3311.

     கான மேஉழல் விலங்கினிற் கடையேன்
          காம மாதிகள் களைகணிற் பிடித்தேன்
     மான மேலிடச் சாதியே மதமே
          வாழ்க்கை யேஎன வாரிக்கொண் டலைந்தேன்
     ஈன மேபொருள் எனக்களித் திருந்தேன்
          இரக்கம் என்பதோர் எட்டுணை அறியேன்
     ஞான மேவுதற் கென்செயக் கடவேன்
          நாய காஎனை நயந்துகொண் டருளே.

உரை:

     தலைவனாகிய சிவபெருமானே, காட்டில் வாழ்கின்ற விலங்குகளிற் கடைப்பட்டவனாகிய யான் காம முதலிய குற்றங்களில் ஈடு பட்டிருந்ததோடு, பொய்யனா மான வுணர்ச்சியால் சாதிச் செருக்கும் மத வெறியும் வாழ்க்கை யாசையும் மேற் கொண்டொழுகினேன்; இவ்வுலக வாழ்வு பொருள் மேலதென்று எண்ணி மகிழ்ந்திருந்தேனே யன்றி எள்ளத்தனையும் இரக்க மெனப்படும் நற்பண்பு கொண்டறியேன்; இத்தகைய யான் இனி நின் திருவருள் ஞானம் பெறுதற்கு யாது செய்யவல்லவனாவேன்; என்னை விரும்பி ஏற்றருள்க. எ.று

     கொடுமை மிக்க விலங்குகளே காடுகளில் வாழ்வனவாதலால், அவற்றின் கீழ்மை கருதி, “கானமே யுழல் விலங்கினிற் கடையேன்” எனக் கூறுகின்றார். காமம், குரோதம், உலோபம், மோகம் முதலியன இன்ப வாழ்வுக்குத் தடையாய்த் தீங்கு விளைவிப்பனவாதலால், “காம மாதிகள் களைகளிற் பிடித்தேன்” என வுரைக்கின்றார். களைகளைக் கைப் பிடித் தொழுகினேன் என்பார், “களைகளிற் பிடித்தேன்” என்கின்றார். பணி வேண்டியவர்க்குப் பணிந்து, விலக்க வேண்டியதை விலக்கியும் வாழ்வது மெய்யான மானமாகும்; மாறாக வொழுகுவது குற்றமானமானம். குற்ற மானத்தை மேற்கொண்டு சாதிச் செருக்கும் மத வெறியும் இழிவாகியவற்றைத் செய்தேனும் உயிர் வாழ்வது வாழ்க்கையாம் என்னும் கொள்கையும் கைக்கொண்டு நல்லன நோக்காமல் மகிழ்ந்திருந்தேன் என விளம்புவாராய், “மான மேலிடச் சாதியே மதமே வாழ்க்கையே என வாரிக் கொண்டலைந்தேன்” என இயம்புகின்றார். வாரிக் கொள்ளுதல் - பகுத்துணர்தலின்றி அகப்பட்வை யெல்லாம் மேற் கொள்ளுதல். ஈனம் - இவ்வுலகம். இரக்கப் பண்பு மக்கட் பிறப்பை மாண்புறுத்துவதென்பதை நினையாமல் ஒழுகிய குற்றத்தை “இரக்க மென்பதோர் எட்டுணை யறியேன்” என இசைக்கின்றார். இவற்றால் மேன்மேலும் பிறப்பிறப்புகள் உண்டாகுமே யன்றி ஞானம் உண்டாகாது; ஞானத்தால்லன்றிப் பிறவாப் பேரின்ப முண்டாகா தென வுணர்ந்தமை தோன்ற, “ஞான மேவுதற் கென்செயக் கடவேன்” என வருந்துகின்றார்.

     இதனால், நன்ஞானம் எய்துதற்படி வழி யருள்க என வேண்டியவாறாம்.

     (9)