3317. வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
நான் ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
உரை: வேத ஞானத்தின் அந்தமான உபநிடதங்கள் உரைக்கும் ஞானப்பொருளை அறிந்து அதனைப் பெறற்கு விரைவுடன் முயலுதல் இல்லாத யான் அதற்குரிய உண்மை ஒழுக்கம் செயல் வகைகளையறியேன்; நாத தத்துவத்துக்கு மேலதாகிய சிவாகாய வீதியிற் சென்று காண வியலாதவனாகவுள்ளேன்; நான் யார் என்பதும் எனக்குத் தலைவன் யார் என்பதும் அறியேன்; ஞான முடிவு நிலையாகிய திருநாட்டினுட்புகும் திறம் அறியேன்; நிறைந்த ஞானகாய மெனப்படும் அம்பலத்தையடையும் திறம் அறிய வல்லனாவனே? தீதுடையனாகிய என் வரலாறு எத்தகையதாம்? நான் எவ்வாறு ஞான சபைக்குட் புகுவேன்; என் மாட்டாமையை யார்க்கு எடுத்துச் சொல்லுவேன், ஒன்றும் தெரியவில்லையே. எ.று.
வேத நூற் கல்வி பெற்றார் அதற்கு மேலே கற்றறிதற் குரியன எனப்படும் உபநிடதங்களை வேதாந்தம் என்பர்; வேதாந்தம் விளங்கும் ஞானப்பேறு வேதாந்த நிலை எனவும், அதனை ஆராய்ந்தறிந்து கொள்ள விழைந்து விரைந்தோடும் காலநிலை கண்டு விரைந்து கைவர முயல்கின்றேனில்லை என்பார்,. “நாடி விரைந்து முயன்றறியேன்” என்று இயம்புகின்றார். மெய்வகை, வேதாந்தப் பொருள்வகை. கை, அதற்குரிய ஒழுக்கம். ஞானப்பேறு குறித்து மேற் கோடற்குரிய செய்கைகளைச் செய்வகை எனத் தெரிவிக்கின்றார். சுத்த தத்துவத்தின் மத்தகத்தின் மேலது நாதாந்தம். அது தத்துவாதீதப் பெருவெளியாய் ஆன்ம சிற்சத்தி புகலாகாத்தாகலின், “நாதாந்தத் திருவீதி நடந்திடுதற்கு அறியேன்” என நவில்கின்றார். இவ் வேதாந்த நாதாந்த நிலைகள் அறிந்து பெற முயலும் ஆன்மாவாகிய நான் யார் அதையுணர்த்தும் தலைவன் யார் என்று ஆராய்ந்ததில்லை என்றற்கு, “நானார் என்றறியேன் எம்கோனார் என்றறியேன்” என மொழிகின்றார் “நானார் என் உள்ளமார் ஞானங்களார் என்னை யார் அறிவார், வானோர், பிரான் என்னை யாண்டிலனேல்” (கோத்து) என மணிவாசகர் உரைப்பது காண்க. போதம் - கருவி கரணங்களைக் கொண்டு இயற்கையும் செயற்கையுமாகப் பெற வரும் உண்மை ஞானம். அந்த ஞானம் காட்டும் சிவஞானம் திகழும் இடம் “போதாந்தத் திருநாடு”; திருவருளாலன்றி அதனை எய்துதல் கூடாமை பற்றித் “திருநாடு புக வறியேன்” என்று புகல்கின்றார். தில்லையம்பலம், சிதாகாசம் என்றும், சிதம்பரம் என்றும் புகழப்படுதலின், “ஞான பூரணா காயமெனும் பொது” என்று புகல்கின்றார். வேதாந்த நிலை முதலாக வுரைத்த பலவும் அறியாமையால் தம்மைத் தீயேன் என்றும், தமது ஞானப் பேற்று முயற்சியின் சிறுமையை விளக்குதற்குத் “தீயேன் சரிதம் ஏதாம்” என்றும் உரைக்கின்றார். தமது நிலைமை பிறர்க்கு உரைப்பதற்கோ வேறு பிறவற்றைச் செய்தற்கோ அமையாமை யுணர்ந்து வருந்துகின்றாராதலால், “யார்க்கு உரைப்பேன் என்ன செய்வேன் ஏதும் அறிந்திலனே” எனக் கூறுகின்றார்.
இதனால், வேதாந்த நாதாந்த போதாந்த நிலைகளை அறிந்து எய்த மாட்டாத சிறுமை நினைந்து வருந்துமாறு காணலாம். (5)
|