3310. துருக்க லோகொடுங் கருங்கலோ வயிரச்
சூழ்க லோஎனக் காழ்கொளும் மனத்தேன்
தருக்கல் ஆணவக் கருக்கலோ டுழல்வேன்
சந்தை நாயெனப் பந்தமுற் றலைவேன்
திருக்கெ லாம்பெறு வெருக்கெனப் புகுவேன்
தீய னேன்பெரும் பேயனேன் உளந்தான்
உருக்கல் ஆகுதற் கென்செயக் கடவேன்
உடைய வாஎனை உவந்துகொண் டருளே.
உரை: எல்லாம் உடைய பெருமானே துருக்கல்லோ, திண்மையாற் கொடிய கருங்கல்லோ, வன்மை மிக்க வயிரக் கல்லோ என்று சொல்லும்படியாகக் காழ்ப்பு மிக்க மனத்தை யுடையவனாகிய யான், செருக்கை நல்கும் ஆணவமாகிய இருட்டில் உலவுகின்றேன்; சந்தைக் கடைத் தெருவில் திரியும் நாய்போலப் பாசத்தால் ஈர்ப்புண்டு அலைகிறேன்; நெருக்கடியான முடுக்குகளில் நுழைந்தோடும் பூனை போல் உழலுகின்ற என் மனம் உருகும் தன்மை யுடையதாதற்கு யான் யாது செய்வேன்; என்னை விரும்பி யாண்டு அருளுக. எ.று.
துருக்கல் - கல் வகையுள் ஒன்றாகிய செம்புறைக்கல்; செம்மை நிறமும் வன்மையுமுடையது. கருங்கல் - கருநீல நிறமும் திண்மைச் செறிவும் உடைத்தற் கருமையும் உடைய கல் வகை. திட்பமும் கனமும் கொண்டதாகலின், “கொடுங் கருங்கல்” எனப்படுகிறது. காழ்ப்பு மிக்க கருங்கல்லை “வயிரக் கல்” என்று கூறுகின்றார். வயிரம் -வன்மை குறித்தது. மனத்தின் வன்மையும் திண்மையும் கொடுமையும் விளக்குதற்கு இக்கல் வகைகளை உவமம் செய்கின்றார். மனத்தைச் சுருக்கி அறியாமை யிருளிற் செலுத்தித் தீமைக் குள்ளாக்குதலால் செருக்கினைத் “தருக்க லாணவக் கருக்கல்” என வுரைக்கின்றார். தருக்கல் - தருக்கு எனவும் வழங்கும்; தருக்கல் - செருக்கு, பெருமிதமுமாம். உயிரறிவை விரிவு படுத்தாமற் சுருக்கி அணுத்தன்மைப் படுத்துவதால் மல விருளை “ஆணவக் கருக்கல்” எனக் குறிக்கின்றார். கருக்கல் - மிக்க இருள் செறிந்த இரவுப் போது. கருக்கலில் இயங்குவோர் மேடு பள்ள மறியால் இடர்ப்பட்டுத் துன்புறுவது போல வாழ்வில் நலம் தீது காண மாட்டாமல் தகாதன செய்து துன்புறுகின்றமை புலப்படுத்த “ஆணவக் கருக்கலோடு உழல்வேன்” என மொழிகின்றார். பொருள் விற்பனை செய்வோரும் வாங்குவோருமாய்ப் பலர் கூடுமிடம் சந்தை; ஆரவாரம் மிக்கிருத்தலால் இவ்வாணிகச் சூழல் சந்தையென வழங்குகிறது. பொருளாசையாற் பிணிப்புண்டு வெருட்டப்படுதலால் துன்பமுறு நாய் சந்தை நாயாகும். உலகியல் ஆசை மிகுதியால் எய்தும் இடுக்கண்களை விளக்குதற்குச் சந்தை நாயை எடுத்துக் காட்டுகின்றார். பந்தம் - ஆசைப்பிணிப்பு. திருக்கு - வளைந்து நெளியுமிடம். மூலை முடுக்குகளில் ஒடுங்கி வாழும் எலிகளைப் பற்றும் களவுப் பூனையை, “திருக்கெலாம் புகும் வெருக்கு” எனக் கூறுகின்றார். வெருகு, எதுகை நயம் பற்றி “வெருக்கு” என வந்தது. ஆசையுற்று அலையும் தன்மையாற் “பேயனேன்” என்கின்றார். பிறர் துன்பம் கண்டவிடத்து எளிதில் உருகும் பண்பு மனவுருக்கம் அறம் செயும் கொள்கைக்கு அரணும் ஆக்கமுமாதலால் “உளந்தான் உருக்கலாவதற் கென்செயக் கடவேன்” என வுரைக்கின்றார். உருகல் - உருக்கலென வந்தது.
இதனால், உருகும் நெஞ்சுடையனாதற்கு உபாயம் அருளுக என வேண்டியவாறாம். (8)
|