3307.

     கொடிய வெம்புலிக் குணத்தினேன் உதவாக்
          கூவம் நேர்ந்துளேன் பாவமே பயின்றேன்
     கடிய நெஞ்சினேன் குங்குமம் சுமந்த
          கழுதை யேன்அவப் பொழுதையே கழிப்பேன்
     விடியு முன்னரே எழுந்திடா துறங்கும்
          வேட னேன்முழு மூடரில் பெரியேன்
     அடிய னாவதற் கென்செயக் கடவேன்
          அப்ப னேஎனை ஆண்டுகொண் டருளே.

உரை:

     கொடுமைப் பண்பையுடைய வெவ்விய புலியின் குணங்களையுடைய யான், பயனில்லாத கிணற்றைப் போன்று பாவ வினையே செய்துள்ளேன்; கடுமைமிக்க நெஞ்சம் கொண்டு குங்குமம் சுமந்த கழுதையாய் வீண் பொழுது கழிக்கின்றேன்; விடியு முன் எழுந்திராது உறங்கும் செயலுடையேன்; முழுத்த மூடர்களில் பெரிய மூடனாயினேன்; அப்பனே, நினக்கு அடியனாவதற்கு விழைகின்றேனாதலால் என்னை ஆண்டருள்க. எ.று.

     பசிவெம்மை பொறாது கண்டவுயிரைக் கொல்லும் நன்றியுணர்வின்மையும் புலியின் குணங்களாதலின், “கொடிய வெம்புலிக் குணத்தினேன்” எனவுரைக்கின்றார். உதவாக் கூவம் - நீரின்மையாற் பயன்படாத கிணற்றை “உதவாக் கூவம்” என்று குறிக்கின்றார். பாவம் - பாவச் செய்கைகள். கடிய நெஞ்சம் - இரக்கமில்லாத கடுமை மிகுந்த நெஞ்சம். குங்குமப் பொதி சுமக்கும் கழுதை அக்குங்குமத்தால் நிறம் வேறுபடுவதன்றி உருவும் செய்கையும் மாறாமை போலச் சிவக்கோலம் பூண்டு அதற்குரிய சீலமும் செறிவும் அறிவுமின்றி நாளை வீண்போக்குகின்றேன் என்பாராய், “குங்குமம் சுமந்த கழுதையேன் அவப்பொழுதையே கழிப்பேன்” என வுரைக்கின்றார். “கழுதை குங்குமம் தான் சுமந்தெய்த்தாற் கைப்பர் பாழ்புக மற்றது போலப் பழுது நான் உழன்றுள் தடுமாறிப் படுசுழித் தலைப்பட்டனன் எந்தாய்” (இடைமருது) என நம்பியாரூரர் பாடுவது காண்க. கழுதை போன்று தளர்ந்தேன் எனற்பாலது “கழுதையேன்” என வந்து, எச்சக் குறிப்பு வினையாய்க் கழிப்பே வென்ற வினையொடு முடிந்தது. அவப் பொழுது - வீண்பொழுது. பொழுது விடியுமுன் னெழுங்கால் சிந்தையில் தெளிவும் அறிவிற் கூர்மையும், உடலில் செயலாற்றும் வன்மையும் சிறத்தலின், விடிகாலையெழுவதை வற்புறுத்துவர் சான்றோர். இருளிரவில் வேட்டம் புரிவோன் விடியலில் எழானாகலின், “விடியுமுன்னரே எழுந்திடா துறங்கும் வேடனேன்” என விளம்புகிறார். விடியலில் ஏழாமை மனத்தில் மயக்கமும் மெய்யிற் சோம்பலுமுற்று செய்வது விளங்காத மூடத்தன்மை படிதலால் “முழு மூடரிற் பெரியேன்” என்று மொழிகின்றார். அடியராயினார் சீலமும் செறிவு முதலாய குணஞ் செயலுடையராதலால் அவையில்லாத யான் என்செய்வேன் என வருந்துதல் விளங்க, “அடியனாவதற் கென்செயக் கடவேன்” என முறையிடுகின்றார். “நித்தலும் எம்பிரானுடைய கோயிற்புக்குப் புலர்வதன் முன்னலகிட்டு மெழுக்குமிட்டு பூமாலை புனைந்தேத்திப் புகழ்ந்து பாடித் தலையாரக் கும்பிட்டுக் கூத்துமாடி” (ஆரூர்) வழிபடுவது அடியாரது அழகிய பணியென்று ஆன்றோர் அறிவிப்பது காண்க.

     இதனால் அடியனாம் விருப்புப் புலப்படுத்தவாறாம்.

     (5)