3320. சாகாத கலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்ணீரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றத் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும் அறிந் திலனே.
உரை: சாகாக் கலை, வேகாத கால், போகப் புனல் எனப்படுவனவற்றின் இயல்புகளை யறியேன்; பூதாகாச நிலையையும், மாகாய நிலையையும் அறியேன்; மெய்ம்மை நெறி எனப்படுவதை ஓர் அணுத் துணையும் அறிகிலேன்; சிவன்பால் பேரன்புடைய அருட் செல்வர்கள் போற்றி வழிபடுகின்ற மணிமன்றத்தைச் சென்றடையும் வழியையும் அறியேன்; ஒன்றாகிய உலகின்கண் வாழும் நான் அம்பலத்துள் எவ்வாறு புகுவேன்; எனது மாட்டாமையை யார்க்கு உரைப்பேன்; யாது செய்வேன்; ஒன்றும் தெரிகிலேன். எ.று.
சாகாவுடம்பு பெறும் திறம் “சாகாக் கலை” எனப்படுகிறது. வேகாத கால், தீய்த்துக் கெடுக்காத பிராணனாகிய காற்று. பிராண வாயு நெருப்பின் தன்மையுடையதாயினும் உடற்குள் நின்று நிலவுவாதாகலின், “வேகாத கால்” எனப்படுகிறது. அதனை யடக்கி உடல் முதிர்ந்து வாடிக்கெடாதபடி நிறுத்தும் திறம் “வேகாக் கால்” எனப்படுகிறது. போகாப் புனல் என்பது போகாத தண்ணீர் என்று குறிக்கப்படுகிறது. இது, வேறு உடம்பு படைத்தற்குரிய வித்துக்களைச் சுமந்து நிற்கும் வெண்ணிற நீராதல் பற்றிப் “போகாத தண்ணீர்” எனப் புகன்று உரைக்கப்படுகிறது. இஃது உடம்பினுள் ஊறுவது. வேகாக் காலும் போகாப் புனலும் சாகாக் கலைபெறுதற்கு ஏதுவா மென்பதனால், மூன்றையும் சேரக் கூறுகின்றார். இவற்றின் இயல்புகள் பின்னர் விளக்கப்படும். நில நீர் என வரும் பூதமைந்தனுள் ஒன்றாய்க் கூறுப்படுவது ஆகாயம்; இதனைப் பூதாகாயம் என்பது முண்டு. இப்பூதங்களையும் இவற்றினடியாகத் தோன்றும் தத்துவங்களைத் தன்னுள் அகப்படுத்தித் தத்துவாதீதமாய் நிலவும் பரவொளி, மாகாயம் எனப்படும். உலகியற் பொருள் நெறியும், தத்துவக் கூறுகளை யெண்ணியறியும் அறிவு நெறியும் கடந்து விளங்கும், திருவருள் நெறி மெய்ந்நெறி எனப்படும். அதனைச் சிறிதும் அறியாமை புலப்பட, “ஓர் அணுவளவும் அறியேன்” என உரைக்கின்றார். மாகாதல் - பேரன்பு. சிவத்தின்பால் மெய்யன்பு மிகவுடைய பெரியோர்களை, “மாகாதலுடைய பெருந் திருவாளர்” எனக் குறிக்கின்றார். சிவஞானச் செல்வர்கள் நாளும் வாழ்த்தி வணங்குவது காண்டலின், “பெருந் திருவாளர் வழுத்தும் மணிமன்றம்” என்று புகழ்கின்றார். மணிமன்றம் - தில்லைச் திருச்சிற்றம்பலம். உயிர்கள் வாழ்வாங்கு வாழ்ந்து உய்தி பெறுதற் கென்று ஒன்றாய் அமைந்த உலகமாதலால், “ஏகாயவுலகு” எனவுரைக்கின்றார். ஏகம் என்பது ஈறு குன்றி ஏகு என வந்தது. “ஒன்றாவுலகம்” என்றாற் போல.
ஒன்றாகவுயர்ந்த உலகியற் பிணிப்பினின்றும் நீங்கி மணிமன்றம் புகுவேன் என்பது கருத்து. (8)
|