3319. சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
உரை: சாதி யென்றும் மத மென்றும் சமய மென்றும் பிரிந்தொழுகும் அவலப் பிரிவுகளினின்றும் நீங்க மாட்டாமலும், சாத்திரங்களின் கலக்கத்தால் உண்டாகும் துன்பகங்களிற் சிக்கியும் வருந்துகின்ற யான், பொருள்களின் தோற்றக் கேடுகளை எண்ணாமல், அலையில்லாத கடல் போல அசைவின்றி யிருந்து நுகரும் ஞான வின்பமாகிய பெரும் போகத்தில் இருக்கும் திறமும் அறியேன்; நீதி வழியில் நடந்ததும் இல்லை; இவ்வியல்புடைய யான், ஒளி திகழும் மணியம்பலத்தில் நின்று திருக்கூத்தாடும் ஒருவராகிய சிவபிரானது திருவருட் குறிப்பை எவ்வாறு அறிவேன்? ஞான நெறிக்கு அயலவர் பொருந்திய உலகியல் வாழ்வில் கிடந்துழலும் யான் ஞான சபைக்குள் எவ்வண்ணம் புகுவேன்? எனது குறையைக் கேட்பவர் யாவர்? என்ன செய்வேன்; ஒன்றும் தெரியவில்லையே. எ.று.
சாதி, மக்களினத்திடையே யுளதாகிய பிரிவு தொடக்கத்தில் பொருளுடைமை, செய்தொழில் முதலிய காரணங்களால் தோன்றிப் பின்னர் உண்டல் உறவு கொளல் முதலிய கூறுகளிலும் ஒன்று படாத பிளவினைச் செய்து சமுதாய ஒருமையைச் சிதைத்து நிற்கும் தீமையாய் நிலவுவது. மத மென்பது கொள்கை யென்னும் பொருளில் தோன்றிப் பின்னர்ச் சிவன், திருமால், புத்தன் முதலிய தெய்வ வழிபாட்டுக் குரிமையுற்றுச் சாதி பற்றித் தோன்றிய சீர்கேட்டைச் சமுதாய வொருமையைச் சிதைத்தற்குத் துணை செய்யும் கருவியாய் நிலவுகிறது. இது குறுகிய நிலையில் மதமாகவும், விரிந்த நிலையில் சமயமாகவும் வழங்குகிறது. மக்களது உலகியல் வாழ்க்கை நலம் கருதித் தோன்றிய சாதி மதம் சமயமெனும் இவைகள் இடைக்காலத்தே பல்வகைப் பூசல்கட்கும் காரணமாய் மாறி இந்நாளில் சமுதாயத்தில் ஆழ்ந்த பிளவுகளை யுண்டுபண்ணி வொருமை வாழ்வுக்கு ஊறு செய்வதை நினைந்து, “சாதி மதம் சமயமெனும் சங்கடம்” என்று கூறுகின்றார். இச்சங்கடம், திருநாவுக்கரசர் முதலிய பெருமக்கள் காலத்தே ஓரளவு உருப் பெற்று நின்று, விசய நகர வேந்தர் ஆட்சியிற் பல்லாயிரக் கணக்கிற் பிரிவு பட்டு, பின் தொடர்ந்த ஆட்சிகளில் மேலும் பல்கி உரம் பெற்றுவிட்டது. வடலூர் வள்ளல் காலத்தில் இது தலைதூக்கி நின்றமையின், “சங்கடம் விட்டேறியேன்” என எடுத்து மொழிகின்றார். பலவேறு காலங்களில் பலராற் பல்வகை நெறியிற் எழுதப்பட்டு ஒன்றினொன்று வேறுபட்டும் மாறுபட்டும் கிடத்தலால், படிப்பவர் தெளிவு பெறாது தடுமாற்றம் உறுவது பற்றி, “சாத்திரச் சேறாடுகின்ற சஞ்சலம் விட்டறியேன்” எனக் கூறுகின்றார். “ஓது சமயங்கள் பொருள் உணரும் நூல்கள் ஒன்றொடொன் றொவ்வாமல் உள பலவும் இவற்றுள் யாது சமயம் பொருள் நூல் யாதிங் கென்னில் இதுவாகும் அதுவல்லது எனும் பிணக்கு” (சிவ. சித்தி) என அருணந்தி சிவனார் கூறுவது காண்க. சாத்திரப் பிணக்குகள் கற்றோர் மன அமைதியைக் கெடுப்பதனால், “சஞ்சலம் விட்டறியேன்” என வுரைக்கின்றார். நாடோறும் எய்தும் துன்ப வின்பங்களின் காரண காரியங்களை யறிந்தால் மனநோய் இல்லா தொழிதலின் அவ்வாராய்ச்சியைச் செய்யாமை காட்டற்கு “ஆதியந்த நிலையறியேன்” எனவும், அமைதி நிறைந்த மனநிலையை “அலையறியாக் கடல் போல்” எனவும், அந்நிலையிற் பெறப்படும் இன்பத்தை “ஆனந்தப் பெரும் போகம்” எனவும் இயம்புகின்றார். நீதியே இறைவன் திருவுருவாதலின், நீதி நெறி நின்றாலன்றி அவனை யடைதல் இயலாதென்பதனால், “நீதி நெறி நடந்தறியேன்” என வுரைக்கின்றார். “நீதி பலவும் தன்ன வுருவா மென மிகுத்த தவன்” (வைகா) என ஞானசம்பந்தர் உரைப்பது காண்க. மணிப்பொது - தில்லைத் திருச்சிற்றம்பலம். ஆணும் பெண்ணுமாய் அடியார்க்கு அருளும் முதல்வனாதல் கண்டு, “நீல மேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்று சான்றோர் உரைத்தலின், “ஒருத்தர்” என்றும், அம்பலத்தில் ஆனந்தத் திருக் கூத்தாடும் சிறப்புப் பற்றி, “நிருத்தமிடும் ஒருத்தர்” என்றும் இசைக்கின்றார். மாறுபடும் கருத்துடையார் நிறைந்தது உலகியலாதலால் “ஏதிலர் சார் உலகு” என்றும், ஒத்த கருத்துடன் ஊக்குவார் இல்லாமை விளங்க, “எங்ஙனம் நான் புகுவேன்” என்றும், “யார்க்குரைப்பேன்” என்றும் வருந்துகின்றார்.
நீதி நெறியன்றி ஞான சபையை யடைதற்கு நெறியில்லாமை காட்டியவாறாம். (7)
|