3322. வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.
உரை: பரம் அபரம் என இரண்டாக வுரைக்கப்படும் மார்க்கம் இரண்டினையுமே அறியாத யான், மரண அச்சத்தைப் போக்குவதாகிய சன்மார்க்கத்தின் இயல்பை அறிந்திலேன்; திரையற்ற கடலையொக்கும் தியானயோக நிலையையும், அதனை யறிவாற் கடையெய்தும் ஆனந்தமாகிய தெளிந்த அமுதம் போன்ற சிவபோகத்தை நுகரும் திறத்தை யறியேன்; சிவமாகிய குற்றத்தைப் போக்கி யறியேன்; இத்தகைய யான் மனமும் மொழியுமாகிய இரண்டிற்கும் அகப்படாத அழகிய தில்லையம்பலத்திலே ஒருமை நடம் புரிகின்ற சிவனது பெருமையை அறிய வல்லனாவனோ? உணவு தேடுவதே நோக்கமாகவுடைய வுலகின்கண் சிக்குண்டிருக்கும் யான் எவ்வாறு ஞான வம்பலத்தினுட் புகுவேன்; எனது அவல நிலையை யாவர்க் குரைப்பேன்; யாது செய்வேன்? ஒன்றும் தெரிகிலேன். எ.று.
சிவஞானம் பெற முயல்வார்க் கென வகுத் தோதப்படும் நெறி, பரம் அபரம் என்ற இருவகையதாகி, பரம் சன்மார்க்க மெனவும், சரியை கிரியையோக மென்ற மூன்றும் அபரம் எனவும் விரிதலால், “வரை யபர மார்க்கமொடு பரமார்க்கம்” என்று பகர்கின்றார். சன்மார்க்க ஞானிகள் சிவ சொரூபானந்தத்தில் தோய்ந்து ஒருவகை யச்சமும் அசைவுமின்றி இன்புறுவராதலின், “மரண பயம் தவிர்த்திடும் சன்மார்க்க மறை யறியேன்” என வுரைக்கின்றார். திருமூலரும், “ஒசியாத வுண்மைச் சொரூபோ தயத்துற்று அசைவான தில்லாமையான சன்மாரக்கமே” (திருமந். 1486) என்பது காண்க. உள்ளம் ஒன்றிய தியான யோக நிலைக்கு அலையில்லாத கடலை உவமம் கூறுபவாதலின், “திரையறு தண்கடலறியேன்” எனக் குறிக்கின்றார். “சொறியினும் தாக்கினும் துண்ணென்றுணராக் குறியறிவாளர்க்குக் கூடலுமாமே” (திருமந்) எனத் திருமூலர் கூறுகின்றார். யோகானந்தம் பெறும் அருட் செல்வரை, “வரை யளந்தறியாத் திதையரும் திருத்தப் பேரானந்தப் புணரி ஓராங்குப் படிதல் உடையோர் (ஞானா. 48) என்பர். தியான யோக இன்பத்தைத் தாம் பெறாமையை” குறித்தற்கு “அக்கடலைக் கடைந்து தெள்ளமுதம் உணவறியேன்” என்று கூறுகிறார். காம மயக்கம் போல அறக்கெடுதல் இல்லாதாகலின், வெகுளியை, “சின மடக்க அறியேன்” என்று செப்புகின்றார். தில்லையம்பலத்துச் சிதாகாச ஞான நடன வின்பம் தத்துவாதீதப் பரவெளியில் நிகழ்வதாகலின், “உரை யுணர்வு கடந்த திருமணி மன்றம்” எனவும், நடனத்தைப் புரியும் பரசிவத்தின் ஒருமைத் தன்மையை நடனத்தின் மேலேற்றி, “ஒருமை நடம்” எனவும் உரைக்கின்றார். ஞான போகம் நுகரப்படும் சிதாகாயக் காட்சியை நினைந்து இன்புறுவார்க்கு உலகியலில் ஊனுடம்பு வளர்க்கும் உணவு உயர்வாகத் தோன்றாதாகலின் “இரையுறு பொய்யுலகு” என இகழ்கின்றார். (10)
|