3309.

     வருத்த நேர்பெரும் பாரமே சுமந்து
          வாடும் ஓர்பொதி மாடென உழன்றேன்
     பருத்த ஊனொடு மலம்உணத் திரியும்
          பன்றி போன்றுளேன் நன்றியொன் றறியேன்
     கருத்தி லாதயல் குரைத்தலுப் படைந்த
          கடைய நாயினிற் கடையனேன் அருட்குப்
     பொருத்தன் ஆவதற் கென்செயக் கடவேன்
          புண்ணி யாஎனைப் புரிந்துகொண் டருளே.

உரை:

     புண்ணியப் பொருளாகிய சிவபெருமானே, வருத்துதற்கமைந்தது போன்ற பெரிய பாரத்தைச் சுமந்து தளரும் பொது மாடு போல அலைந்தயர்ந்தேன்; பருத்த வுடம்புடன் மலத்தை நாடியலையும் பன்றிபோல இழிவு நாடி மெலிகின்றேனே யன்றி நலம் தருவ தொன்றையும் எண்ணுகின்றேனில்லை; காரணமின்றியே அயல் நாயைக் கண்டு வெறிதே குரைத்து மெலியும் கடையான நாயினும் கடையவனாகிய நான் நினது திருவருட் பேற்றுக்கு உரியவனாதற்கு யாது செய்வேன்; என்பால் அன்பு கொண்டு ஆண்டருள்க. எ.று.

     வருத்த வேண்டுமென்று எண்ணியே ஏற்றப்பட்டது போன்ற பெரும் பாரம் என்றற்கு, “வருத்த நேர் பெரும் பாரம்” என்றும், ஏற்றியதைச் சுமந்து செல்வதையன்றி வேறு செய்ய மாட்டாத பொதி மாடு போன்று உடல், வாழ்க்கையாகிய பெரும் பாரத்தைச் சுமந்து மாற்ற மாட்டாமையால் வருந்துகின்றேன் என்ற கருத்துப்பட, “பெரும்பாரம் சுமந்து வாடும் ஓர் பொதி மாடு என உழன்றேன்” எனப்புகல்கின்றார். பெரும் பாரம் - தாங்குதற் கரிய சுமை. பொதி மாடு - கனத்த மூட்டைகளைச் சுமக்கும் எருதுகள். செவ்விய சாலைகளில்லாத பண்டை நாளில் வணிகர்கள் விலைப் பொருள்களைப் பைகளிற் பொதிந்து கட்டி எருதுகளின் மேல் ஏற்றிச் சென்றமையின், அவற்றைப் பொதி மாடு எனப் பெயர் குறித்தனர். பண்டம் பொதிந்த மூடை. - பொதியாம். ஊனாற் பருத்த உடம்பு கொண்டு மக்கள் கழித்த மல முண்பது பன்றியாகலின், “பருத்த வூனொடு மலமுணத் திரியும் பன்றி” எனக் கூறுகின்றார். இழி செயல் புரிந்து உடலோம்பும் திறமுடையனா யுள்ளேன் எனத் தம்மைப் பழித்தற்கு இப் பன்றியை உவமம் செய்கின்றார். வேறொரு நாயைக் காணின் தன்னினம் எனக் கருதிப் பேணுதலின்றிக் கண்ட வுடனே காய்ந்து நெடிது குரைத்துச் சோர்வது விளங்க, “கருத்து அயல் குரைத்து அலுப்படைந்த கடைய நாய்” எனவுரைக்கின்றார். அலுப்பு - சோர்வு. கடைய நாய் - கீழான பண்பை யுடைய நாய். இவ்வுமம் அழுக்காறும் பொறாமையும் உற்று வாழ்வைப் பாழ்படுத்தும் தீப் பண்புகளைக் குறித்து வந்தது.

     இதனால், அருட் பேற்றுக்கு மாறாய பண்பும் செயலும் போக்கி நற் பண்பு நிலவ அருள் செய்க என வேண்டியவாறாம்.

     (7)