7. அடியார் பேறு
அஃதாவது சிவனுக்கு அடியராயினார்க்கு அவர் செய்த நலங்களை எடுத்துக் காட்டித் தமக்கும் அது போல் அருள் வேண்டுமென இறைஞ்சுதலாம். இதன்கண், மாபாதகம் புரிந்த வேதியன் தெளிவு பெற்றதும், மதுரைக்கு எல்லை காட்டிய பாம்பு வரம் பெற்றதும் சிறப்பாகக் கூறப்படுகின்றன. பேறு பெறா தொழிதற்குள்ள குற்றங்களில் கரணங்களின் தூய்மையின்மையும், விதி வழி யொழுக மாட்டாமையும், உடம்பின் அருமை தேர்ந்து பயன் கொள மாட்டாமையும், உலகியல் நெறியில் தோய்ந்து அறிவு தேய்வுறுவதும், உலகில் வாழ்வார்க்குத் திருவருட் குறிப்பின் இன்றியமையாமையும், அருள் ஞானப் பேறும் பிறவும் கூறப்படுகின்றன. எல்லாம் சிவன் செயல், எங்கும் சிவமயம் என நிலவும் பொருளுரைகளின் பொருண்மை நயம் இறுதிப்பாட்டில் காட்டப்படுகிறது.
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம் 3323. அடியார் வருத்தம் தனைக்கண்டு தரியார்
இன்பம் அளித்திடுவார்
வடியாக் கருணைப் பெருங்கடலார் என்ற
பெரியர் வார்த்தைஎலாம்
நெடியார்க் கரியாய் கொடியேன்என் ஒருவன்
தனையும் நீக்கியதோ
கடியாக் கொடுமா பாதகன்முன் கண்ட
பரிசுங் கண்டிலனே.
உரை: திருமாலும் அறிதற்கரிய பெருமானே, தனக்கு அடியவராயினார்க்கு எய்திய துன்பங்களைக் கண்டு பொறுக்காமல் உடனே போக்கி இன்பங்களை நல்குபவர் குறையாத அருட்குக் கடல் போன்றவாராகிய சிவபெருமான் என்று பெரியோர்கள் கூறுகின்ற புகழ்களெல்லாம் கொடியவனாகிய என்னொருவனை மாத்திரம் விலக்கி நிற்பனவோ? கொடும் பாவத்தை நீக்காமற் செய்த மாபாதகனாகிய வேதியற் கருளிய நலம் தானும் பெற்றிலேன். எ.று.
அடியார் - சிவனடியே சிந்திக்கும் செம்மை மனமும், சிவத்தொண்டு புரியும் செயலும் உடையவர். தன் திருவடியை அன்பால் நினைந்துருகும் பெருமக்களிடத்து மிக்க பேரன்பு செய்பவராதலின், “அடியார் வருத்தம் தனைக் கண்டு தரியார்” என்றும், வருத்தம் கண்டு வருந்துவதோடு நில்லாமல், வருத்தத்தைப் போக்கி இன்பமாவனவற்றை நல்குவார் என்றற்குச் சிவபெருமானை, “இன்பம் அளித்திடுவார்” என்றும் இயம்புகின்றார். வடியாக் கருணைக் கடல் - குறையாத கருணையாகிய கடல்.கடல் போன்றவரென்பார், “கடலார்” என்கின்றார். வார்த்தை - சொல்; ஈண்டுப் புகழ் மேல் நின்றது. நெடியார் - திருமால், நெடிதுயர்ந்து மூவுலகும் அளந்த மெய்ம்புடைமை பற்றித் திருமாலை, நெடியோன் எனவும், நீண்டவன் எனவும், நெடுமால் எனவும் அறிந்தோர் புகழ்வர். ஒருவன் வாளா ஒருமை குறித்து நிற்பது. கடியாக் கொடு மாபாதகன், அறவே விலக்குதற் குரிய பாதகங்களை விலக்காது செய்தமை பற்றி, “கடியாக் கொடு மாபாதகன்” என்றும், அவனையும் வெறுத் தொழிக்காமல் சிவபெருமான் அவற்கு அறிவின் கண் தெளிவுண்டாகச் செய்தானெனப் புராணம் (திருவிளையாடல்) கூறுதலால், “மாபாதகன் முன் கண்ட பரிசு” என்றும் கூறுகின்றார்.
இதனால், மாபாதகன் பெற்ற அறிவுத் தெளிவு தமக்கு முண்டாக வேண்டுமென விண்ணப்பித்தவாறாம். (1)
|