3324.

     பையார் பாம்பு கொடியதெனப் பகர்வார்
          அதற்கும் பரிந்துமுன்னாள்
     ஐயாகருணை அளித்தனைஎன் அளவில்
          இன்னும் அளித்திலையே
     மையார் மிடற்றோய் ஆனந்த மன்றில்
          நடிப்போய் வல்வினையேன்
     நையா நின்றேன் ஐயோநான் பாம்பிற்
          கொடியன் ஆனேனே.

உரை:

     விடக்கறை படிந்த கழுத்தையுடைய பெருமானே, இன்பத் தில்லையம்பலத்தில் நடிப்பவனே, படமுடைய பாம்பு கொடுமை யுடைய தென்று யாரும் சொல்லுவாராயினும், அதற்கும், ஐயனே, அன்புற்று மதுரை நகர்க்கு எல்லை வகுத்த அந்த நாளில் அருள் புரிந்தாய்; அத்தகைய நீ இன்னும் எனக்கு அருள் செய்கின்றாயில்லை; வலிய வினை சூழ்ந்த யான் வருந்தி மெலிகின்றேன்; ஐயோ, நான் பாம்பினும் கொடியவனாய் விட்டேன்; என்செய்வேன். எ.று.

     பை - பாம்பின் படம். பாம்பு கடிக்கப் பட்டவர் உடனே இறப்பது பற்றி, உலகவர் பாம்பு கொடியதென வுரைத்தலால், “பாம்பு கொடிய தெனப் பகர்வர்” என்று கூறுகின்றார். கையிற் கங்கணமாக இருந்த பாம்பை மதுரைக்கு எல்லை வகுக்க எனச் சிவபிரான் விடுத்த போது தனது பெயர் நிலைபெற அருளுக என வேண்டிற்றாக, மதுரைக்கு ஆலவாய் எனப் பெயருண்டாயிற்றெனப் புராணம் கூறுதலால், “பரிந்து முன்னாள் கருணையளித்தனை” என இயம்புகின்றார். பாம்பின் பாற் கொண்டது போல் தனக்கும் அருளல் வேண்டுமென விண்ணப்பிப்பது கருத்தாதலின், “என்னளவில் இன்னும் அளித்திலை” என வுரைக்கின்றார். மை - கடல் விட முண்டதனால் உளதாகிய கறை. தில்லையம்பலத்தில் ஆனந்தத் தாண்டவம் புரிவது பற்றி, “ஆனந்த மன்றில் நடிப்போய்” என்று போற்றுகின்றார். திருவருள் பெறாமைக்கு தமது வினை காரணமென நினைந்து வருந்துவது புலப்பட, “வல்வினையேன் நையா நின்றேன்” எனவும், பாம்பினும் தனது கொடுமை மிக்க தென்றற்குப் “பாம்பிற் கொடியனானேனே” எனவும் வருந்துகின்றார்.

     இதனால், தமது வினைக் கொடுமை பாம்பினும் மிக்கதென விளம்பியவாறாம்.

     (2)