3325.

     பீழை புரிவான் வருந்துகின்ற பேய்க்கும்
          கருணை பெரிதளிப்பான்
     ஊழைஅகற்றும் பெருங்கருணை உடையான்
          என்பார் உனைஐயோ
     மோழை மனத்தால் குரங்கெறிந்த விளங்கா
          யாகி மொத்துண்ணும்
     ஏழை அடியேன் வருத்தங்கண் டிருத்தல்
          அழகோ எங்கோவே.

உரை:

     துன்பம் செய்தற்கு முயன்று வருந்தும் பேய்கட்கும் அருள் மிகச் செய்பவனும், ஊழ்வினையைத் தொடர் பறுக்கும் பெரிய கருணையுடையவனுமாவன் சிவபிரான் எனப் பெரியோர் உன்னைப் புகழ்ந்துரைப்பர்; குழையும் தன்மையமைந்த மனமுடைமையால் காய் வேண்டிக் குரங்குகளால் கல்லெறிந்து தாக்கப்பட்ட விளாமரம் போல் அடிப்பட்டு வருந்தும் ஏழை அடியவனாகிய என்னுடைய வருத்தங்கண்டு வாளா இருத்தல் உனக்கு அழகாகாது. எ.று.

     பீழை - துன்பம். “அறிவிலார் தாம் தம்மைப் பிழிக்கும் பீழை” (குறள்) எனப் பெரியோர் வழங்குவ தறிக. பேய்க் கோட்பட்டவர் நன்னினைவும் நற்செயலுமின்றித் துன்புறுதலால், “பீழை புரிவான் வருந்துகின்ற பேய்” எனக் கூறுகின்றார். செய்வினை யூழ்த்த பயனைச் செய்தவனே நுகர்விக்கும் பிரானாதலின், ஊட்டாது விலக்கும் பெருமையுடைமை பற்றி, “ஊழையகற்றும் பெருங்கருணை யுடையான்” எனப் புகல்கின்றார். “இருள்சேர் இருவினையும் சேரா” (குறள்) என்பதனால் இவ்வுண்மை தெளியப்படும். மோழை - அறிவாற் கூர்மை யுறாது குழைந்து வீழும் தன்மை; இது மோழைமை எனவும் வழங்கும். “முன்பு சொன்ன மோழைமையால் முட்டை மனத்தீர்” (எதிர் கொள்) என நம்பியாரூரர் உரைப்பது காண்க. காய் வேண்டிப் பிறர் கல்லெறியக் கண்டு கிடக்கும் கற்களை யெடுத்து கண்டபடி எறிந்து விளாமரத்தைத் தாக்கி வருத்துவது குரங்கின் இயல்பாதலால், “குரங்கு எறிந்த விளங்காயாகி” எனக் கூறுகின்றார். குரங்கெறிந்த கல் காய் மேலும் கிளைகள் தழைகள் முதலியவற்றின் மேலும் தாக்கி மரத்தைப் புண்படுத்துவது போல மோழை மனத்தால் புண்ணுற்றேன் என்பார், “மோழை மனத்தால் மொத்துண்ணும் ஏழையடியேன்” என இயம்புகின்றார். மொத்துண்டல். அடிபட்டுப் புண்படுதல். “அக்கோவால் மொத்துண்டு புண் சுமந்த மேனி பாடுதுங்காண் அம்மானாய்” (அம்மானை) என மணிவாசகர் உரைப்பதறிக.

     இதனால், தெளிவில்லாத மனநினைவுகளால் எய்தும் துன்ப மிகுதி விளம்பியவாறாம்.

     (3)