மதவெறியின் தீமை கண்டு அதனைக் கடிந்துரைத்தனர்; உரைக்கின்றனர். விலக்குண்ட மதவெறியை நான் மேற்கொண்டொழுகினேனென்பார், “மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன்” என்று கூறுகின்றார் மதாபிமானம் ஈண்டு மதவெறி குறித்ததென வறிக. அபிமானம் - கடும் பற்றுமாம். தம்முடைய சொல்லாலும் செயலாலும் பிறர்க்குத் துன்பம் செய்வோர் கூட்டமும் ஆங்காங் கிருந்து ஆட்களைச் சேர்த்துக்கொண்டு அலைப்ப துண்டாதலால், “வாட்டமே செயும் கூட்டத்திற் பயில்வேன்” என வுரைக்கின்றார். வாட்டம் விளைவிக்கும் துன்பத்தை வாட்டம் எனக் குறிக்கின்றார். இன்மொழியும் இன்செயலும் இதமெனவும், அல்லன அகிதமெனவும் வழங்குதலின், அகிதம் புரிந்தொழுகும் செயலுடைமை காட்டற்கு “இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன்” என்கின்றார். நோய் விளைவிக்கும் ஈக்கள் மொய்க்காவண்ணம் காத்துண்பது நன்றென்னும் கருத்தின்றி, ஈ மொய்த் துன்பதால் தாமுண்ணும் உணவளவு குறைகிறதென எண்ணும் கருத்துடையேன், எனத் தமது கடும் பற்றுளம் விளங்க, “ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது உண்பேன்” என்று உரைக்கின்றார். குதம் - மலவாய்; எருவாய் என்றலுமுண்டு. மலம் விலக்குண்ட இழுபொருளாதலின், “மலத்தினும் கடையேன்”எனக் கூறுகின்றார். கோடை வெய்யல் - முதுவேனிற் காலத்துக் கடும் வெயில். தன் கண் போந்த உயிர்களைத் தன் வெம்மையாற் பொசுக்கி வருத்தலும், உயிரில் பொருள்களைக் காய்ந்து பொடியாக்குதலும் செய்தலால், “கோடை வெய்யலின் கொடுமையிற் கொடியேன்” எனக் கூறுகின்றார். இவ்வாறு ஆகாப் பண்புடைய யான், அருளின்பக் கடலாகிய உன் திருவுள்ளத்தில் இடம் பெற்று உய்தி சேர்தற்கு ஏது இல்லாமையால் நீயே அருள்கூர்ந்து என்னைத் சேர்த்தருள வேண்டும் என்பாராய், “தெய்வமே எனைச் சேர்த்துக் கொண்டருளே” என இயம்புகின்றார். சித்தம் - சிதம் என வந்தது.
இதனால், நலவினையாற் சேரமாட்டாத தம்மை அருள் கொண்டு சேர்த்தருள விண்ணப்பித்தவாறாம். (4)
|