3308. தூங்கு கின்றதே சுகம்என அறிந்தேன்
சோற தேபெறும் பேறதென் றுணர்ந்தேன்
ஏங்கு கின்றதே தொழிலெனப் பிடித்தேன்
இரக்கின் றோர்களே என்னினும் அவர்பால்
வாங்கு கின்றதே பொருள்என வலித்தேன்
வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்
ஓங்கு கின்றதற் கென்செயக் கடவேன்
உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
உரை: எல்லாம் உடைய பெருமானே, படுத்து உறங்குவது தான் சுகவாழ்வு என்றும், உண்ணும் சோற்றினும் வாழ்விற் பெறலாகும் பெரியபேறு வேறில்லையென்றும் எண்ணி்னேன்; வேண்டுவன நினைந்து ஏங்குவது தான் மாந்தர் தொழில் என்ப துணர்ந்தேன்; வீடு தோறும் சென்று இரப்பவரிடத்தும் ஒன்று வாங்குவது பொருளீட்டும் செயல் என்று மனத்தில் வன்மையாகக் கொண்டேன்; மனத்தால் வஞ்ச, நினைவுற்றுப் பஞ்சு போற் பறக்கலுற்றேன்; இப்பண்புடைய யான் திருவருளால் ஒங்குதற்கு யாதுசெய்ய வல்லேன்; என்னை உவப்புடன் ஆண்டருள்க. எ.று.
உழைக்கும் உடற்கும் உள்ளத்துக்கும் உறக்கம் உறுதியும் இன்பமும் தரும் இயல்பினதாகலின், சுகம் நுகர்ந்த நயப்பால் “தூங்குகின்றதே சுகம் என அறிந்தேன்” என்றும், மனமொழி மெய்களால் செய்யப்படும் தொழிலும் உழைப்பும் முடிவில் உண்ணும் சோற்றிலே சென்றடங்குவது தெரிதல் பற்றி, “சோறதே பெறும் பேற தென்றுணர்ந்தேன்” என்று இயம்புகின்றார். மக்கள் நினைவெல்லாம் வேண்டுவன பற்றி நிற்பினும், நினையுமிடத்து வேண்டுமளவு எய்தாமையும் இடையில் உளவாகும் இடையூறுகளையும் எண்ணியெண்ணிப் புண்ணுறுவது தொழிலதிபர் தொழிலாளர் முதலியோர் செயலாக இருத்தலால், “ஏங்குகின்றதே தொழில் எனப் பிடித்தேன்” எனக் கூறுகின்றார். பிடித்தல் - உறுதியாக வுணர்தல்; “கண்டுபிடித்தேன்” என்பது போல. வேறுவழியால் மாட்டமைபற்றி இரத்தற்றொழிலை மேற்கொண்டவர் இரக்கின்றோராவர் இரத்தல் பொருள் நோக்கியதாகவும், இச்சகம் பேசியும் அச்சுறுத்தியும் பெறுவது பொருளாகக் காணப்படுதலால் “இரக்கின்றோர்களே என்னினும் அவர்பால் வாங்குகின்றதே பொருளென வலித்தேன்” எனவுரைக்கின்றார். பொருளீட்டும் நெறியில் கடையாயது இரத்தலாதலின், “இரக்கின்றோர்களே என்னினும்” எனவும், அவர்கட் கீதல் அறமாகவும், அவர்பால் ஒன்று வாங்குவது தீது என்பது புலப்பட, “வாங்குகின்றதே பொருள் என வலித்தேன்” எனவும் இயம்புகின்றார். வலித்தல் - நாணம் தடுப்பினும் பொருள் வேட்கை மேனின்று வற்புறுத்தல். வேட்கை மிக்க நெஞ்சம் யாவரையும் வஞ்சித் தொழுகுவதிலே செலுத்தி அலைப்பது கொண்டு “வஞ்ச நெஞ்சினால் பஞ்செனப் பறந்தேன்” என்று கூறுகின்றார். இத்தகைய கீழ்மையுணர்வுகளாலும் செயலாலும் கீழ்ப்படும் யான் திருவருளால் உய்ந்து உயர்வு பெறும் திறமில்லேன் என்பாராய், “ஓங்குகின்றதற்கு என்செயக் கடவேன்” என்று மொழிகின்றார்.
இதனால், அருள் ஞானத்தால் ஓங்குதற்கு என்னை யுவந்தருள்க என வேண்டியவாறாம். (6)
|